ஹர்வீந்தர் சிங்கிற்கு ஒன்றரை வயது இருக்கும் போது, டெங்குவால் பாதிக்கப்பட்டார். அவரின் சிகிச்சைக்காக ஊசிகள் தேவைப்பட்டன. துரதிர்ஷ்டவசமாக, அந்த ஊசிகள் அவருக்கு பக்க விளைவுகளை ஏற்படுத்தியது.
மாற்றுத்திறனாளிகளுக்கான 17-வது பாராஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற்று வருகிறது. கடந்த 28 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வரும் இந்த தொடரில் உலகம் முழுவதில் இருந்து 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 84 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதில், இந்தியா இதுவரை 5 தங்கம், 9 வெள்ளி, 10 வெண்கலம் என மொத்தம் 24 பதக்கங்களை வென்றுள்ளது.
இந்நிலையில், பாரிஸ் பாராஒலிம்பிக் ஆண்கள் வில்வித்தை இறுதிப் போட்டியில் போலந்து வீரர் லூகாஸ் சிசெக்கை 6-0 என்ற கணக்கில் வீழ்த்தி இந்திய வீரர் ஹர்வீந்தர் சிங் வெற்றி பெற்றார். இதன் மூலம் பாரா ஒலிம்பிக் வில்வித்தையில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை ஹர்வீந்தர் சிங் படைத்தார்.
ஹர்விந்தர் சிங் காலிறுதியில் கொலம்பியாவின் ஹெக்டர் ஜூலியோ ராமிரெஸை 6-2 என்ற கணக்கில் தோற்கடித்தார். பின்னர், அரையிறுதியில் ஈரானின் முகமது ரெசா அரபு அமெரியை 7-3 வென்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். இந்த இறுதிப் போட்டியில், அவர் மிகச் சிறப்பாக செயல்பட்டார். மூன்று செட்களில் ஒரு புள்ளி கூட எடுக்க இடம் அவர் கொடுக்கவில்லை.
யார் இந்த ஹர்விந்தர் சிங்?
ஹர்விந்தர் சிங் ஹரியானா மாநிலம் கைதால் மாவட்டத்தில் உள்ள அஜித் நகர் கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர்.
தனது இளம் வயதிலேயே ஏராளமான துன்பங்களைச் சந்தித்தார். அவருக்கு ஒன்றரை வயது இருக்கும் போது, டெங்குவால் பாதிக்கப்பட்டார். அவரின் சிகிச்சைக்காக ஊசிகள் தேவைப்பட்டன. துரதிர்ஷ்டவசமாக, அந்த ஊசிகள் அவருக்கு பக்க விளைவுகளை ஏற்படுத்தியது. அதனால், அவரது கால்கள் செயல்பாட்டை இழந்தன.
இந்த பின்னடைவு இருந்தபோதிலும், அவர் 2012 இல் லண்டன் பாராலிம்பிக்ஸைப் பார்க்கும்போது வில்வித்தையில் ஆர்வத்தைக் கண்டுபிடித்தார். அவரது திறமையை உணர்ந்து, அவரது பயிற்சியாளர் அவரை 2017 இல் பாரா வில்வித்தை உலக சாம்பியன்ஷிப்பில் அறிமுகம் செய்ய வழிகாட்டினார். அங்கு அவர் 7வது இடத்தைப் பிடித்தார். 2018 ஆம் ஆண்டில், ஜகார்த்தா ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றதன் மூலம் மேலும் வெற்றியைப் பெற்றார்.
கொரோனா வைரஸ் தொற்றுநோயால் அமல்படுத்தப்பட்ட லாக்டவுன் போது, ஹர்விந்தர் சிங்கின் தந்தை தனது பண்ணையை வில்வித்தை பயிற்சி களமாக மாற்றி தனது மகனை உலகத் தரம் வாய்ந்த வில்வித்தை வீரராக மாற்ற வேண்டும் என்கிற லட்சியம் கொண்டார்.
அவரது விளையாட்டு சாதனைகளுடன், ஹர்விந்தர் பாட்டியாலாவில் உள்ள பஞ்சாபி பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் பிஎச்டி படிப்பையும் மேற்கொண்டு வருகிறார்.
டோக்கியோ பாராலிம்பிக்ஸில் ஹர்விந்தர் வெண்கலம் வென்று வரலாறு படைத்தார். இது பாராலிம்பிக்ஸில் இந்தியாவின் முதல் வில்வித்தை பதக்கமாகும். தற்போது 2முறையாக பாரிஸில் தங்கம் வென்று மீண்டும் வரலாறு படைத்துள்ளார்.
ஹர்விந்தர் சிங்கின் சாதனைகள்:
டோக்கியோ பாராலிம்பிக்ஸ் (2020) – வெண்கலப் பதக்கம்
ஆசிய பாரா விளையாட்டு 2022 (2023) – ஆண்கள் அணியில் வெண்கலப் பதக்கம்
ஆசிய பாரா விளையாட்டு (2018) – தங்கப் பதக்கம்
ஆசிய பாரா சாம்பியன்ஷிப் (2023) – ஆண்கள் அணியில் வெள்ளிப் பதக்கம்.
நன்றி indianexpress