இந்திய ரயில்வேயில் முக்கிய ரயில் நிலையங்களில் QR குறியீடு மூலம் ரயில் டிக்கெட் எடுக்கும் வசதி தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பயணிகள் டிக்கெட் கவுண்டர்களில் நீண்ட வரிசையில் காத்திருப்பதைத் தவிர்க்கலாம்.
இந்திய ரயில்வேயில் பயணம் செய்வது இப்போது இன்னும் எளிதாகிவிட்டது. டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் QR குறியீடு மூலம் டிக்கெட் புக் செய்யும் வசதி பல ரயில் நிலையங்களில் அறிமுகமாகியுள்ளது.
முதல் கட்டமாக வடகிழக்கு எல்லை ரயில்வே அதன் ஐந்து பிரிவுகளில் 588 QR கோடு முன்பதிவு கவுன்டர்களை பொருத்தியுள்ளது. வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் மேற்கு வங்கத்தின் 7 மாவட்டங்கள் மற்றும் வடக்கு பீகாரின் 5 மாவட்டங்களில் இந்த முன்பதிவு கவுன்டர்கள் உள்ளன.
மொத்தம் உள்ள 588 டிஜிட்டல் முன்பதிவு கவுன்டர்களில், கதிஹாரில் அதிகபட்சமாக 167 கவுன்டர்கள் உள்ளன. அலிபுர்துவாரில் 96, ரங்கியாவில் 87, லும்டிங்கில் 175 மற்றும் டின்சுகியாவில் 63 முன்பதிவு கவுன்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன.
வடகிழக்கு எல்லை ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி (CPRO) கபிஞ்சல் கிஷோர் சர்மா கூறுகையில், “ரயில்வேயின் இந்த நடவடிக்கை, வடகிழக்கு எல்லை ரயில்வே நெட்வொர்க்கிற்குள் உள்ள அனைத்து முக்கிய ரயில்வே ஸ்டேஷன்களிலும் எந்தவித இடையூறும் இல்லாமல் டிஜிட்டல் பேமெண்ட் முறையில் டிக்கெட் எடுக்கும் வசதியை உறுதி செய்கிறது” என்றார்.
முன்பதிவு கவுன்டர்களில் க்யூஆர் குறியீடு முறை அறிமுகம் செய்யப்படுவதால், பண்டிகைக் காலங்களில் முன்பதிவுக்காக கூட்ட நெரிசல் ஏற்படாமல் எளிதாக டிக்கெட் பெற முடியும் என ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவிக்கிறார்.