supreme court

டாக்கா: வங்கதேசத்தில் இடஒதுக்கீடு தொடர்பான போராட்டங்கள் வன்முறையாக வெடித்த நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில் அந்நாட்டின் மூத்த அரசியல் தலைவர்கள், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு நெருக்கமாக இருந்தவர்கள் பலரும் கைது செய்யப்பட்டு வருகின்றனர். நேற்று, வங்கதேச உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி, இந்திய எல்லையில் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

இந்தியாவின் பக்கத்து நாடான வங்கதேசத்தில், இடஒதுக்கீடு தொடர்பான விவகாரத்தில் மாணவர் போராட்டம் வெடித்தது. அந்நாட்டின் சுதந்திர போராட்டத்தில் பங்கேற்று உயிர் நீத்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு பணிகளில் 30 சதவிகிதம் வரை இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

இது தவிர சமூக, பொருளாதாரத்தில் பின்தங்கிய மாவட்டங்களை சேர்ந்தவர்கள், பெண்களுக்கு 10 சதவிகிதம், மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறுபான்மையினர் என மொத்த இடஒதுக்கீடு 56%ஐ கடந்திருக்கிறது. வங்க தேசத்தை பொறுத்த வரையில் ஒவ்வொரு ஆண்டும் அரசு துறையில் 3,000 காலிப்பணியிடங்கள் உருவாகின்றன. இதற்கு 4,00,000 பேர் விண்ணப்பிக்கின்றனர். எனவே, வேலை வாய்ப்புக்கு அதிக போட்டி ஏற்பட்டு வருகிறது. இந்த போட்டிக்கு மத்தியில் 56% பணியிடங்கள் இடஒதுக்கீடு மூலமாக நிரப்பப்பட்டுவிடுகிறது. 

இது அந்நாட்டு மாணவர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. முக்கிய துறைகளில் திறமையானவர்கள் வருவதில்லை என்று புலம்பி வந்திருக்கின்றனர். இதற்காக தொடர் போராட்டங்கள் நடந்து வந்திருக்கிறது. போராட்டங்கள் உச்சக்கட்டத்தை எட்டும்போது அந்நாட்டு அரசு இடஒதுக்கீட்டில் சில மாற்றங்களை ஏற்படுத்தும். இப்படியாக கடந்த 2018ல் இந்த இடஒதுக்கீட்டை அந்நாட்டு அரசு ரத்து செய்திருந்தது.

இதற்கு பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியின் மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதேநேரம், இடஒதுக்கீடு ரத்துக்கு மற்ற மாணவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இப்படி இருக்கையில் அந்நாட்டின் உயர்நீதிமன்றம் இடஒதுக்கீடு ரத்து செல்லாது என்று அறிவித்தது. இது இந்த இரண்டு மாணவர் குழுக்களுக்கு இடையேயான போராட்டத்தை தீவிரப்படுத்தியது. பல இடங்களில் போராட்டங்கள் வன்முறையாக வெடித்திருக்கிறது.

இதனை அடக்க காவல்துறை மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையிலும், வன்முறையிலும் 300க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 1000க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். வன்முறையையடுத்த ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார். தற்போது அங்கு, நோபல் பரிசு பெற்ற முகமது யூனூஸ் தலைமையில் இடைக்கால ஆட்சி நடைபெற்று வருகிறது. 

அவாமி லீக் கட்சியின் மூத்த தலைவர்கள், பிரதமரின் ஆலோசகர்கள், முக்கிய அமைச்சர்கள் என பலர் தொடர்ச்சியாக கைது செய்யபட்டிருக்கின்றனர். அதேபோல உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பதவி விலக வேண்டும் என்று அந்நாட்டு மாணவர்கள் வலியுறுத்திய நிலையில், நீதிபதிகளும் சமீபத்தில் பதவி விலகியிருந்தனர்.

நன்றி oneindia

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *