டெல் அவிவ்: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அங்கு நிகழ்ச்சி ஒன்றில் பேசிக் கொண்டு இருக்கும் போது திடீரென இஸ்ரேல் குடிமக்கள் சிலரே அவரது பேச்சை இடைமறித்து பிரச்சினை செய்துள்ளனர். இஸ்ரேல் பிரதமரைச் சரமாரியாகச் சாடிய அவர்கள் கோஷமிட்டுக் கொண்டே இருந்தனர். இஸ்ரேல் பிரதமருக்கு எதிராக அந்நாட்டு மக்களே திரும்ப என்ன காரணம் என்பது குறித்துப் பார்க்கலாம்.
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் சூழல் தணியாமல் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதற்கிடையே நிகழ்ச்சி ஒன்றில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பேசும் போது திடீரென பகீர் சம்பவம் ஒன்று அரங்கேறியது.
அதாவது நிகழ்ச்சியில் பேசும் போது ஹமாஸ் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் திடீரென குறுக்கிட்டனர். இதனால் அங்குச் சற்று நேரம் பதற்றம் ஏற்பட்டது. இஸ்ரேல் பிரதமருக்கு எதிராக அந்நாட்டு மக்கள் திரும்ப என்ன காரணம் என்பதை நாம் பார்க்கலாம். என்ன நடந்தது: கடந்தாண்டு ஹமாஸ் நடத்திய அக். 7 தாக்குதலின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் இது நடந்தது. இதனால் அங்குச் சற்று நேரம் பதற்றம் ஏற்பட்டது. ஹமாஸால் கொல்லப்பட்டோரின் உறவினர்கள் நெதன்யாகுவை நோக்கி சரமாரியாகக் கூச்சலிட்டனர். அப்போது நெதன்யாகு அதற்கு எந்தவொரு பதிலும் தராமல் அமைதியாகவே நின்றார்.
அந்த நிகழ்ச்சி நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்ட நிலையில், அவை இப்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அதில் ஒருவர் “என் தந்தை கொல்லப்பட்டார்” என்று கூச்சலிட்டார். மற்றொரு நபர், நீ கேவலப்பட வேண்டும் என்று நெதன்யாகுவை நோக்கிச் சாடினார்.
காரணம் என்ன: இஸ்ரேல் மக்களைப் பாதுகாக்க அரசு தவறிவிட்டதாகவும் அதற்குப் பிரதமர் என்ற முறையில் நெதன்யாகு தான் காரணம் என்பதே அவர்கள் குற்றச்சாட்டு. அவர்கள் மட்டுமின்றி இஸ்ரேல் மக்களில் குறிப்பிட்ட சதவிகிதம் பேர் இப்போது நெதன்யாகு மீது கோபத்தில் இருப்பதாகவே சொல்லப்படுகிறது. எல்லை தாண்டி ஹமாஸ் நடத்தும் தாக்குதலைத் தடுக்க தவறியது, காசாவில் ஹமாஸ் வசம் உள்ள பிணையக்கைதிகளை இன்னுமே மீட்டு வராதது ஆகியவையே இதற்கு முக்கிய காரணமாகும். பின்னணி: என்ன தான் ஹமாஸை அழிக்கும் வரை போர் தொடரும் என நெதன்யாகு சொன்னாலும் காசாவில் உள்ள இஸ்ரேல் பணய கைதிகளை மீட்கப் போர் நிறுத்தத்திற்குச் சம்மதிக்க வேண்டும் என்று உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் நெதன்யாகுவுக்கு அழுத்தம் அதிகரித்துள்ளது. அதன் ஒரு பகுதியாகவே இப்போது நெதன்யாகுவை உரையை இஸ்ரேலியர்களே இடை மறுத்தது பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே இஸ்ரேல் நாட்டின் மொசாட் உளவுத்துறைத் தலைவர் டேவிட் பர்னியா இப்போது தோஹா செல்கிறார். அங்கு இஸ்ரேல் பணய கைதிகளை விடுவிப்பதற்கான ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தையில் அவர் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹமாஸ் தலைவர் சின்வார் கொல்லப்பட்ட நிலையில், போர் நிறுத்தம் கொண்டு வர வேண்டும் என்றே அமெரிக்கா தொடங்கி பல்வேறு உலக நாடுகளும் கோரிக்கை விடுத்தனர். முயற்சி: இஸ்ரேல், ஹமாஸ் இடையே போர் நிறுத்தத்தைக் கொண்டு வர கத்தார் மற்றும் எகிப்து நாடுகள் முயன்று வருகின்றனர். கடந்தாண்டே இரு தரப்பிற்கும் இடையே போர் நிறுத்தம் கொண்டு வர முயற்சிகள் எடுக்கப்பட்டனர். இருப்பினும், அது தீர்வு எட்டப்படாமலேயே இழுபறியில் இருந்தது. ஆனால், இப்போது ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்டுள்ளதால் போர் முடிவுக்கு வரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
Nandri oneindia