இந்தியா சார்பாக இளம் வீராங்கனை மனு பாக்கர் 10மீ ஏர் பிஸ்டர் துப்பாக்கிச் சுடுதலில் வெண்கலம் வென்று சாதனை படைத்தார். இந்த நிலையில் மீண்டும் 10மீ ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் மனு பாக்கர் – சரப்ஜோத் சிங் கூட்டணி களமிறங்கியது. நேற்றைய தகுதிச்சுற்றில் 3வது இடத்தில் நிறைவு செய்த இந்தக் கூட்டணி, வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் விளையாடத் தகுதி பெற்றது. இந்நிலையில் தென்கொரிய அணியை எதிர்த்து விளையாடிய இந்திய அணி 16 புள்ளிகளைப் பெற்று வெண்கலப் பதக்கத்தை வென்றிருக்கிறது.
இந்தியா சார்பில் மனு பாக்கர் 10 மீ ஏர் பிஸ்டல் தனிநபர் பிரிவில் மனு பாக்கர் வெண்கலம் வென்றிருந்தார். இப்போது மீண்டும் வெண்கலம் கிடைத்திருக்கிறது. மனு பாக்கருக்கு இரண்டாவது பதக்கம் இது. கடந்த 124 ஆண்டுகளில் ஒரே ஒலிம்பிக்ஸில் இந்தியாவுக்காக இரண்டு பதக்கங்களை வென்ற முதல் நபர் எனும் பெருமையை அவர் பெற்றிருக்கிறார். பலரும் மனு பாக்கருக்கும் அவரது பயிற்சியாளருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் மனு பாக்கரின் பயிற்சியாளர் ஜஸ்பர் ராணா பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார். “2020-ம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் தோல்வியைச் சந்தித்தபோது எல்லோரும் என்னைத் திட்டினார்கள். ஆனால் இன்று எல்லோரும் என்னிடம் பேட்டி எடுக்க விரும்புகிறார்கள். டோக்கியோ ஒலிம்பிக்கிற்குப் பிறகு மனு பாக்கர் மீண்டும் நான் அவருக்குப் பயிற்சி கொடுக்க வேண்டும் என்று கூறினார்.
அதனால்தான் அவருக்குப் பயிற்சி அளித்தேன். கடந்த மூன்று வருடங்களாக இந்தியத் தேசிய ரைபிள் அசோசியேஷன் உட்பட வேறு எந்த ஏஜென்சியிலிருந்தும் எனக்கு மாதச் சம்பளம் தரவில்லை. மனு பாக்கருக்குப் பயிற்சி மட்டுமே அளித்துக்கொண்டிருந்தேன். மூன்று வருடங்களாக வேலையின்றி இருக்கிறேன். எனக்கு மிகவும் கடினமாக இருந்தது. இந்தியாவிற்குத் திரும்பிய பிறகு நான் வேலை தேட வேண்டும்” என்று வருத்தத்துடன் பேசியிருக்கிறார்.
நன்றி vikatan