அடிலெய்டு: இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் ஆடி வரும் பகல் – இரவு டெஸ்ட் போட்டியின் முதல் ஓவரின் முதல் பந்தில் இந்திய அணியின் இளம் துவக்க வீரர் ஜெய்ஸ்வால் ஆட்டம் இழந்தார். போட்டியின் முதல் பந்தில் அவர் ஆட்டம் இழந்தது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மிட்செல் ஸ்டார்க்கை உசுப்பேற்றும் வகையில் அவர் பேசியதே இதற்கு காரணம் என ரசிகர்கள் பலரும் குறிப்பிட்டு வருகின்றனர். இந்த தொடரின் முதல் போட்டியிலும் ஜெய்ஸ்வால் முதல் இன்னிங்ஸில் டக் அவுட் ஆகி இருந்தார். அந்தப் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் சதம் அடித்து இருந்தார். இந்த முறையும் முதல் இன்னிங்ஸின் முதல் பந்தியிலேயே டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்து இருக்கிறார்.
பெர்த்தில் நடந்த முதல் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் ஜெய்ஸ்வால் 161 ரன்கள் குவித்தார். அப்போது மிட்செல் ஸ்டார்க்கை அவர் வம்பிழுத்து இருந்தார். ஸ்டார்க் வீசும் பந்து வேகமாக இல்லை என அவர் சீண்டி இருந்தார். தற்போது இருக்கும் வேகப் பந்துவீச்சாளர்களில் அதிக வேகத்துடன் அச்சுறுத்தும் வகையில் பந்து வீசக் கூடியவர் மிட்செல் ஸ்டார்க்.
அவரையே ஜெய்ஸ்வால் சீண்டியது கிரிக்கெட் உலகில் பரபரப்பாக பேசப்பட்டது. மிட்செல் ஸ்டார்க் தனது கிரிக்கெட் வாழ்வின் கடைசி கட்டத்தில் இருப்பதால் தான் இப்போது அவரால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை என விமர்சித்து வந்தனர். இந்த நிலையில் தான் தனது வேகம் இன்னும் குறையவில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் 141 கிலோமீட்டர் வேகத்தில் பந்தை ஸ்விங் செய்து ஜெய்ஸ்வால் விக்கெட்டை வீழ்த்தி இருக்கிறார் ஸ்டார்க். இந்தப் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. பகல் – இரவு போட்டியில் முதலில் பேட்டிங் செய்வது சாதகமான விஷயமாக இருந்தது. அதே சமயம் முதல் நாள் அன்று முதல் 20 முதல் 30 ஓவர்கள் வரை வேகப் பந்துவீச்சுக்கு சாதகமான சூழ்நிலை இருக்கும் எனவும் பிட்ச் அறிக்கையில் முன்னாள் வீரர்கள் சுட்டிக்காட்டி இருந்தனர்.
அதன்படியே மிட்செல் ஸ்டார்க் வீசிய முதல் ஓவரின் முதல் பந்தில் ஜெய்ஸ்வால் எல் பி டபிள்யூ முறையில் டக் அவுட் ஆனார். முதல் போட்டியில் நடந்த சம்பவத்துக்கு பழி தீர்த்து இருக்கிறார் மிட்செல் ஸ்டார்க்.
Nandri mykhel