mayer

சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில், பா.ஜ.க கவுன்சிலரான உமா ஆனந்த், “கலைஞர் கருணாநிதியின் பெருமையை நாங்கள் போற்றுகிறோம். தமிழ்நாட்டின் தன்னிகரற்ற தலைவருக்கு நூற்றாண்டு நாணயம் வெளியிட்டத்தில் நாங்கள் பெருமையாகவும், அவருக்கு செய்யும் மரியாதையாகவும் நினைக்கிறோம்!” என்றார்.

சென்னை மாநகராட்சி மாதாந்திர மாமன்றக் கூட்டத்தில் தி.மு.க கூட்டணிக் கட்சிகள் ஒருவருக்கொருவர் கருத்துமோதிக்கொண்டு வெளிநடப்பு செய்தது முதல் பா.ஜ.க. கவுன்சிலர் தி.மு.க அரசைப் புகழ்ந்து பாராட்டியதுமாக எதிரும் புதிருமாக நடந்துமுடிந்திருக்கிறது.
 

பெருநகர சென்னை மாநகராட்சியின் ஆகஸ்ட் மாத மாமன்றக் கூட்டம் மேயர் பிரியா தலைமையில் ரிப்பன் கட்டட மாமன்றக் கூட்டரங்கில் நேற்று(29-08-2024) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், துணை மேயர் மகேஷ்குமார், சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன் ஐ.ஏ.எஸ், நிலைக்குழுத் தலைவர்கள், மண்டலக் குழுத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்டப் பலரும் கலந்துகொண்டனர். கூட்டத்தின் முதல்நிகழ்வாக வயநாடு நிலச்சரிவுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு அனுதாபம் தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து 15 மண்டலங்களையும் சேர்ந்த பல்வேறு கட்சிகளின் கவுன்சிலர்கள் தங்கள் வார்டுகளிலுள்ள பிரச்னைகள், கோரிக்கைகள் குறித்துப் பேசினர்.

“பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று நத்தம் புறம்போக்கு நிலத்திலிருக்கும் வீடுகளுக்கும் வரி விதிக்க வேண்டும்” என தி.மு.க கவுன்சிலர்கள், கோரிக்கை விடுத்தனர். குறிப்பாக, தி.மு.க நிலைக்குழுத் தலைவர் விஸ்வநாதன், “சென்னை மாநகராட்சியில் மூன்று கமிஷனர்கள் மாறிய பின்பும் இதற்கு இன்னும் தீர்வு கிடைக்கவில்லை; இதனால் ஒரு லட்சம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுவருகின்றனர்” என்றார். அதற்கு பதிலளித்த மேயர் பிரியா, “இது தமிழ்நாடு அரசு சம்மந்தப்பட்டது. நாம் இதில் எதுவும் செய்ய முடியாது” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *