TN Govt Schools Skill Assessment Test 2024 : தமிழகத்தில் 1 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை முடிந்து இன்று பள்ளி திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மாணவர்களுக்கு இந்த வாரம் மகிழ்ச்சியான வாரமாக அமைந்துள்ளது. பள்ளிக் கல்வித் துறையின் தகவல் முதல் இந்த வாரம் விடுமுறை நாட்கள் வரை என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
TN School October Event 2024 : தமிழகத்தில் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை முடிவடைந்து இன்று முதல் இரண்டாம் பருவம் தொடங்கியுள்ளது. இந்நிலையில், பள்ளி மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, 6 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கற்றல் திறன்வழி மதிப்பீட்டுத் தேர்வு இந்த வாரம் முதல் தொடங்குகிறது.
இரண்டாம் பருவம் தொடக்கம் :
காலாண்டு விடுமுறை முடிவடைந்து இன்று (07.10.2024) முதல் இரண்டாம் பருவம் தொடங்கியுள்ளது. காலாண்டு தேர்வு விடைத்தாள்களை அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் இன்றே வழங்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டது. மேலும், 2ஆம் பருவ பாட நூல்கள் இன்றே பள்ளிகளில் வழங்கப்பட்டு வருகிறது.
கற்றல் மதிப்பீடு தேர்வு :
அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மதிப்பீட்டுப் புலம் கடந்த 2021-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில், 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை படிக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கு கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் கற்றல் திறன்வழி மதிப்பீட்டுத் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. நடப்பு கல்வியாண்டில் அக்டோபர் முதல் ஜனவரி வரை 4 மாதங்கள் நடைபெறவுள்ள தேர்வுகளின் கால அட்டவணை தற்போது வெளியாகியுள்ளது.
அக்டோபர் 7-ம் தேதி முதல் தொடங்கும் தேர்வு :
முதல்கட்ட தேர்வு அக்டோபர் 7-ம் தேதி முதல் தொடங்கி 10-ம் தேதி வரையும், 2-ம் கட்ட தேர்வு அக்டோபர் 22 முதல் 25-ம் தேதி வரையும், 3-ம் கட்ட தேர்வு நவம்பர் 26 முதல் 29-ம் தேதி வரையும், 4-ம் கட்ட தேர்வு ஜனவரி 28 முதல் 31-ம் தேதி வரையும் நடைபெறவுள்ளன. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது.
தேர்வு முறை மற்றும் வினாத்தாள் பதிவிறக்கம் :
தேர்விற்கும் முந்த நாள் ஒருநாள் முன்பாக அந்த வினாத்தாள்களைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். ஒவ்வொரு தேர்வு 40 நிமிடங்களில் முடிக்கும் வகையில் 25 கொள்குறி வகை வினாக்கள் இடம்பெற்று இருக்கும். தேர்வுக்கான வினாத்தாள் https://exam.tnschools.gov.in/ என்ற இணையத்தளத்தில் முன்கூட்டியே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். தேர்வு முடிந்த பிறகு விடைத்தாள்கலை திருத்தி, வகுப்பு ஆசிரியர்கள் முறையாக பராமரிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுத பூஜை விடுமுறை :
இன்று முதல் பள்ளிகள் திறந்த நிலையில், இந்த வாரம் அக்டோபர் 11 – ஆயுத பூஜை (வெள்ளி), அக்டோபர் 12- விஜயதசமி (சனிக்கிழமை) வருகிறது. இந்த இரண்டு நாட்களும் அரசு விடுமுறை நாட்கள் ஆகும். அதனைத்தொடர்ந்து, அக்டோபர் 13 (ஞாயிறு0 வார விடுமுறை நாளாகும். எனவே, வியாழன் வரைதான் பள்ளிகள் இயங்கும். தொடர்ந்து, 3 நாட்கள் பள்ளிகளுக்கு மீண்டும் விடுமுறை கிடைப்பதால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நன்றி samayam