மும்பை: சர்ஃபராஸ் கான் நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டக் அவுட் ஆனதற்கு காரணம் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா எடுத்த தவறான முடிவு தான் என பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 263 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
இந்தப் போட்டியில் சர்ஃபராஸ் கான் எட்டாம் வரிசை வீரராக களம் இறக்கப்பட்டார். அவர் நான்கு பந்துகளில் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆனார். அவரது பேட்டிங் வரிசை ஐந்து அல்லது ஆறு ஆகும். ஆனால், பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங் ஆர்டரை மாற்றினர்.
அது இந்திய அணியின் பேட்டிங் சரிவுக்கும் முக்கிய காரணமாக அமைந்தது. இந்த போட்டியில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 235 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்த ஆடிய இந்திய அணி 400 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறும் வாய்ப்பை அதிகரிக்கலாம் என்ற நிலை இருந்தது. முதல் நாள் ஆட்டத்தின் கடைசி நேரத்தில் விக்கெட் வீழ்ச்சியை தடுத்து நிறுத்த வேண்டி முகமது சிராஜ் நான்காம் வரிசையில் களமிறக்கப்பட்டார். ஆனால், அவர் டக் அவுட் ஆனார். அதன் பின் கோலி 4 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் சுப்மன் கில் – ரிஷப் பண்ட் இணைந்து ரன் குவித்தனர். பண்ட் 60 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தபின் சர்ஃபராஸ் கான் களம் இறக்கப்பட்டு இருக்க வேண்டும்.
ஆனால், வலது – இடது கை பேட்ஸ்மேன்கள் ஒரே நேரத்தில் ஆட வேண்டும் என்பதால் ரவீந்திர ஜடேஜா ஏழாவது வரிசையில் களம் இறக்கப்பட்டார். ஜடேஜா 14 ரன்களில் ஆட்டம் இழந்த பின் சர்ஃபராஸ் கான் எட்டாம் வரிசையில் களம் இறக்கப்பட்டார். அவர் நான்கு பந்துகளில் டக் அவுட் ஆனார்.
அதன் பின் வாஷிங்டன் சுந்தர் ஒன்பதாம் வரிசையில் இறங்கி 38 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். இந்திய அணி 59.4 ஓவர்களில் 263 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்திய அணி 28 ரன்கள் முன்னிலை பெற்றது. இது சிறிய முன்னிலை என்பதால் இந்திய அணிக்கு பெரிய அளவில் கை கொடுக்கவில்லை.
Nandri mykhel