உலகமே உற்று நோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் துணை அதிபர் கமலா ஹாரிசும் முன்னாள் அதிபர் டிரம்பும் மோதுகின்றனர். இதில் வெற்றி பெறுபவர் யார்? யார் வெற்றி பெற்றால் இந்தியாவுக்கு நன்மை?

இந்தியா- அமெரிக்கா இடையேயான உறவில் மிக முக்கியமானதாக பார்க்கப்படுவது வர்த்தகம் தான். இந்தியாவின் மிக முக்கிய வர்த்தக நட்பு நாடாகவும் அமெரிக்கா விளங்குகிறது. அதிபர் வேட்பாளர்களான கமலா ஹாரிசும், டொனால்ட் டிரம்பும் பல்வேறு கொள்கைகளில் முரண்பட்டாலும் இந்தியாவுடனான வர்த்தகத்தை பொறுத்தவரை ஒரே கொள்கையே கொண்டுள்ளனர். கடந்த மாதம் பேட்டி ஒன்றின் போது இந்தியாவை துஷ்பிரயோகம் செய்யும் நாடு என அழைத்தார் டிரம்ப். இந்தியா, அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு கடுமையான வரி விதிப்பதாக நீண்ட காலமாகவே குற்றம்சாட்டி வரும் அவர், தான் மீண்டும் வெற்றி பெற்றால் பரஸ்பர வரி விதிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

கமலா ஹாரிசை பொறுத்தவரை அவரும் வர்த்தக ரீதியாக அமெரிக்காவை பாதுகாக்கும் நடவடிக்கைகளை தான் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மனப்பான்மை இந்தியாவுக்கு சிறிதான சிக்கலையே ஏற்படுத்தும். தொழில்நுட்ப முன்னேற்றத்தில், கமலா மற்றும் டிரம்ப், சீனாவுடன் மோதல் போக்கையே தொடர்கின்றனர். அவர்களின் இந்த நிலைப்பாடு இந்தியாவுக்கு சாதகமாகவே பார்க்கப்படுகிறது.

உதாரணமாக, பைடன் நிர்வாகம் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான தொழில்நுட்ப சக்தியின் சமநிலையை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த மாதம் குவாட் உச்சி மாநாட்டிற்காக பிரதமர் மோடி அமெரிக்கா சென்றிருந்தபோது, ​​இந்தியாவில் செமி கண்டக்டர் உற்பத்தி ஆலையை அமைப்பதற்கான ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையெழுத்திட்டன.

மேலும், 2022- ஆம் ஆண்டு வாக்கில், செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் தொழில்நுட்பம், விண்வெளி, 6G மொபைல் தொழில்நுட்பம் உள்ளிட்டவற்றில் ஒத்துழைக்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

சீனாவிலிருந்து விலகி இந்தியாவை நோக்கி இந்த அதிகார சமநிலையை மாற்ற பைடன் மேற்கொண்ட நடவடிக்கைகளை ஹாரிசும் தொடர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சீனா உடனான டிரம்பின் மோதல் அணுகுமுறையும் இந்தியாவிற்கே பயனளிக்கும், ராஜாங்க உறவுகளில், டிரம்ப் ஆட்சியை பிடிப்பதையே டெல்லி விரும்பும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். தேசியவாதம், தேசபக்தி மற்றும் பாரம்பரியம் ஆகியவற்றின் அடிப்படையிலான சித்தாந்தங்களில் டிரம்பும் மோடியும் ஒரே நிலைப்பாட்டை கொண்டுள்ளனர்.

குடியேற்றத்தை பொறுத்தவரை கடுமையான நிலைப்பாட்டை டிரம்ப் கொண்டுள்ளார். H1B விசாக்களின் எண்ணிக்கையை குறைக்க டிரம்ப் கடுமையான சட்டங்களை கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நடவடிவக்கை இந்தியர்களை கடுமையாக பாதிக்கும். மறுபுறம் கமலா ஹாரிஸ் ஆவணங்கள் இல்லாமல் குடியேறுபவர்களையும் வரவேற்க வேண்டும் என கூறி வருகிறார்.

நவம்பர் 5 வாக்கெடுப்பில் யார் வெற்றி பெற்றாலும், பெரும்பாலான விவகாரங்களில் இந்தியாவிற்கு ஆதரவளிப்பார்கள் என்பது பலரின் கருத்தாக உள்ளது. வளரும் சக்தியாக உள்ள இந்தியா, யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்களுடன் ஒத்துழைக்கவும் நிலைதன்மையை மேம்படுத்தவுமே காய் நகர்த்தும்.

Nandri news18

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *