TN Teachers Recruitment Board 2024 : ஆசிரியர் தேர்வு வாரியத்தினால் தமிழ்நாட்டில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் மற்றும் கல்லூரிகளுக்கான உதவி பேராசிரியர் பணிகளுக்கான போட்டித் தேர்வுகள் உட்பட ஆசிரியர் தகுதி தேர்வான டெட் தேர்வும் நடத்தபப்டுகிறது. இந்நிலையில், ஆசிரியர் பணி தேர்வுகளுக்கான பணிகள் ஒட்டுமொத்தமாக நிறுத்தபப்ட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

​Teachers Recruitment Board Exams 2024 : தமிழகத்தில் பள்ளிகளில் காலியாகவுள்ள ஆசிரியர்கள் பணியிடங்கள் எண்ணிக்கை 13 ஆயிரத்திற்கும் அதிகமாக உள்ளது. மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு பள்ளிகள் செயல்பட்டு கொண்டு இருக்கின்றன. இந்நிலையில், இந்த காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், ஆசிரியர்கள் தேர்வு பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக வெளியான தகவல் தேர்வர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் பள்ளிகள் உள்ள ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதிபெற டெட் என்னும் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். தொடர்ந்து, பணிக்காக தனியாக போட்டித் தேர்வையும் எதிர்கொள்ள வேண்டும். இந்த இரண்டு கட்டங்களை தாண்டியே அரசு ஆசிரியராக பணி வழங்கப்படும். இந்நிலையில், ஆசிரியர் பணியில் சேர வேண்டும் என பல நாட்களாக தங்களை தயார்படுத்திக் கொண்டு ஆயிரக்கணக்கான இளம் வயதினர் தேர்வை சந்தித்து வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் காலியாகவுள்ள ஆசிரியர் பணியிடங்கள் :

தமிழகம் முழுவதும் பள்ளிகளில் சுமார் 13 ஆயிரத்திற்கும் அதிகமான ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது. இந்த இடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்தது. தொடர்ந்து, மாணவர்களின் கல்வி பாதிக்காமல் இருக்க தற்காலிக ஆசிரியர்கள் அமைக்கப்பட்டு பள்ளிகள் இயங்கி கொண்டு இருக்கிறது.

ஆசிரியர் தேர்வு வாரியம் :

காலியாகவுள்ள ஆசிரியர் பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தினால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகள் மூலம் நிரப்பப்படுகிறது. ஆசிரியர் தகுதி தேர்வான டெட் தேர்வு (TNTET), இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், முதுகலை பட்டதாரி ஆசிரியர், கல்லூரி உதவி பேராசிரியர் உள்ளிட்ட தேர்வுகள் நடத்தப்படுகிறது.

தாமதமாகும் தேர்வு வாரிய பணிகள் :

இந்நிலையில், 2,768 இடைநிலை ஆசிரியர் தேர்வு கடந்த ஜூன் 21-ம் தேதி நடைபெற்றது. முதல் 1,768 இடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி, பின்னர் 1000 இடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டது. இத்தேர்வு நடைபெற்று 3 மாதங்கள் ஆகியும் இன்னும் இதற்கான விடைக்குறிப்பு வெளியாகவில்லை. அதே போன்று, 3,192 பணியிடங்களுக்கான பட்டதாரி ஆசிரியர் தேர்வு நடத்தப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்றது. ஆனால் இதற்கு இதுவரை தேர்வு செய்யப்பட்டவர்கள் இறுதி பட்டியல் வெளியாகவில்லை. மேலும், கல்லூரி உதவி பேராசிரியர் 4000 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு ஒத்திவைக்கப்பட்டு இன்னும் தேர்வு தேதி அறிவிக்கப்படவில்லை.

டெட் தேர்வு அறிவிப்பு எப்போது?

இந்த நிலையில், ஆசிரியர் தேர்வு வாரியத்தினால் நடத்தபடும் டெட் தகுதி தேர்விற்கான அறிவிப்பும் தற்போது வரை வெளியாகவில்லை. ஆண்டு கால அட்டவணையின் படி, ஏப்ரல் மாதமே வெளியாக வேண்டிய டெட் தேர்வு அறிவிப்பு கால தாமதம் ஆகிகொண்டு செல்கிறது. ஏற்கெனவே ஆண்டிற்கு இரண்டு முறை நடத்தப்பட வேண்டிய தேர்வு ஒரு முறை தான் நடத்தப்படுகிறது என்ற நிலை இருக்கிறது. தற்போது அந்த ஒரு முறைக் கூட சரியான நேரத்தில் நடைபெறவில்லை என தேர்வர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.

நிறுத்தப்பட்ட ஆசிரியர் தேர்வு பணிகள்?

இந்நிலையில், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் பணிகள் அனைத்தும் ஒட்டுமொத்தமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து வெளியான தகவலில், நிதிச்சுமை காரணமாக தேர்வு வாரியத்தின் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிப்பதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே போட்டித் தேர்விற்காக பல ஆண்டுகளாக காத்திருத்து தேர்வு எழுதியவர்களும் இன்னும் பணி வழங்கப்படவில்லை, ஆசிரியர் கனவுடன் தேர்வின் அறிவிப்பிற்காக காத்திருப்பவர்களுக்கு அறிவிப்பும் வெளியாகவில்லை என்ற நிலை, தேர்வர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

இந்த நிலை சரி ஆகுமா?

பள்ளிகளில் நியமிக்கப்பட்டுள்ள தற்காலிக ஆசிரியர்கள் பணி நியமனத்திற்காக போராட்டத்தில் ஈடுபடுவது ஒரு பக்கம், டெட் தேர்வு முதல் ஆசிரியர் பணி தேர்வு வரை அறிவிற்காக காத்திருப்பவர்கள் ஒருபக்கம், தேர்வு எழுதியும் அதற்கான நடவடிக்கை எதுவும் இல்லை என புலம்புபவர்கள் ஒரு பக்கம் என தமிழ்நாட்டில் ஆசிரியர் பணி என்பது ஒருவிதமான ஸ்தம்பித்த நிலையில் இருப்பதாக தேர்வர்களால் பார்க்கப்படுகிறது. இப்படி வருட வருடம் ஏற்படும் தாமதத்தினால் ஆசிரியர் பணி என்பது பலருக்கு கனவாகவே இருந்து விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதற்கு தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் முதன்மையான கோரிக்கையாக உள்ளது.

நன்றி samayam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *