சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரும், 2024 ஐபிஎல் தொடரில் பவுலிங் ஆலோசகருமான டிவைன் பிராவோ, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராக இணைந்து இருக்கிறார். இந்த தகவல் சிஎஸ்கே ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
2024 கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் ஆடி வந்த டிவைன் பிராவோ இன்று அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற இருப்பதாக அறிவித்து இருந்தார். அதைத் தொடர்ந்து அவர் இனி பயிற்சியாளராக பல்வேறு டி20 லீக் அணிகளுடன் பணி புரிவார் என கூறப்பட்டது. குறிப்பாக சிஎஸ்கே அணியின் பவுலிங் ஆலோசகராக தொடர்ந்து பணி புரிவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், பல ஆண்டுகளாக சிஎஸ்கே உடன்பிறப்பாக இருந்த டிவைன் பிராவோ அதிரடியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முகாமுக்கு தாவி இருக்கிறார். அதன் பின்னணி என்ன? யார் அவரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு கொண்டு சென்றது? என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. அவர் கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்காக பல ஆண்டுகளாக விளையாடி வந்தார். அது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளர்களால் நடத்தப்படும் அணி ஆகும். அந்த அணிக்காக இதுவரை மூன்று முறை கோப்பை வென்று இருக்கிறார் டிவைன் பிராவோ. அவர் ஓய்வு பெற இருக்கும் தகவலை அறிந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி வெங்கி மைசூர் பிராவோ உடன் பேச்சுவார்த்தை நடத்தி இருந்தார்.
அதன் முடிவில் பிராவோ கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராக இணைய ஒப்புக் கொண்டார். முன்னதாக 2024 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு கோப்பை வென்று கொடுத்த ஆலோசகர் கவுதம் கம்பீர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். அதனால், காலியாக இருந்த ஆலோசகர் பதவிக்கு அனுபவம் வாய்ந்த ஒருவரை கொல்கத்தா அணி தேடி வந்தது.
நன்றி mykhel