neet
NEET PG 2024 : வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதி முதுகலை நீட் தேர்வு தேசிய அளவில் நடைபெறவுள்ள நிலையில், தேர்வின் வினாத்தாள் கசிந்ததாக எக்ஸ் தளத்தில் Screenshot-கள் பகிரப்படுவதால் தேர்வர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

NEET PG 2024 : எம்.டி, எம்.எஸ் ஆகிய முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு (NEET PG 2024) ஒத்திவைக்கப்பட்டு ஆகஸ்ட் 11ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், டெலிகிராம் மற்றும் வாட்ஸ்அப் ஆகிய சமூக வலைத்தளம் மூலம் நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததாக Screenshot-கள் எக்ஸ் தளத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

எம்.டி, எம்.எஸ் ஆகிய முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு தேசிய மருத்துவக் கல்வி தேர்வு வாரியத்தினால் நடத்தப்படுகிறது. இந்தாண்டுக்கான முதுகலை நீட் தேர்வு ஜூன் 23ஆம் தேதி நடைபெறவிருந்தது. இளநிலை நீட் தேர்வு வினாத்தாள் கசிவு, யுஜிசி நெட் தேர்வு வினாத்தாள் கசிவு ஆகியவற்றினால் நாடு தழுவிய போராட்டங்கள் நடைபெற்றது. இதன் காரணமாக தேசிய அளவில் நடத்தப்படும் தேர்வுகள் மீது மாணவர்களுக்கு நம்பிக்கையின்மை ஏற்பட்டது.

ஒத்திவைக்கப்பட்ட முதுகலை நீட் தேர்வு :
இதனிடையே, முதுகலை நீட் தேர்வு நடைபெறுவதற்கு 12 மணி நேரத்திற்கும் குறைவான கால அளவில் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்தது. தேர்வு நடைமுறையை சரிபார்க்க வேண்டும் என தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

புதிய தேர்வு அறிவிப்பு :
ஜூன் 22ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்ட தேர்விற்கு புதிய தேதி ஜூலை 5ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி, ஆகஸ்ட் 11ஆம் தேதி் இரண்டு Shift முறையில் தேர்வு நடைபெறும் என தேசிய மருத்துவக் கல்வி தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

வேறு மாநிலத்தில் தேர்வு மையம் :
இந்நிலையில் தேர்விற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தேர்வர்களுக்கு தேர்வு மையங்கள் வேறு மாநிலங்களில் ஒதுக்கப்பட்டு இருந்தது. சுமார் 1000 கிலோ மீட்டர்கள் தாண்டி சென்று தேர்வெழுத வேண்டிய நிலைக்கு தேர்வர்கள் உள்ளாக்கப்பட்டனர். இதனையடுத்து மாநிலங்களவை திமுக எம்.பி.வில்சன் டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டாவை சந்தித்து இதுகுறித்து கோரிக்கையை விடுத்தனர்

அதில், தேர்வு மையங்கள் சுமார் 1000 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளதால் தேர்வர்கள் சிரமத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். எனவே, தேர்வு மையங்களை தேர்வர்களின் மாவட்டங்களுக்குள் அல்லது குறைந்தபட்சம் அந்தந்த மாநிலங்கள் உள்ளேயே மறு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில், தமிழக மருத்துவர்கள் முதுகலை நீட் தேர்வை தமிழகத்திற்குள்ளேயே எழுதும் படி தேர்வு மையங்கள் மாற்றியமைக்கப்பட்டது.

முதுகலை நீட் தேர்வு வினாத்தாள் கசிவு :
இத்தனை சர்ச்சைகளுக்கு இடையே ஆகஸ்ட் 11ஆம் தேதி நடைபெறவிருந்த நீட் தேர்வின் வினாத்தாள் டெலிகிராம் மற்றும் வாட்ஸ்அப் குரூப்-களில் கசிந்ததாக எக்ஸ் தளத்தில் வைரலாக பரவி வருகிறது. வினாத்தாள்கள் சுமார் 70,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டதாக பகிரப்பட்ட படங்களின் உள்ள உரையாடல்கள் கொண்டு குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. NEET PG Leaked Materials என்ற பெயரில் வினாத்தாள் கசிவு தேசிய அளவில் ட்ரெண்டாகி வருகிறது. ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் நடைபெறவிருக்கும் இத்தேர்வின் வினாத்தாள் கசிவு குறித்த இந்த குற்றச்சாட்டு தேர்வர்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நன்றி samayam
 
 
 
 
 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *