India vs Bangladesh Live Score, 1st T20I: இந்திய மண்ணில் சுற்றுப்பயணம் செய்து வரும் வங்கதேச கிரிக்கெட் அணி 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் இந்தியாவிடம் 2-0 என்கிற கணக்கில் டெஸ்ட் தொடரை பறிகொடுத்த வங்கதேசம், அடுத்ததாக டி20 தொடரில் மோதவுள்ளது.
இந்நிலையில், இந்தியா – வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி மத்திய பிரதேசம் மாநிலம் குவாலியரில் உள்ள நியூ மாதவராவ் சிந்தியா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், பந்துவீச்சு தேர்வு செய்தார். இதையடுத்து வங்கதேசம் அணி முதலில் பேட்டிங் செய்தது. வங்கதேசம் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக லிட்டன் தாஸ் 4 ரன்னிலும் மற்றும் பர்வேஸ் ஹுசைன் 8 ரன்னிலும் தங்கள் விக்கெட்டுகளை அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சில் பறிகொடுத்தனர்.
அடுத்து, வங்கதேசம் அணி கேப்டன் நஜ்முல் ஹுசைன் 27 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளைப் பறிகொடுத்ததால், வங்கதேசம் 19.5 ஓவர்களில் 127 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. வங்கதேசம் அணியில் மெஹ்தி ஹசன் மட்டும் 35 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இந்திய அணியில், ஹர்ஷ்திப் சிங், வருண் சக்ரவர்த்தி தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதையடுத்து, 128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா களமிறங்கினர். அபிஷேக் சர்மா 16 ரன்கள் எடுத்திருந்தபோது, டோவிட் ஹிரிதோய்யால் ரன் அவுட் செய்யப்பட்டார். அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் அதிரடியாக விளையாடி 3 சிக்சர் 2 ஃபோர் உள்பட 29 ரன்கள் முஸ்தாஃபிஜுர் ரஹ்மான் பந்தில் ஜேக்கர் அலியிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து நிதிஷ்குமார் ரெட்டி பேட்டிங் செய்ய வந்தார்.
மறுமுனையில் சஞ்சு சாம்சன் 19 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து மெஹிதி ஹசன் மிராஜ் பந்தில் ரிஷத் ஹொஸைன் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இதையடுத்து, ஹர்திக் பாண்டியா பேட்டிங் செய்ய வந்தார். நிதிஷ்குமார் ரெட்டி – ஹர்திக் பாண்டியா ஜோடி அதிரடியாக விளையாடி இந்திய அணியை வேகமாக வெற்றி இலக்கை நோக்கி அழைத்துச் சென்றது. இறுதியில், இந்திய அணி 11.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்தது. இதன் மூலம், இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
நன்றி indianexpress