தமிழகத்தின் பல நகரங்களிலும் ரயில் நிலையம், பேருந்து நிலையம் உள்ளிட்ட பல பகுதிகளிலும் பெண் ஆட்டோ ஓட்டுநர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. பெண் ஆட்டோ ஓட்டுநர்களை கௌரவிக்கும் விதமாகவும் பிங்க் ஆட்டோ வழங்கும் திட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது. இதற்கான முறையான அறிவிப்பை சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவித்து இருந்தார்.
இந்த அறிவிப்பை செயல்படுத்தும் நோக்கில் சமூக நலத்துறை தீவிரம் காட்டி வருகிறது. குறிப்பாக இந்த திட்டத்தில் கணவனை இழந்த பெண்கள், சமூகத்தில் தனியாக வாழும் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு அவர்களின் பொருளாதாரம், வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மகளிருக்கான இத்திட்டத்தை செயல்படுத்தும் வகையில் நிதி ஒப்புதல் கோரி சமூக நலத்துறை சார்பில் தமிழக அரசுக்கு கருத்துரு வழங்கப்பட்டது. அதன்படி பயனாளிகளின் எண்ணிக்கையை 200ல் இருந்து 250 ஆக உயர்த்தவும் சமூக நலத்துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக ஆதரவற்ற கைம்பெண்கள் மற்றும் ஆரவற்ற மகளிர் நல வாரியம் மூலமாக பிங்க் ஆட்டோ திட்டத்திற்கான பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சென்னை மாநகரில் பெண்களுக்கான சுயதொழில் உருவாக்கும் விதமாக 250 பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ரூ.1 லட்சம் வங்கிக் கடன் மானியமாக வழங்குவதாக” தெரிவிக்கப்பட்டு உள்ளது. தலைநகர் சென்னையில் தொடங்கப்படும் இத்திட்டம் படிப்படியாக தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை: சென்னை மாவட்ட சமூக நலத்துறை அலுவரை அணுகும் பட்சத்தில் பயனாளர்களுக்கான வழிகாட்டுதல்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகுதி
விண்ணப்பதாரர்கள் 25 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்களாகவும், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களாகவும் இருக்க வேண்டும். மேலும் கட்டாயம் ஓட்டுநர் உரிமம் பெற்றவராகவும், ஆதரவற்ற, கைம்பெண்கள் நல வாரியத்தில் உறுப்பினராக இருத்தல் வேண்டும் என தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது.