டெல்லியில் உள்ள ஒரு மருத்துவமனையில் இன்று அதிகாலை 1.30 மணி அளவில் இரு சிறுவர்கள் மருத்துவரை சுட்டு கொன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி மாநிலம், தென்கிழக்கு டெல்லி பகுதியில் காளிந்தி குஞ்ச் எனும் பகுதியில் நிமா எனும் சிறிய மருத்துவமனை இயங்கிவருகிறது. 24 மணி நேரம் இயங்கக் கூடிய இந்த மருத்துவமனையில், மூன்று படுக்கை வசதிக் கொண்ட அளவிற்கு இருந்துவருகிறது.

இந்த மருத்துவமனையில், பகல் இரவு என ஷிஃப்ட் அடிப்படையில் மருத்துவர்களும், மருத்துவப் பணியாளர்களும், செவிலியர்களும் பணியாற்றிவருகின்றனர். அப்படி நேற்று இரவு நிமா மருத்துவமனையில், மருத்துவர் ஜாவேத் அக்தர், செவிலியர்கள் கஜாலா பர்வீன் மற்றும் முகமது கமில் ஆகியோர் பணியில் இருந்துள்ளனர். இப்படியான சூழலில் நேற்று இரவு 1.45 மணி அளவில் அந்த மருத்துவமனையில் இருந்து டெல்லி காவல்துறைக்கு போன் வந்துள்ளது. அதில் பேசிய செவிலியர் ஒருவர் தங்களது மருத்துவமனைக்கு வந்த இரு இளைஞ்கள் மருத்துவர் ஜாவேத் அக்தரை சுட்டு கொன்றுவிட்டனர் என தகவல் கொடுத்துள்ளனர்.

அந்தத் தகவலைத் தொடர்ந்து உடனடியாக டெல்லி காவல்துறைய்னர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். நிமா மருத்துவமனைக்கு சென்ற காவல்துறையினர், மருத்துவரின் அறைக்கு சென்று பார்த்தபோது, அங்கு மருத்துவர் தனது இருக்கையில் அமர்ந்தப்படி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார்.

அதன்பிறகு சம்பவ இடத்திறகு தடயவியல்துறை அதிகாரிகள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் மருத்துவர் அறையில் இருந்த தடயங்களை சேகரித்தனர். மேலும், காவல்துறையினர் இந்தக் கொலை தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

போலீஸின் முதற்கட்ட விசாரணையில், 3ம் தேதி அதிகாலை 1.30 மணிக்கு இரு நபர்கள் மருத்துவமனைக்கு வந்துள்ளனர். அதில் ஒருவரின் கால் விரலில் காயம் இருந்துள்ளது. அதற்கு சிகிச்சை பெறுவதற்காக வந்து, அதற்கான சிகிச்சையும் செவிலியரிடத்தில் இருந்து பெற்றுள்ளனர். பிறகு மருத்து சீட்டு வாங்க வேண்டும் என கூறி மருத்துவர் அறைக்கு சென்றுள்ளனர்.

அப்போது அங்கிருந்த மருத்துவர் ஜாவேத் அக்தரின் தலையை குறிவைத்து சரியாக சுட்டுள்ளனர். இதில், மருத்துவர் தலையின் இடது புறத்தில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்துள்ளது. சரியாக தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்ததால், மருத்துவர் நிகழ்விடத்திலேயே மரணித்துள்ளார். அவர் தனது இருக்கையில் ரத்த வெள்ளத்தில் சரிந்தபடி இறந்துள்ளார். மேலும், முதற்கட்ட விசாரணையில் சிகிச்சை பெற வந்த இருவருமே 16, 17 வயது சிறுவர்கள் என தெரியவந்துள்ளது. இவர்கள் 2ம் தேதியும் இதே மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்றுள்ளனர்.

தற்போது மருத்துவமனையில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்துவருகிறோம். தடயவியல் துறையினர் மருத்துவர் அறை மற்றும் அவர்கள் சிகிச்சை பெற்ற இடங்களில் இருந்து தடயங்களை சேகரித்துள்ளனர். தொடர் விசாரணை நடைபெற்றுவருகிறது. சரியாக தலையை குறிவைத்து சுட்டிருப்பதால் இது திட்டமிட்ட கொலை என யூகிக்க முடிகிறது என காவல்துறையினர் தெரிவித்தனர்.

நன்றி news18

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *