நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா இணைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆதவ் அர்ஜூனாவிற்கு தவெகவில் முக்கிய பொறுப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
திராவிட கட்சிகளுக்கு போட்டியாக விஜய்
தமிழகத்தில் அரை நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக திமுக- அதிமுக ஆகிய கட்சிகள் மட்டுமே மாறி மாறி ஆட்சி அமைத்து வருகிறது. அந்த வகையில் இந்த கட்சிகளுக்கு எதிராக பல நடிகர்கள் கட்சி தொடங்கிய நிலையில் ஒரு சில ஆண்டுகளில் இந்த திராவிட கட்சிகளுடனே கூட்டணி வைக்கும் நிலை உருவாகிவிடும்.
இந்த நிலையில் தமிழகத்தில் புதிய அரசியல் மாற்றத்தை உருவாக்கப்போவதாக களத்தில் இறங்கியுள்ளார் நடிகர் விஜய், ஒரு படத்திற்கு 100 கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்கி வரும் விஜய் அனைத்தையும் தூக்கி ஏறிந்து விட்டு தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார்.
விஜய் யாருடன் கூட்டணி.?
தனது கட்சியின் கொடியை அறிமுகம் செய்து வைத்த அடுத்த மாதமே பிரம்மாண்ட மாநாட்டையும் நடத்தி இந்தியாவையே திரும்பி பார்க்கவைத்தார். இந்தநிலையில் 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் தான் இலக்கு என திட்டமிட்டு வரும் விஜய், கடைசியாக ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த சூழ்நிலையில் சட்டமன்ற தேர்தலின் போது யாருடன் கூட்டணி அமைப்பார் என பல வகையிலும் அரசியல் விமர்சகர்களால் பல கருத்துகள் கூறப்பட்டது. அந்த வகையில் சீமானோடு கூட்டணி என கூறி வந்த நிலையில் சீமானுக்கு எதிரான நிலைப்பாட்டில் விஜய் பேசிய அரசியலால் அதற்கு வாய்ப்பு இல்லாத நிலை உருவாகிவிட்டது.
ஆதவ் அர்ஜூனாவை நீக்கிய திருமாவளவன்
எனவே விடுதலை சிறுத்தைகள் கட்சியோடு இணைந்து தேர்தலை சந்திக்க வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியானது. அதன் படி விஜய்யும்- திருமாவளவனும் ஒரே மேடையில் ஏற விடுதலை சிறுத்தைகள் கட்சி துனை பொதுச்செயலாளராக இருந்த ஆதவ் அர்ஜூனா திட்டமிட்டார். இதற்காக பல வகைகளிலும் வழிகளை உருவாக்கினார். திமுக கூட்டணியில் இருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியை பிரிக்கும் வகையில் பல கருத்துகளை வெளியிட்டார். ஆனால் இதனை ஏற்றுக்கொள்ளாத திருமாவளவன் திமுக கூட்டணியில் தொடர்வதாக அறிவித்தார்.
விஜய்யோடு கை கோர்க்கும் ஆதவ் அர்ஜூனா
மேலும் அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் விஜய்யோடு கலந்து கொண்ட ஆதவ் அர்ஜூனா திமுக ஆட்சியை மன்னர் ஆட்சி எனவும், 2026ஆம் ஆண்டு ஆட்சி வீழும் என பேசியிருந்தார். இந்த பேச்சு திமுக கூட்டணியில் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் ஆதவ் அர்ஜூனாவை கட்சியில் இருந்து 6 மாத காலத்திற்கு நீக்க திருமாவளவன் உத்தரவிட்டார். இதனிடையே ஆதவ் அர்ஜூனா தமிழக வெற்றிக்கழகத்தில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆதவ் அர்ஜூனா என்ன செய்ய போகிறார்?
அந்த வகையில் விஜய் தரப்பில் இருந்து ஆதவ் அர்ஜூனாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது தவெகவில் அரசியல் தலைவர்கள் பெரிய அளவில் இல்லாத நிலையில், புஸ்ஸி ஆனந்த் மட்டுமே முக்கிய அங்கம் வகித்து வருகிறார். எனவே தவெகவில் ஆதவ் அர்ஜூனாவிற்கு முக்கிய பொறுப்பான பொருளாளர் பதவி வழங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் புஸ்ஸி ஆனந்திற்கு மட்டுமே விஜய்க்கு வலது கரமாக இருந்து வரும் நிலையில் இளைஞராகவும், துடிப்பான அரசியல் வாதியாக உள்ள ஆதவ் அர்ஜூனா தவெகவில் இணைக்க விஜய் உள்ளிட்ட அக்கட்சியின் மற்ற நிர்வாகிகள் விரும்புவதாக கூறப்படுகிறது.எனவே வரும் நாட்களில் புஸ்ஸி ஆனத்தை ஆதவ் அர்ஜூனா ஒரம்கட்ட வாய்ப்பு இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.