”ரத்தத்தில் கால்சியம் சத்து குறையவே குறையாது. நம் உடலானது ரத்தத்தில் கால்சியத்தின் அளவை 8.5 – 10.5 மில்லி கிராம் என்ற அளவில் தொடர்ந்து மெயின்டெய்ன் செய்துகொண்டே இருக்கும். ஒருவேளை குறைந்தால், எலும்புகளிடமிருந்து எடுத்துக்கொள்ளும். அதிகமானால், எலும்பிலேயே சேர்த்துவிடும்.”

ரத்தசோகை போலவே பெண்களை பாதிக்கும் இன்னொரு பிரச்னை கால்சியம் குறைபாடு. கால்சியம் நம் உடலின் செயல்பாட்டுக்கு எவ்வளவு முக்கியம் என்பதையும், அது குறையும்போது சுயமாக கால்சியம் மாத்திரைகளை எடுத்துக்கொள்வதால் வரக்கூடிய பிரச்னைகள் பற்றியும் விளக்குகிறார் பொது மருத்துவர் ராஜேஷ்.

‘‘கால்சியம் என்றாலே அது எலும்புகளை வலுவாக வைத்திருக்க மட்டுமே என்று பலரும் நினைத்துக்கொண்டிருக்கிறோம். நம் உடலின் 99 சதவிகித கால்சியம், எலும்புகளில் கால்சியம் பாஸ் பேட்டாகத் திட வடிவில் இருந்தாலும் ரத்தத்தில் இருக்கிற ஒரு சதவிகித கால்சியம்தான் நுரையீரல் தசைகள், இதய தசைகள் உள்ளிட்ட நம் உடலின் மொத்த தசைகளையும் இயங்க வைத்துக்கொண்டிருக்கிறது. உடலின் ரத்த உறைவுக்கும் கால்சியம் அவசியம். அதனால்தான் நம் உடலில் தாது உப்புகளிலேயே கால்சியம்தான் அதிகமாக இருக்கும். தைராய்டு, பாரா தைராய்டு, கால்சிடோனின், ஈஸ்ட்ரோ ஜென், வைட்ட மின் டி உள்ளிட்ட பல விஷயங்கள் உடலில் கால்சியம் சத்து அதிகமாகாமலும் குறையாமலும் பார்த்துக்கொள்கின்றன. இவற்றில் ஒன்றில் பிரச்னை வந்தாலும் பெண்களுக்கு கால்சியம் சத்துக் குறைபாடு வரும்.

இங்கே ஒரு விஷயத்தை நாம் அறிந்துகொள்ள வேண்டும். ரத்தத்தில் கால்சியம் சத்து குறையவே குறையாது. நம் உடலானது ரத்தத்தில் கால்சியத்தின் அளவை 8.5 – 10.5 மில்லி கிராம் என்ற அளவில் தொடர்ந்து மெயின்டெய்ன் செய்துகொண்டே இருக்கும். ஒருவேளை குறைந்தால், எலும்புகளிடமிருந்து எடுத்துக்கொள்ளும். அதிகமானால், எலும்பிலேயே சேர்த்துவிடும். தொடர்ந்து பலகாலம் உங்களுடைய உணவில் கால்சியம் சத்து குறைவாகவே இருந்தால், ரத்தமானது எலும்புகளிலிருந்து கால்சியத்தை எடுத்துக் கொண்டே இருக்கும். ஒருகட்டத்தில் எலும்புகளுக்குத் தேவையான கால்சியம் சத்து கிடைக்காமல் பலவீனமடைய ஆரம்பிக்கும். மெனோபாஸ் நேரத்தில் ஈஸ்ட்ரோஜென் குறைய ஆரம்பிப்பதால் கால்சியம் சத்தை கிரகிக்க முடியாமல் எலும்புகள் பலவீனமடைய ஆரம்பிக்கும். இந்த நேரத்தில்தான் ஆஸ்டியோபீனியா, ஆஸ்டியோ பொரோசிஸ் போன்ற பிரச்னைகள் வர ஆரம்பிக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *