neeraj

பாரிஸில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளில், ஈட்டி எறிதலுக்கான இறுதிப் போட்டியில் பங்கேற்ற நாடுகளில் இந்தியாவும் பாகிஸ்தானும் இடம் பெற்றிருந்தது.

ஏற்கனவே டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற இந்தியாவின் நீரஜ் சோப்ரா இந்த முறை தங்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், பாகிஸ்தானை சேர்ந்த அர்ஷத் நதீம் 92.97 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி எறிந்து தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். நீரஜ் சோப்ரா 89.45 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி எறிந்து, இரண்டாம் இடம் பிடித்து வெள்ளியை உறுதி செய்தார்.

“அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் ஒரு நாள் வரும். இன்று நதீமின் நாள். விளையாட்டு வீரர்களின் உடல் மாறுபடும். இன்று அர்ஷதுக்கு எல்லாம் சிறப்பாக அமைந்தது,” என்று குறிப்பிட்டார் நீரஜ் சோப்ரா.

தன்னுடைய மகன் வெள்ளி பதக்கம் வென்றிருப்பது குறித்து பேசிய நீரஜின் தாயார் சரோஜ் தேவி, “நாங்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளோம். எங்களுக்கு வெள்ளியும் தங்கமும் ஒன்றுதான். தங்கம் வென்ற நதீமும் என் மகன் தான். அதற்காக அவர் கடுமையாக உழைத்திருக்கிறார்,” என்று நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானும் இந்தியாவும் இறுதிப் போட்டியில் பங்கேற்றதால் பல்வேறு விவாதங்கள் போட்டிக்கு முன்பே துவங்கியிருந்தன.

இருவரும் பதக்கங்களை வென்ற பிறகு, சமூக வலைதளங்களில், பொதுமக்கள் மற்றும் பிரபலங்கள் இது குறித்த கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

பாகிஸ்தான் ஊடகங்கள் சொல்வது என்ன?

பாகிஸ்தானின் ஜியோ டிவியின் இணையதளத்தில் முதல் மூன்று முக்கிய செய்திகள் நதீமை பற்றி மட்டுமே பேசுகிறது.

முதல் செய்தியின் தலைப்பு, “ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற அர்ஷத் நதீம், முடிவுக்கு வந்த நாற்பது ஆண்டு கால கனவு,” என்று இருந்தது.

இந்த செய்தியில், நீரஜ் சோப்ரா தன்னுடைய இரண்டாவது தங்க பதக்கத்திற்காக காத்திருந்ததாகவும், போட்டியின் முடிவில் அவர் 89.45 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி எறிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார் என்றும் குறிப்பிட்டிருந்தது.

இரண்டாவது செய்தியின் தலைப்பு,” நாட்டின் பெருமை. நதீமை வாழ்த்திய பாகிஸ்தான்,” என்று இருந்தது.

இந்த செய்தியில் நதீமின் அம்மா இந்த வெற்றி குறித்து பேசியதை குறிப்பிட்டிருந்தது ஜியோ டிவி.

“நான் என்னுடைய மகனின் வெற்றிக்காக பிரார்தனை செய்தேன். மொத்த நாடும் என்னுடைய மகனின் வெற்றிக்காக பிரார்தனை செய்தது,” என்றார்.

பாகிஸ்தான் செய்தி இணையமான டான் (Dawn)-ன் முகப்பு பக்கத்தை திறந்தால், அங்கே நீங்கள் வண்ணமயமான ரிப்பன்கள் பறப்பதை பார்க்க இயலும்.

மகிழ்ச்சிகரமான நாட்களின் போது இது போன்ற ரிப்பன்கள் கொண்ட கிராஃபிக்ஸை இணையத்தில் பயன்படுத்துவது வழக்கம்.

முடிவுக்கு வந்த நாற்பது ஆண்டுகால காத்திருப்பு

“ஒலிம்பிக் பதக்கத்திற்காக 40 ஆண்டுகள் காத்திருந்த பாகிஸ்தானின் காத்திருப்பை முடிவுக்கு கொண்டுவந்த அர்ஷத்,” என்ற தலைப்பில் டான் செய்தி வெளியிட்டிருந்தது.

நீரஜ் மற்றும் அர்ஷத் பற்றி குறிப்பிட்டிருந்த செய்தியில், ”இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையேயான போட்டியை இந்த இறுதி போட்டி கண்டது. பல ஆண்டுகளாக நதீமும் சோப்ராவும் இறுதிப் போட்டியில் பங்கேற்று வந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் சோப்ரா தங்கம் வென்றார் நதீம் வெள்ளியை தட்டிச் சென்றார்,” என்று எழுதியிருந்தது.

டானின் முகப்பு பக்கத்தில் வெளியான செய்திகள் அனைத்தும் நதீம் பற்றியதாகவே இருந்தது. பாகிஸ்தான் மக்கள் இந்த வெற்றியை ஆரவாரமாக கொண்டாடும் காட்சிகளையும் வெளியிட்டிருந்தது டான்.

பாகிஸ்தானின் மற்றொரு செய்தி இணையதளமான தி எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூனும் இந்த வெற்றி குறித்து செய்தி வெளியிட்டுள்ளது

”தங்கம் வென்ற நதீம். பாகிஸ்தானின் 32 ஆண்டுகால வறட்சி முடிவுக்கு வந்தது. ” என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த 40 ஆண்டுகளில் தனி நபரால் பெறப்பட்ட முதல் தங்கம் இதுவாகும். 32 ஆண்டுகளில் பாகிஸ்தான் பெற்ற முதல் பதக்கமும் இதுவே.

1992ம் ஆண்டு பார்சிலோனாவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் பாகிஸ்தானின் ஹாக்கி அணி வெண்கல பதக்கம் வென்றது.

பாகிஸ்தான் தலைவர்கள் கூறியது என்ன?

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிஃப், “சிறப்பான ஆட்டம் அர்ஷத். வரலாற்று சாதனை. பாகிஸ்தானின் முதல் ஈட்டி எறிதல் சாம்பியன் அர்ஷத் நதீம் பாரிஸில் இருந்து தங்க பதக்கத்தை கொண்டு வருகிறார். மொத்த நாட்டையும் பெருமைப்பட வைத்துள்ளார்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் பிரதமர் இம்ரான் கான், “பாகிஸ்தானுக்கு தங்கம் பெற்றுத் தந்த அர்ஷத்துக்கு வாழ்த்துகள். தடகள போட்டிகளில் பாகிஸ்தானை சேர்ந்த தனி நபர் ஒருவர் தங்கம் வெல்வது இதுவே முதன்முறை,” என்று குறிப்பிட்டிருந்தார்.

இன்ஸ்டகிராமில் பதிவிட்ட பிலாவல் பூட்டோ சர்தாரி, ”ஒலிம்பிக் சாதனையை 92.97 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து முறியடித்த அர்ஷத் நதீமுக்கு வாழ்த்துகள். பாகிஸ்தானுக்கு தங்கம்… எங்கள் அனைவரையும் பெருமையடைய வைத்துவிட்டார்,” என்று குறிப்பிட்டிருந்தார்.

எக்ஸ் தளத்தில் ஒருவரது பதிவை மறுப்பதிவு செய்துள்ள பாகிஸ்தானின் பி.எம்.எல் – என் கட்சி, இரண்டு முறையும் எங்கள் கட்சியில்தான் ஆட்சியில் இருந்தது என குறிப்பிட்டுள்ளது

அந்த பதிவில், இம்ரான் கான் தலைமையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி உலகக் கோப்பை வென்ற போது எடுத்த புகைப்படமும், அர்ஷத் நதீமின் புகைப்படமும் இடம் பெற்றிருந்தது

பொதுமக்கள் கூறுவது என்ன?

ஃபகர் ஸமான் என்பவர் சமூக வலைதளத்தில் அர்ஷதுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார் மேலும், “பாகிஸ்தான் உங்கள் வெற்றியால் பெருமிதம் அடைந்துள்ளது,” என்று குறிப்பிட்டிருந்தார்.

நீரஜ்ஜின் அம்மா இந்த வெற்றி குறித்து பேசிய வீடியோவை பதிவு செய்த பாகிஸ்தானின் ஊடகவியலாளர், இதிஷம் உல் ஹக், “இந்த அழகான செய்திக்கு நன்றி அம்மா,” என்று குறிப்பிட்டிருந்தார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கம், ” பாரிஸில் வரலாறு படைக்கப்பட்டுள்ளது. 1984ம் ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தான் பெற்ற முதல் தங்கம் இது,” என்று குறிப்பிட்டிருந்தது.

மலலா யூசுஃசாய் எக்ஸ் பக்கத்தில் நதீமுக்கு வாழ்த்துகளை பதிவு செய்தார். “நீங்கள் வரலாறு படைத்துள்ளீர்கள். பாகிஸ்தானின் இளைஞர்கள் அவர்களின் கனவுகள் மீது நம்பிக்கை வைக்க நீங்கள் ஒரு உத்வேகமாக இருப்பீர்கள்,” என்று பதிவிட்டார்.

பிரான்ஸ் நாட்டுக்கான பாகிஸ்தான் தூதரகம், “என்ன ஒரு பெருமையான தருணம். அர்ஷத், எங்கள் அனைவரையும் பெருமையடைய வைத்துவிட்டார். வாழ்த்துகள்,” என்று எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தது.

கராச்சியை சேர்ந்த ஊடகவியலாளர், ஃபைசன் லகானி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், “இது போன்ற ஒரு நாளை என் வாழ்நாளிலும் நான் நினைத்துப் பார்க்கவில்லை. பாகிஸ்தான் தங்கம் வெல்ல வேண்டும் என்பது ஒரு கனவு போன்று இருந்தது. நன்றி அர்ஷத். இளைய தலைமுறையினரால் என்ன சாதிக்க இயலும் என்பதை நீங்கள் செய்துகாட்டியிருக்கிறீர்கள். வரலாறு படைத்ததற்கு நன்றி அர்ஷத்,” என்று குறிப்பிட்டிருந்தார்.

யார் இந்த அர்ஷத் நதீம்?

2016ம் ஆண்டு முதல் பாகிஸ்தானுக்காக சர்வதேச போட்டிகளில் பங்கேற்று வருகிறார் அர்ஷத் நதீம். ஆனால் 2019ம் ஆண்டில் இருந்து இவரின் ஆட்டம் அனைவராலும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது.

தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் 2016ம் ஆண்டு வெண்கலப் பதக்கம் வென்றார் அவர். அந்த போட்டி இந்தியாவின் குவாஹாட்டியில் நடைபெற்றது.

2018ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய போட்டியில் வெண்கலம் வென்றார். அந்த ஆண்டு கோல்ட் கோஸ்ட்டில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் எட்டாவது இடம்தான் பிடித்தார்.

ஆனால் 2019ம் ஆண்டு நேபாளத்தில் நடைபெற்ற தெற்காசிய போட்டிகள் அவரின் வாழ்வில் திருப்புமுனையாக அமைந்தது. 86.29 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி எறிந்து சாதனை படைத்தார். இதன் மூலம் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் தகுதிச் சுற்றுக்கும் அவரால் முன்னேற முடிந்தது.

நேரடியாக ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெற்ற பாகிஸ்தான் தடகள வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார். சமீப காலங்களில், பாகிஸ்தான் தடகள வீரர்கள் ‘வைல்ட் கார்ட் என்ட்ரி’ மூலம் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று வருகின்றனர்.

ஆனால் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில், 84.62 மீட்டருக்கு அப்பால் அவரால் செல்ல இயலவில்லை. அந்த போட்டியில் அவர் ஐந்தாவது இடம்தான் பிடித்தார். ஆனால், தன்னை எதிர்த்து போட்டியிடும் போட்டியாளர்களுக்கு சவாலாக இருப்பதை அவர் உறுதி செய்தார்.

பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்று தன்னுடைய கனவை நினைவாக்கியுள்ளார் அவர்.

 நன்றி BBC

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *