உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற இளம் வீரர் குகேஷ், பட்டத்துடன் நாடு திரும்பிய நிலையில், இவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற தமிழக வீரர் குகேஷுக்கு, முதல்வர் ஸ்டாலின், ரூ. 5 கோடி பரிசுத்தொகை அறிவித்துள்ள நிலையில்,  சாம்பியன் பட்டத்துடன் குகேஷ் நாடு திரும்பியுள்ளார்.

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடைபெற்றது. இதில் பங்கேற்றிருந்த தமிழக வீரர், இந்திய கிராண்ட் மாஸ்டர் குகேஷ், இறுதிப்போட்டியில், நடப்பு சாம்பியனான சீனாவைச் சேர்ந்த டிங் லிரெனை வீழ்த்தி, சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இதன் மூலம் இளம் வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்றவர் என்ற பெருமையை குகேஷ் பெற்றார்.

முன்னதாக, ரஷ்யாவைச் சேர்ந்த கேரி கேஸ்ப்ரோ 22 வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்றதே சாதனையாக இருந்து வந்த நிலையில், தற்போது குகேஷ் இந்த சாதனையை முறியடித்துள்ளார். அதேபோல் விஸ்வநாதன் ஆனந்துக்கு பிறகு உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற இரண்டாவது தமிழக வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். இந்த வெற்றிக்காக, பல்வேறு தரப்பினரும் குகேஷுக்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற, குகேஷ்க்கு, பரிசாக ரூ20.8 கோடி பரிசுத்தொகை வழங்கப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசு சார்பில் ரூ. 5 கோடி பரிசுத் தொகையாக வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளபக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனிடையே சர்வதேச செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இளம் வீரர் என்ற சாதனையை படைத்த குகேஷ் பட்டத்துடன் இந்தியா திரும்பியுள்ளார்.

இந்தியா வந்த அவர், செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும்போது, கோப்பையை வீட்டிற்கு கொண்டு வந்ததில் மகிழ்ச்சி. அனைவரும் அளித்த ஆதரவு எனக்கு புத்துணர்ச்சியை அளித்தது என்று குகேஷ் தெரிவித்துள்ளார். முன்னதாக விமான நிலையத்தில் இறங்கிய குகேஷ்க்கு ரசிகர்கள் சார்பில் மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த வரவேற்பின் மூலம் செஸ் போட்டி எவ்வளவு பிரபலமாக உள்ளது என்பது தெரிகிறது என குகேஷ் கூறியுள்ளார்

Nandri indianexpress

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *