doctor

Fees of MBBS/BDS in Tamil Nadu 2024 :  தமிழ்நாட்டில் எம்.பி.பி.எஸ் மருத்துவப் படிப்புகளுக்கு என்று மொத்தம் 36 அரசு கல்லூரிகள், 22 தனியார் கல்லூரிகள் மற்றும் சென்னையில் அமைந்துள்ள இஎஸ்ஐ மருத்துவ கல்லூரி உள்ளது. பல் மருத்துவ படிப்பிற்கு 3 அரசு கல்லூரிகள், 20 தனியார் கல்லூரிகள் உள்ளன. இங்கு உள்ள சுமார் 10,462 இளநிலை மருத்துவ இடங்கள் தமிழ்நாடு அரசினால் நிரப்பப்படுகிறது. நீட் நுழைவு தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு, இந்த இடங்கள் கலந்தாய்வின் மூலம் நிரப்பப்படுகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் கட்டண விவரம் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

Fees structure of Medical Colleges In Tamil Nadu 2024 : தமிழ்நாட்டில் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் மருத்துவப் படிப்புகளுக்கான 2024-25 கல்வி ஆண்டிற்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் மருத்துவப் படிப்புகளுக்கு உள்ள 10,462 இடங்கள் கலந்தாய்வின் மூலம் நிரப்பப்படுகிறது. அந்த வகையில், மருத்துவ கல்லூரிகளுக்கான கட்டணம் விவரங்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

தமிழ்நாட்டில் எத்தனை மருத்துவ இடங்கள் உள்ளன?

தமிழ்நாட்டில் மொத்தம் 36 அரசு மருத்துவ கல்லூரிகள், சென்னையில் அமைந்துள்ள இஎஸ்ஐ மருத்துவ கல்லூரி, 22 தனியார் மருத்துவ கல்லூரிகள் உள்ளன. மேலும், 3 அரசு பல் மருத்துவ கல்லூரிகள், 20 தனியார் பல் மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இங்கு உள்ள எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளுக்கான இடங்களில் 15% இடங்கள் அகில இந்திய ஒதுக்கீடு கீழ் நிரப்பப்படும். அது தவிர மீதமுள்ள 85% இடங்கள் தமிழக அரசினால் நிரப்பப்படும். அதன்படி, எம்.பி.பி.எஸ் படிப்பிற்கு 6,630 இடங்களும், பி.டி.எஸ் படிப்பிற்கு 1,683 இடங்களும் உள்ளன. இதில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீடு கீழ் 496 எம்.பி.பி.எஸ் இடங்கள் மற்றும் 126 பி.டி.எஸ் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இவை தவிர, தனியார் கல்லூரி மேனேஜ்மெண்ட் ஒதுக்கீட்டில் 1,719 எம்.பி.பி.எஸ் இடங்கள் மற்றும் 430 பி.டி.எஸ் இடங்கள் உள்ளன.

தமிழ்நாட்டில் அரசு மருத்துவ கல்லூரிகள் இடங்கள் மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீடு இடங்கள், மேனேஜ்மெண்ட் இடங்கள், என்ஆர்ஐ இடங்கள் அரசினால் நடத்தப்படும் கலந்தாய்வின் மூலம் நிரப்பப்படும். மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகத்தின் தேர்வு குழுவின் மூலம் இந்த இடங்கள் நிரப்பப்படுகிறது. கூடுதலாக, 4 தனியார் பல்கலைக்கழகங்கள் மற்றும் சென்னை கே.கே.நகரில் அமைந்துள்ள இஎஸ்ஐசி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 85% இடங்களும் அரசினால் கலந்தாய்வின் மூலம் நிரப்பப்படுகிறது.

அரசு மருத்துவ கல்லூரிக்கான எம்.பி.பி.எஸ் கட்டணம் விவரம் :

அரசு கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படிப்பிற்கு, கல்வி கட்டணம் ரூ.6,000, சிறப்பு கட்டணம் ரூ.2,000, அவசரநிலை வைப்பு தொகை ரூ.1,000, நூலக கட்டணம் ரூ.1,000, பல்கலைக்கழக கட்டணம் ரூ.7,473, எல்ஐசி காப்பீடு கட்டணம் ரூ.300, ரெட் கிராஸ் கட்டணம் ரூ.100, கொடி நாள் ரூ.100 மற்றும் இதர கட்டணங்கள் ரூ.100 இணைத்து மொத்தம் ரூ.18,073 மட்டுமே ஆண்டுக்கு வசூலிக்கப்படும். இதில் எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு ரூ.12,073 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னை கே.கே. நகர் இஎஸ்ஐசி மருத்துவ கல்லூரியில் ரூ.1,00,000 லட்சம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அரசு பல் மருத்துவ கல்லூரி கட்டண விவரம் :

கல்வி கட்டணம் ரூ.4,000, சிறப்பு கட்டணம் ரூ.2,000, அவசரநிலை வைப்பு தொகை ரூ.1,000, நூலக கட்டணம் ரூ.1,000, பல்கலைக்கழக கட்டணம் ரூ.7,473, எல்ஐசி காப்பீடு கட்டணம் ரூ.300, ரெட் கிராஸ் கட்டணம் ரூ.100, கொடி நாள் ரூ.100 மற்றும் இதர கட்டணங்கள் ரூ.100 இணைத்து மொத்தம் ரூ.16,073 மட்டுமே ஆண்டுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு ரூ.12,073 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தனியார் மருத்துவ கல்லூரி எம்.பி.பி.எஸ் கட்டண விவரம் :

தனியார் மருத்துவ கல்லூரிகளில் தமிழ்நாடு அரசின் கட்டண குழு நிர்ணயித்த கட்டணம் அடிப்படையில் தான் கட்டண அமைப்பு இருக்கும். அந்த வகையில், 2024 -25 கல்வி ஆண்டிற்கான கட்டணமாக தமிழ்நாட்டில் உள்ள 21 தனியார் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீடு இடங்களுக்கு (Government Quota) ரூ. 4,35,000 முதல் 4,50,000 வரை கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதுவே, மேனேஜ்மெண்ட் கோட்டாவிற்கு (Management Quota) என்றால் ரூ.13,50,000 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தனியார் பல் மருத்துவ கல்லூரி கட்டண விவரம் :

பல் மருத்துவ கல்லுரிகளில் அரசு ஒதுக்கீடு இடங்களுக்கு (Government Quota) ரூ.2,50,000 மற்றும் மேனேஜ்மெண்ட் கோட்டாவிற்கு (Management Quota) ரூ.6,00,00 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

குறைந்த கட்டணம் வசூலிக்கும் தனியார் கல்லூரி – வேலூர் சிஎம்சி

தமிழ்நாட்டில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ் படிப்பிற்கு ரூ.4,50,000 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரே ஒரு தனியார் கல்லூரிக்கு மட்டும் வெறும் ரூ.56,330 ஆண்டிற்கான கட்டணமாக உள்ளது. அகில இந்திய அளவில் தலைசிறந்த மருத்துவ கல்லூரிகளில் வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி 3ஆம் இடம்பிடித்துள்ளது. இங்கு மொத்தம் எம்.பி.பி.எஸ் படிப்பிற்கு 100 இடங்கள் உள்ளது. அதில் 50% அரசு ஒதுக்கீடு இடங்கள் உள்ளன.

குறைந்த கட்டணம் வசூலிக்கும் அரசு கல்லூரிகள் :

மருத்துவப் படிப்புகளில் அதிக இடங்கள் கொண்ட அரசு கல்லூரிகளில் தான் குறைந்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதில் தலைசிறந்த கல்லூரிகளில் பட்டியலில் அகில இந்திய அளவில் சென்னை மருத்துவ கல்லூரி 10வது இடத்தில் உள்ளது. இங்கு எம்.பி.பி.எஸ் மருத்துவப் படிப்பிற்கு அரசு நிர்ணயித்த கட்டணமாக ரூ.16,073 மட்டுமே வசூலிக்கப்படுகிறது. அதே போன்று, தேனி அரசு மருத்துவ கல்லூரி, மதுரை அரசு மருத்துவ கல்லூரி, தஞ்சாலூர் அரசு மருத்துவ கல்லூரி, சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் கடலூரில் உள்ள ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி சிறந்த மருத்துவ கல்லூரிகளாக இருக்கின்றன.

தனியார் பல்கலைக்கழகத்திற்கான கட்டணம் :

அரசு கட்டண குழுவின் படி, தனியார் பல்கலைக்கழகத்தின் மருத்துவ கல்லூரிகளுக்கு அரசு ஒதுக்கீடு இடங்களுக்கு ரூ.5,40,000 மற்றும் மேனேஜ்மெண்ட் இடங்களுக்கு ரூ.16,20,000 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டில் உள்ள 13 நிகர் நிலைப் பல்கலைக்கழகங்கள் (Deemed University) இடம்பெறாது.

கட்டண விலக்கு யாருக்கு?

மருத்துவப் படிப்புகளில் தனியார் கல்லூரிகளில் சேரும் எஸ்சி/எஸ்டி/ எஸ்சிஏ பிரிவு மாணவர்களின் பெற்றோர்களின் வருட வருமானம் ரூ.2.5 லட்சத்திற்கு கீழ் இருக்கும்பட்சத்தில், அவர்களுக்கு கல்வி கட்டணம் மற்றும் திருப்பிப்பெறப்படாத கட்டணம் ஆகியவற்றில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. அதே போன்று, கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய எஸ்சி​/எஸ்டி/ எஸ்சிஏ பிரிவு மாணவர்களின் பெற்றோர்களின் வருட வருமானம் ரூ.2.5 லட்சத்திற்கு கீழ் இருக்கும்பட்சத்தில், அவர்களுக்கும் கட்டண விலக்கு அளிக்கப்படுகிறது.
 
 
 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *