புதுடெல்லி: “உக்ரைன் மற்றும் மேற்கு ஆசியாவில் நிலவும் மோதல்கள் கவலை அளிக்கக்கூடியவை. அமைதியை நிலைநாட்ட இந்தியா அனைத்து வகையிலும் பங்களிப்புச் செய்ய தயாராக உள்ளது” என்று பிரதமர் மோடி தெரிவித்தார். ஜெர்மனி அதிபர் ஓலாஃப் ஸ்கோலஸுடனான சந்திப்புக்கு பின்பு, உக்ரைனில் நீண்ட காலமாக நிலவி வரும் மோதலுக்கு அரசியல் தீர்வு காண இந்தியா பங்களிக்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்த நிலையில் மோடி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஜெர்மன் அதிபருடனான 7-வது இரு அரசுகளுக்கிடையேயான ஆலோசனைக்குப் பின்பு பேசிய பிரதமர் மோடி கூறியது: “உக்ரைன் மற்றும் மேற்கு ஆசியாவில் நடந்து வரும் மோதல்கள் இரண்டு நாடுகளுக்கும் கலையளிக்கும் விஷயம். பிரச்சினைகளுக்கு போர் எப்போதும் தீர்வாகாது என்ற எண்ணம் இந்தியாவுக்கு எப்போதும் உண்டு. அமைதியை நிலைநாட்ட அனைத்து விதமான பங்களிப்பையும் அளிக்க இந்தியா தயாராக உள்ளது. ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு அவை உட்பட பல்வேறு நிறுவனங்களிலும் சீர்திருத்தங்கள் தேவை.
இந்தியா – ஜெர்மனி இடையேயான உறவு இரண்டு திறமைமிக்க மற்றும் வலுவான ஜனநாயக நாடுகளுக்கிடையேயான மாற்றத்துக்கான கூட்டணி, பரிமாற்றத்துக்கான கூட்டணி இல்லை. உலகம் பதற்றம், மோதல்கள் மற்றும் நிச்சயமற்ற தன்மைகளை கடந்து கொண்டிருக்கிறது. இந்தோ – பசிபிக் பிராந்தியத்தில் சட்டத்தின் ஆட்சி மற்றும் சுதந்திரமான இடம்பெயர்தல் குறித்த கடுமையான சவால்கள் உள்ளன. இதுபோன்ற காலகட்டத்தில், இந்தியா மற்றும் ஜெர்மனி இடையேயான கூட்டுறவு வலுவான நங்கூரமாக உருவெடுத்துள்ளது.
கடந்த 2022-ம் ஆண்டு நடந்த இந்தியா – ஜெர்மனி பேச்சுவார்த்தையில் (ஐஜிசி) இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து நாங்கள் சில முக்கியமான முடிவுகள் எடுத்திருந்தோம். இரண்டு ஆண்டுகளில் நமது தூதரக உறவுகளின் பல்வேறு துறைகளில் ஊக்கமளிக்கும் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. பரஸ்பர நம்பிக்கை அளிக்கும் துறைகளான பாதுகாப்பு, தொழில்நுட்பம், ஆற்றல், பசுமை மற்றும் நீடித்த வளர்ச்சி போன்ற துறைகளில் வளர்ச்சி அடைந்துள்ளது. இரு நாடுகளின் கூட்டுறவை விரிவுபடுத்துவதற்கும் மேம்படுத்துவதற்கும் நாங்கள் பல முக்கிய முடிவுகளை எடுத்து, முழுமையான அரசுகள் என்பதில் இருந்து முழுமையான தேசம் என்கிற அணுகுமுறைக்கு நகர்வதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்” என்று பிரதமர் மோடி பேசினார்.
ஐஜிசி என்ற கட்டமைப்பு கடந்த 2011-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இது, பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கு இடையிலான ஈடுபாட்டில் புதிய பகுதிகளின் ஒத்துழைப்பு குறித்த விரிவாக மதிப்பாய்வு செய்ய, அடையாளம் காண வழிவகை செய்கிறது.