பஷர் அல்-அசத் சிரியாவில் ஏறக்குறைய பத்தாண்டுகளாக ஆட்சியில் நீடித்ததற்கு முக்கிய காரணம், ரஷ்ய ராணுவ பலத்தின் ஆதரவு.

ஆனால், கடந்த இரு தினங்களில் பல அசாதாரண நிகழ்வுகள் அரங்கேறியுள்ளன.

டமாஸ்கஸ் கிளர்ச்சியாளர்கள் வசம் வந்துவிட்டது. சிரியாவில் பஷர் அல்-அசத்தின் ஆட்சி கவிழ்ந்தது. அசத் நாட்டை விட்டு வெளியேறி ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் தஞ்சமடைந்ததாக செய்திகள் கூறுகின்றன.

மனிதாபிமான அடிப்படையில், அசத் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ரஷ்யா புகலிடம் அளித்துள்ளதாக, ரஷ்ய அரசு வட்டாரங்களை மேற்கோள் காட்டி ரஷ்ய ஊடகங்களும் அரசு தொலைக்காட்சியும் தெரிவித்துள்ளன.

ஒரு சில நாட்களில் எல்லாம் மாறியது. ரஷ்யாவின் சிரியா தொடர்பான திட்டங்கள் குலைந்தன. சிரியாவின் வீழ்ச்சியை ரஷ்யா தடுக்க தவறிவிட்டது.

ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “சிரியாவில் நிகழும் அனைத்து நிகழ்வுகளையும் கவனத்துடன் கண்காணித்து வருகிறோம்,” என்று கூறியுள்ளது.

ரஷ்யாவிற்கு பின்னடைவு

அசத்தின் வீழ்ச்சி ரஷ்யாவின் கெளரவத்திற்கு விழுந்த பெரிய அடி.

கடந்த 2015ம் ஆண்டு அசத்துக்கு உதவ ரஷ்யா ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்களை அனுப்பியது. இதன் மூலம், ரஷ்யா தன்னை ஒரு உலகளாவிய வல்லரசாகக் காட்டிக் கொள்வதை முக்கிய நோக்கமாகக் கொண்டிருந்தது.

சோவியத் சகாப்தத்திற்குப் பிறகு, மேற்கத்திய நாடுகளின் அதிகாரம் மற்றும் ஆதிக்கத்திற்கு சவால் விடுக்கும் வகையில், விளாடிமிர் புதின் மேற்கொண்ட முதல் பெரிய முயற்சி இது. மேலும், அவரின் இந்த முயற்சிக்கு பலன் கிடைத்ததாகவே தோன்றியது.

கடந்த 2017 ஆம் ஆண்டில், அதிபர் புதின் சிரியாவில் உள்ள ஹெமிமிம் விமானத் தளத்திற்கு சென்று, அதன் நோக்கம் வெற்றி பெற்றதாகக் கூறினார்.

அந்த சமயத்தில் , ரஷ்யா மேற்கொண்ட வான்வழித் தாக்குதல்களில் பொதுமக்கள் கொல்லப்பட்டது பற்றிய தொடர்ச்சியான செய்திகள் இருந்தபோதிலும், ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தனது ராணுவ நடவடிக்கையைக் காட்ட வெளிநாட்டு ஊடகங்களை சிரியாவுக்கு அழைத்துச் சென்றது.

அத்தகைய ஒரு பயணத்தின் போது, சிரியாவில் ரஷ்யா “நீண்ட காலத்திற்கு” தங்கப் போகிறது என்று அதிகாரி ஒருவர் என்னிடம் கூறினார்.

சிரியா விவகாரத்தை ரஷ்யா கெளரவமாக மட்டும் பார்க்கவில்லை. அதனை தாண்டியும் இருநாடுகளுக்கு இடையே ஆழமான உறவு இருந்தது.

ரஷ்யாவின் ராணுவ உதவிக்கு ஈடாக, சிரிய அதிகாரிகள் ரஷ்யாவுக்கு ஹெமிமிம் விமானத் தளத்தையும் டார்டஸில் உள்ள கடற்படைத் தளத்தையும் 49 ஆண்டு குத்தகைக்கு வழங்கினர்.

இதன்மூலம் மத்திய தரைக்கடல் பகுதியில் ரஷ்யா தனது நிலைகளை நிறுவியிருந்தது. ராணுவத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிபவர்களை ஆப்ரிக்காவிற்கு உள்ளேயும் வெளியேயும் மாற்றுவதற்கான முக்கிய மையங்களாக இந்த தளங்கள் மாறின.

தற்போது உள்ள இந்த சூழலில் ரஷ்யாவுக்கு முன் நிற்கும் முக்கிய கேள்வி: சிரியாவில் இருக்கும் அந்த ரஷ்ய தளங்கள் என்னவாகும்?

அசத் மாஸ்கோவிற்கு வந்துவிட்டதாகக் கூறப்படும் ரஷ்ய அறிக்கையில், சிரியாவில் உள்ள கிளர்ச்சிப் படைகளின் பிரதிநிதிகளுடன் ரஷ்யா தொடர்பில் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிரிய பிராந்தியத்தில் உள்ள ரஷ்ய ராணுவத் தளங்கள் மற்றும் தூதரகப் பணிகளின் பாதுகாப்புக்கு கிளர்ச்சிப் படைகள் உத்தரவாதம் அளித்துள்ளதாக, ரஷ்ய அரசு தொலைக்காட்சி தொகுப்பாளர் கூறியுள்ளார்.

சிரியாவில் உள்ள அதன் தளங்கள் தற்போது “அதி உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக” வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

“தற்போது அவற்றுக்கு எந்தவிதமான அச்சுறுத்தலும் இல்லை” என்றும் அது கூறியுள்ளது.

சிரியாவை காட்டிலும் ரஷ்யாவின் சொந்த நலன் முக்கியம்

பஷார் அல்-அசாத் சிரியாவில் ரஷ்யாவின் மிகப்பெரிய ஆதரவாளராக இருந்தார். ரஷ்யா அவர் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தது.

ரஷ்யாவில் உள்ள அதிகாரிகள் அசாத் வீழ்த்தப்பட்டதை பற்றி எப்படி வேண்டுமானால் கருத்து தெரிவிக்க முடியும், ஆனால் உண்மையில் இது ரஷ்ய வெளியுறவுக் கொள்கை மீது விழுந்த அடி என்பதை மறுக்க முடியாது.

ஆனாலும் இந்த சூழலை பெரிய அடியில்லை என்பது போல் சமாளிக்க அதிகாரிகள் தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர். அவர்கள் பழிசுமத்த ஒரு பலிகடாவைத் தேடி வருகின்றனர்.

ஞாயிற்றுக்கிழமை இரவு, ரஷ்ய அரசு தொலைக்காட்சி தனது வாராந்திர நிகழ்ச்சியில் சிரிய ராணுவத்தை குறிப்பிட்டு, கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக போராடவில்லை என்று குற்றம் சாட்டியது.

தொகுப்பாளர் யெவ்கேனி கிஸெலேவ்,சிரிய அதிகாரிகளின் நிலைமை தொடர்ந்து மோசம் அடைந்து வருவதை அனைவராலும் பார்க்க முடியும் என்று கூறினார்.

“அலெப்போவில் போர்க்களம் எந்த வித எதிர் தாக்குதலும் மோதலும் இல்லாமல் கைவிடப்பட்டது. பல வலுவான ராணுவத் தளங்கள் சரணடைந்தன. அரசாங்கப் படைகளிடம் சிறந்த ஆயுதங்கள் இருந்தபோதும் இப்படி நடந்ததுவிட்டது. சிரியாவிடம் இருந்த ஆயுதங்களின் எண்ணிக்கை தாக்குதல் நடத்தியவர்களை விட பல மடங்கு அதிகமாக இருந்தது. இந்த வீழ்ச்சி புரியாத மர்மம்” என்று தொலைக்காட்சி தொகுப்பாளர் யெவ்கேனி கிஸெலேவ் கூறினார்.

“சிரியாவில் இரு தரப்பினருக்கும் இடையே நல்லிணக்கம் ஏற்பட வேண்டும் என்று ரஷ்யா எதிர்பார்த்தது” என்று தொகுப்பாளர் கூறினார்.

“நிச்சயமாக சிரியாவில் என்ன நடக்கிறது என்பதில் ரஷ்யா அலட்சியமாக இல்லை. ஆனால் ரஷ்யா தன்னுடைய சொந்த பாதுகாப்புக்குத் தான் முன்னுரிமை அளிக்கிறது. யுக்ரேனில் நடைபெற்று வரும் ரஷ்யாவின் சிறப்பு ராணுவ நடவடிக்கைக்கு தான் நாம் கவனம் செலுத்த வேண்டும்”என்று கூறினார்.

இது ரஷ்ய மக்களுக்கு ஒரு தெளிவான செய்தி.

பஷார் அல்-அசாத்தை ஒன்பது ஆண்டுகள் ஆட்சியில் வைத்திருக்க ரஷ்யா வளங்களை வழங்கியது. இருந்தபோதிலும், ரஷ்ய மக்களுக்கு கவலைப்பட வேண்டிய முக்கியமான விஷயங்கள் நிறைய உள்ளன என்கின்றனர்.

Nandri BBC

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *