இந்திய கிரிக்கெட் அணியில் பல்வேறு பிரிவுகளில் ஏராளமான வீரர்கள் இருந்தாலும் அதில் மிகச் சிலர் மட்டுமே ரசிகர்களின் அபிமானத்தையும், கவனத்தையும், தேர்வாளர்களின் நம்பிக்கையையும் பெற்று தொடர்ந்து அணியில் நீடிக்க முடிகிறது.
அந்த குறிப்பிட்ட சில வீரர்கள் மட்டும்தான் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளிலும் தொடர்ந்து இடம் பிடிக்கவும் முடிகிறது.
அதற்கு அந்த வீரர்களின் பந்துவீச்சு, பேட்டிங், பீல்டிங் செயல்பாடும், அணி இக்கட்டான நிலையில் அவர்களின் திறமை எந்த அளவு வெளிப்படுத்தப்படுகிறது என்பதைப் பொருத்து அணியில் அவர்களது இருப்பு தீர்மானிக்கப்படுகிறது.
அந்த வகையில் இந்திய அணிக்கு வருங்காலத்தில் பேட்டிங்கிலும், சுழற்பந்துவீச்சிலும் வலுவான நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார் தமிழகத்தை சேர்ந்த வாஷிங்டன் சுந்தர்.
வாஷிங்டன் சுந்தரின் அபாரமான சுழற்பந்துவீச்சுத் திறமை, பேட்டிங் பல நேரங்களில் இந்திய அணியை இக்கட்டான சூழ்நிலையில் இருந்து மீட்டெடுத்துள்ளது.
சென்னையில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வாஷிங்டன் சுந்தரின் அரைசதம், ரிஷப் பண்டுடன் சேர்ந்து 96 ரன்கள் குவித்து இந்திய அணியை மீட்டது, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அறிமுக டெஸ்டில் அரைசதம் என வாஷிங்டன் சந்தர் தன்னுடைய பேட்டிங் திறமையை பல நேரங்களில் வெளிப்படுத்தியுள்ளார்.
அதேபோன்று டி20 போட்டியில் நிடாஹாஸ் கோப்பையிலும் வாஷிங்டன் சுந்தரின் பந்துவீச்சு அனைவராலும் உற்றுநோக்கப்பட்டு, அந்த தொடரின் நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இப்போது நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும் ஒரே இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி ஒட்டுமொத்த இந்திய கிரிக்கெட்டையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார் வாஷிங்டன் சுந்தர்.
ஒளிந்திருக்கும் பேட்டிங் திறன்
கிரிக்கெட் உலகில் ஆஃப் ஸ்பின்னராக அறியப்பட்டாலும் வாஷிங்டன் சுந்தருக்குள் சிறந்த பேட்டிங் திறமை இன்னும் ஒளிந்துகொண்டுதான் இருக்கிறது.
டெஸ்ட் போட்டியில் இதுவரை 5 ஆட்டங்கள் ஆடியுள்ள சுந்தர் 3 அரைசதங்களை விளாசியுள்ளார், ஒருநாள் போட்டியிலும் ஒரு அரைசதத்தை விளாசியுள்ளார். இதன் மூலம் சுந்தருக்குள் இருக்கும் பேட்டிங் திறமையையும் நாம் அறியலாம்.
கிரிக்கெட் குடும்பம்
அஸ்வினின் சாதனையை தனது 5-வது டெஸ்ட் போட்டியிலேயே வாஷிங்டன் சுந்தர் சமன் செய்துவிட்டார். டெஸ்ட் போட்டியில் அஸ்வினின் சிறந்த பந்துவீச்சு 7/59 என இருந்த நிலையில் அந்த சாதனையை நியூசிலாந்துக்கு எதிராக நேற்று வாஷிங்டன் சுந்தரும் சமன் செய்தார்.
கிரிக்கெட் என்பது வாஷிங்டன் சுந்தர் ரத்தத்தில் கலந்தது என்றுதான் கூற முடியும். ஏனென்றால் வாஷிங்டன் சுந்தருக்கு கிரிக்கெட் பயிற்சி அளித்து அவரின் எதிர்காலத்துக்கு ஒளிவிளக்காக இருந்ததில் அவரின் தந்தை மணி சுந்தரின் பங்கு முக்கியமானது.
அடுத்தது வாஷிங்டன் சுந்தரின் இளமைக் கால கிரிக்கெட் பயிற்சியாளர் செந்தில்நாதன். இருவரும்தான் சுந்தரின் கிரிக்கெட் கனவுகளை செதுக்கிய ஆசான்கள்.
பட்டை தீட்டிய பயிற்சியாளர்
வாஷிங்டன் சுந்தருக்கு இயல்பாக பேட்டிங் வருவதைப் போன்று ஆஃப் ஸ்பின்னும் நன்றாக வீசுவதை அறிந்த அவரின் பயிற்சியாளர் செந்தில்தான் அதை மெருகேற்றினார்.
வாஷிங்டன் சுந்தரின் பேட்டிங் திறமையோடு, பந்துவீச்சுத் திறமையும் சேர்ந்து வளர வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்பட்டு அவரைச் செதுக்கியதில் முக்கியமானவர்களில் ஒருவர், பயிற்சியாளர் செந்தில்.
1999-ஆம் ஆண்டு சென்னையில் பிறந்த வாஷிங்டன் சுந்தர் 5 வயதிலிருந்தே கிரிக்கெட்டில் ஆர்வம் மிகுந்தவராக இருந்தார். சென்னையில் செயின்ட் பீட்ஸ் பள்ளியில் பள்ளிப்படிப்பையும், அதன்பின் இந்துஸ்தான் தொழில்நுட்ப மற்றும் அறிவியல் கல்லூரியிலும் வாஷிங்டன் சுந்தர் படித்தார்.
வாஷிங்டன் சுந்தரின் மூத்த சகோதரி ஷைலஜா சுந்தரும் கிரிக்கெட் வீராங்கனை என்பது குறிப்பிடத்தக்கது.
தொடக்க ஆட்டக்காரராக அறிமுகம்
வாஷிங்டன் சுந்தர் கிரிக்கெட் பயிற்சி எடுக்கும் காலத்தில் இருந்தே தன்னை டாப் ஆர்டர் பேட்ஸ்மேனாக அடையாளப்படுத்திக்கொண்டார், முழுநேர பேட்ஸ்மேனாகவே பயிற்சி எடுத்து, பிற்காலத்தில் ஆஃப் ஸ்பின்னுக்கு மாறினார்.
தமிழ்நாடு அணிக்காக முதல் தரப் போட்டிகளில் வாஷங்டன் சுந்தர் தொடக்க பேட்ஸ்மேனாகத்தான் அறிமுகமாகினார். 2016 ரஞ்சி கோப்பைத் தொடரில், மும்பை அணிக்கு எதிரான போட்டியில் கேப்டன் அபினவ் முகுந்த்துடன் தொடக்க வீரராக வாஷிங்டன் களமிறங்கியதும் குறிப்பிடத்தக்கது.
2017-18 ரஞ்சிக் கோப்பையில் திரிபுரா அணிக்கு எதிராக சுந்தர் தனது முதல் சதத்தைப் பதிவு செய்தார். அதன்பின் தேசிய அளவில் 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டு 2016 உலகக் கோப்பை அணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஐபிஎல் அறிமுகம்
வாஷிங்டன் சுந்தரின் பந்துவீச்சைப் பார்த்த ரைசிங் புனே சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி 2017-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின்போது அஸ்வின் காயப்பட்டதால் அவருக்குப் பதிலாக சுந்தரை ஐபிஎல் ஏலத்தில் வாங்கியது.
முதல் குவாலிஃபயர் சுற்றில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 16 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதையும் வாஷிங்டன் சுந்தர் பெற்றார்.
2018-ஆம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் வாஷிங்டன் சுந்தரை பெங்களூரு அணி வாங்கியது. அதே ஆண்டில் தியோதர் கோப்பையில் இந்திய அணியின் சி பிரிவு அணிக்காகவும் சுந்தர் தேர்வாகினார்.
2022-ஆம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் வாஷிங்டன் சுந்தரை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 8.75 கோடி ரூபாய்க்கு ஏலத்திற்கு எடுத்தது.
குறைவான முதல் தரப்போட்டிகளிலும் லிஸ்ட் ஏ பிரிவு போட்டிகளிலும் வாஷிங்டன் சுந்தர் விளையாடியிருந்தாலும், குறுகிய காலத்தில் அவரின் திறமையால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
31 முதல்தரப் போட்டிகளில் 1398 ரன்களையும் 65 விக்கெட்டுகளையும், 77 ஏ லிஸ்ட் போட்டிகளில் 983 ரன்களையும், 73 விக்கெட்டுகளையும் வாஷிங்டன் சுந்தர் குவித்துள்ளார்.
2017 – மறக்கமுடியாத ஆண்டு
2017-ஆம் ஆண்டு வாஷிங்டன் சுந்தர் வாழ்க்கையில் மறக்க முடியாத ஆண்டாக இருந்தது. இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடருக்காக முதல்முறையாக இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர் தேர்வாகினார். அதற்குமுன்பாக இலங்கை அணிக்கு எதிராக இந்திய அணியில் கேதார் ஜாதவ் காயத்தால் விலகவே அவருக்குப் பதிலாக வாஷிங்டன் சுந்தர் அணியில் இடம் பெற்றார்.
ஆனால் 2017, டிசம்பர் 24-ஆம் தேதி இலங்கை அணிக்கு எதிரான டி20 போட்டியில்தான் சுந்தர் முறைப்படி இந்திய அணியில் அறிமுகமாகினார். அப்போது சுந்தருக்கு 18 வயது மட்டுமே.
2018-ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த நிடாஹாஸ் கோப்பைத் தொடரில் வாஷிங்டன் சுந்தரின் பந்துவீச்சு அனைவராலும் பாராட்டப்பட்டது. இந்த டி20 தொடரில் முதல்முறையாக 3 விக்கெட்டுகளை வாஷிங்டன் சுந்தர் எடுத்தார், அந்தத் தொடரின் நாயகனாகவும் சுந்தர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
திருப்புமுனை தருணங்கள்
2021-ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய பயணத்துக்கு இந்திய அணிக்கு நெட் பயிற்சிக்கு மட்டும் பந்துவீச சுந்தர் அனுப்பப்பட்டார். ஆனால், இந்தியா வீரர்கள் பலர் காயமடைந்ததால், அப்போது கொரோனா தொற்றினால் பல்வேறு கட்டுப்பாடுகள் இருந்ததால், இந்தியாவில் இருந்து புதிய வீரர்களை ஆஸ்திரேலியாவுக்கு அனுப்ப முடியவில்லை. இது போன்ற சூழலில்தான் டெஸ்ட் போட்டிகளில் சுந்தர் இடம் பெற்றார்.
2021-ஆம் ஆண்டு, ஜனவரி 15-ஆம் தேதி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய டெஸ்ட் அணியில் வாஷிங்டன் சுந்தர் அறிமுகமாகினார்.
பிரிஸ்பேனில் நடந்த அந்த டெஸ்ட் போட்டியில் ஷர்துல் தாக்கூருடன் சேர்ந்து 123 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அரைசதம் அடித்து வாஷிங்டன் சுந்தர் தனக்குள் இருக்கும் பேட்டிங் திறனை வெளிப்படுத்தினார்.
2021-ஆம் ஆண்டுக்குப்பின் இந்திய டெஸ்ட் அணியில் தேர்வாகாமல் இருந்த வாஷிங்டன் சுந்தர், 3 ஆண்டுகால இடைவெளிக்குப்பின் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம் பெற்றார்.
தற்போது புனேவில் நடந்துவரும் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 59 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை வீழ்த்தி வாஷிங்டன் சுந்தர் தன்னை சிறந்த பந்துவீச்சாளராகவும் நிரூபித்துள்ளார்.
சிறந்த பேட்ஸ்மேன்
வாஷிங்டன் சுந்தர் டாப் ஆர்டரில் இறங்கக்கூடிய சிறந்த பேட்ஸ்மேன் என்பதை பல்வேறு உள்நாட்டுப் போட்டிகள் மூலம் நிரூபித்துள்ளார். ஆனால், இந்திய அணியில் இன்னும் அவருக்கான இடம் கீழ்வரிசையில்தான் இருந்து வருகிறது. அவர் ஒரு ஆல்ரவுண்டராகவே இந்திய அணியில் பார்க்கப்படுகிறார்.
தமிழ்நாட்டில் நடக்கும் டிஎன்பிஎல் தொடரிலும், தமிழ்நாடு அணியிலும் வாஷிங்டன் சுந்தர் பல போட்டிகளில், பல்வேறு தருணங்களில் தொடக்க பேட்டராக களமிறங்கி அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
வாஷிங்டன் சுந்தருக்குள் எப்போதுமே ஒரு சிறந்த பேட்ஸ்மேன் ஒளிந்திருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர் ஒரு பேட்டர் என்பதற்கான அங்கீகாரம், அவருக்கு இன்னும் கிடைக்கவில்லை.
ஆனால், வாஷிங்டன் சுந்தர் தன்னை ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு பொருத்திப் பார்க்கும் பேட்டராக அடையாளப்படுத்தவும் விரும்பவில்லை. இதுவரை தனக்குக் கிடைத்த வாய்ப்புகள் அனைத்தையும் சரியாகப் பயன்படுத்தி தன்னுடைய பேட்டிங் திறமையை மெய்பித்துள்ளார்.