கவரைப்பேட்டை ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல்

மைசூரு- தர்பங்கா செல்லும் ‘பாக்மதி அதிவிரைவு எஸ்பிரஸ்’ பயணிகள் ரயில் நேற்று இரவு (அக்.11) திருவள்ளூர் மாவட்டம், கவரப்பேட்டை அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது அவ்வழித்தடத்தில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இதில் 6 ரயில் பெட்டிகள் தடம் புரண்டது, 2 பெட்டிகள் தீ பற்றிய எரிந்தது. 

எனினும் நல்வாய்ப்பாக உயிர் சேதம் ஏற்படவில்லை. சிலருக்கு காயம் ஏற்பட்டு அவர்கள் சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிக்சை அளிக்கப்படுகிறது. இந்நிலையில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் விபத்து குறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில், “ரயில் விபத்தில் 6 பெட்டிகள் தரம் புரண்டது. பாக்மதி ரயிலில் 1,360 பயணிகள் பயணித்துள்ளனர். 

விபத்தில் சரக்கு ரயிலில் தீ பற்றியது. மாவட்ட நிர்வாகம், காவல்துறை, தீயணைப்புத் துறை துரிதமாக செயல்பட்டு தீ அணைக்கப்பட்டது. 19 பேருக்கு காயம் ஏற்பட்டது. லேசான காயம் உள்ளவர்கள் அருகில் உள்ள பொன்னேரி மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
ரயில் பயணிகளுக்கு வருவாய்த் துறை மூலமாக உணவு, தங்குமிடம் உள்ளிட்ட வசதிகள் உடனடியாக ஏற்பாடு செய்து தரப்பட்டது. 3 திருமண மண்டபங்களில் அவர்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  

விபத்து ஏற்பட்ட உடன் முதல்வர் ஸ்டாலின் மீட்பு பணிகளை துரிதமாக மேற்கொள்ள உத்தரவிட்டார்” என்றார்.

தொடர்ந்து, கவரைப்பேட்டை ரயில் விபத்தில் காயமடைந்து ஸ்டேன்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோரை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், “ரயில் விபத்துகள் தொடர்கதை ஆவதை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்” என்று கூறினார். 

நன்றி indianexpress

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *