IPL

மும்பை: கடந்த ஐபிஎல் ஏலத்தின் போது ஆஸ்திரேலியா அணியின் மிட்சல் ஸ்டார்க் ரூ.24.75 கோடிக்கும், பேட் கம்மின்ஸ் ரூ.20.50 கோடிக்கும் கேகேஆர் மற்றும் ஐதராபாத் அணியால் வாங்கப்பட்டனர். அதற்கு முன்பு நடந்த ஐபிஎல் ஏலத்தில் இங்கிலாந்து அணியின் இளம் வீரர் சாம் கரண் ரூ.18.5 கோடிக்கு பஞ்சாப் அணியாலும், பென் ஸ்டோக்ஸ் ரூ.16.25 கோடிக்கு சிஎஸ்கே அணியாலும் வாங்கப்பட்டனர்.

இந்திய அணியின் உச்ச நட்சத்திரங்களை விடவும் அதிக தொகையை ஐபிஎல் தொடரின் மூலமாக வெளிநாட்டு வீரர்கள் ஊதியமாக பெற்று வருகின்றனர். இதற்கு வெளிநாட்டு வீரர்கள் கைப்பற்றும் யுக்தியே காரணமாக உள்ளது. அதாவது மெகா ஏலத்தில் பங்கேற்றால், இந்திய வீரர்களுக்கு தான் அதிகமான தொகை அளிக்கப்படும்.

இதனால் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா வீரர்கள் மிகவும் தெளிவாக மெகா ஏலத்தில் பங்கேற்காமல் மினி ஏலத்தில் மட்டுமே நேரடியாக வருவார்கள். ஆனால் இந்திய வீரர்களுக்கு இப்படியான வாய்ப்புகள் கிடையாது. இப்படித்தான் ஸ்டோக்ஸ், கம்மின்ஸ், சாம் கரண் உள்ளிட்டோர் அதிகளவிலான ஊதியத்தை பெற்று வந்தனர். இதுகுறித்து இந்திய வீரர் அஸ்வினே ஏராளமான முறை தனது யூட்யூப் சேனலில் பேசி இருக்கிறார்.

இந்த நிலையில் மும்பையில் நடந்த ஐபிஎல் உரிமையாளர்களின் கூட்டத்தில் இந்த விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது. அந்த விவாதத்தின் இறுதியில் 2 விதிகளை ஐபிஎல் நிர்வாகம் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. அதில் முதல் விதியாக, ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்ற பின், வெளிநாட்டு வீரர்கள் கடைசி நேரத்தில் விலக கூடாது. காயத்தை தவிர்த்து வேறு சரியான காரணம் இல்லாமல் ஐபிஎல் தொடரில் இருந்து விலகினால், அந்த வீரருக்கு 2 ஆண்டுகள் ஐபிஎல் தொடரில் தடை விதிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.அதேபோல் 2வது விதியாக, வெளிநாட்டு வீரர்கள் கட்டாயம் மெகா ஏலத்தில் பங்கேற்க பெயரினை பதிவு செய்வதை கட்டாயமாக்க வேண்டும்.

மெகா ஏலத்தில் பங்கேற்காமல் நல்ல ஊதியத்தை பெறுவதற்காக மினி ஏலத்தில் பங்கேற்பதை தவிர்க்க இந்த விதியை கொண்டு வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் பிசிசிஐ இந்த விவகாரத்தில் என்ன முடிவெடுக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. குறிப்பாக இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா வீரர்களை கட்டாயப்படுத்த முடியுமா என்ற கேள்வியும் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

நன்றி mykhel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *