Shubman-Gill

சென்னை: வங்கதேசம் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் இளம் நட்சத்திர வீரர் சுப்மன் கில் சிறப்பாக விளையாடி சதம் விளாசி சாதனை படைத்துள்ளார். முதல் இன்னிங்ஸில் டக் அவுட்டான போதும், மனம் தளராமல் விளையாடிய சுப்மன் கில் 2வது இன்னிங்ஸில் பேட்டிங் ஃபார்மை நிரூபித்துள்ளார்.

வங்கதேசம் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்ஸில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் சுப்மன் கில் 176 பந்துகளில் 4 சிக்ஸ், 10 பவுண்டரிகள் உட்பட 119 ரன்களை விளாசி அசத்தியுள்ளார். இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் சுப்மன் கில் டக் அவுட்டானதால், அவர் மீதான விமர்சனங்கள் அதிகரித்தது. அந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், சுப்மன் கில் பேட்டிங் மூலம் பதிலடி கொடுத்துள்ளார்.

இந்த இன்னிங்ஸ் மூலமாக நடப்பாண்டில் அதிக சதங்கள் விளாசிய இந்திய வீரர் என்ற சாதனையை சுப்மன் கில் படைத்துள்ளார். 7 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள சுப்மன் கில், 3 சதங்கள் விளாசி இருக்கிறார். அதேபோல் கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் சுப்மன் கில் 12 சதங்களை விளாசி இருக்கிறார். இவருக்கு பின் தான் இங்கிலாந்து ஜாம்பவான் வீரரான ஜோ ரூட் 11 சதங்களுடன் இருக்கிறார். இதனால் இனி சுப்மன் கில் காலம் தான் என்று ரசிகர்கள் பலரும் விவாதித்து வருகின்றனர். இதனிடையே டெஸ்ட் கிரிக்கெட்டில் சுப்மன் கில் 2வது இன்னிங்ஸ் ஸ்பெஷலிஸ்டாக உருவாகியுள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்ஸில் சுப்மன் கில் அபாரமாக விளையாடி சதம் விளாசினார். தொடர்ந்து ராஜ்கோட்டில் நடந்த 3வது டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்ஸில் 91 ரன்கள் குவித்தார்.

அதேபோல் கடைசி டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்ஸில் அபாரமாக விளையாடி சதம் விளாசி அசத்தினார். தற்போது வங்கதேசம் அணிக்கு எதிரான முதல் இன்னிங்ஸில் டக் அவுட்டாகினாலும், 2வது இன்னிங்ஸில் சதம் விளாசி இருக்கிறார். கடைசியாக சுப்மன் கில் விளையாடிய 8 இன்னிங்ஸ்களில் 3 சதங்கள், 2 அரைசதங்களை விளாசி இருக்கிறார்.

அகமதாபாத் மைதானம் மட்டுமல்லாமல் இந்தியாவின் மற்ற மைதானங்களிலும் தன்னால் ரன்கள் குவிக்க முடியும் என்று சுப்மன் கில் திறமையை நிரூபித்துள்ளார். இதனால் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நம்பர் 3 பேட்டிங் வரிசை சுப்மன் கில்லுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவே பார்க்கப்படுகிறது. மேலும், எதிர் வரும் டெஸ்ட் போட்டிகளில் முதல் இன்னிங்ஸிலும் சுப்மன் கில் சிறப்பாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கலாம்.

நன்றி mykhel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *