சென்னை: காங்கிரஸ் கட்சி ஆளும் மாநில முதலைச்சர்கள் கூட ஸ்டாலின் அளவுக்கு மத்திய அரசை எதிர்க்கிறார்களா என்றால் எனக்கு சந்தேகம். ஒரு உயரிய கொள்கைக்காக பின்விளைவுகளுக்கு கவலைப்படாமல் மக்களுக்காகவே இருக்கக்கூடிய இயக்கமாக திமுக இருக்கும்போது அவர்களுக்கு உறுதுணையாக காங்கிரஸ் இருக்க வேண்டும் என ஒன் இந்தியா தமிழுக்கு அளித்துள்ள பிரத்யேக பேட்டியில் கூறியுள்ளார் காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன்.

காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் – காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் இடையே எழுந்துள்ள வார்த்தைப் போர் முற்றியுள்ளது. காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை பேச்சும் புயலைக் கிளப்பி உள்ளது. தமிழக காங்கிரஸ் கட்சியினர் இடையே ஏற்பட்டுள்ள இந்த முரண் பரபரப்பைக் கிளப்பி வருகிறது. இந்நிலையில், ஈவிகேஎஸ் இளங்கோவன் நமது ஒன் இந்தியா தமிழுக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்.


கேள்வி: காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தலைவர், தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை வளர்க்க வேண்டும் எனப் பேசுவது எப்படி சர்ச்சைக்குரிய விஷயமாக மாறுகிறது? ஈவிகேஎஸ் இளங்கோவன்: காங்கிரஸ் கட்சியை வளர்க்க வேண்டும் என யார் சொன்னாலும் நான் வரவேற்கிறேன். ஆனால், கூட்டணியில் இருக்கும் திமுகவிடம் அமைச்சரவையில் இடம் கேட்போம், அதிக சீட் கேட்போம் என பொதுவில் பேசுவது திமுக – காங்கிரஸ் கூட்டணியை பலவீனப்படுத்துவதாகும். உங்களுக்கு கருத்து இருந்தால் மேலிடத்தில் சொல்லலாம், அல்லது கட்சியினர் மத்தியில் விவாதிக்கலாம். ஆனால், பொதுவில் அதைப் பேசுவது சரியல்ல.

இன்றைக்கு திமுக – காங்கிரஸ் சேர்ந்திருப்பது தேர்தலில் வெற்றியடைய வேண்டும் என்பதற்காக மட்டுமல்ல, நாட்டில் மோடி தலைமையிலான பாசிச ஆட்சியை ஒழிக்க வேண்டும் என்பதற்காகத்தான். சாதியால், மதத்தால் மக்கள் சண்டை போட்டுக் கொள்ளக்கூடாது, மதச்சார்பற்ற கொள்கையோடு வாழ வேண்டும் என்ற உயரிய நோக்கத்துக்காகத்தான் திமுக – காங்கிரஸ் கூட்டணி இருக்கிறது. இந்தக் கூட்டணியை வலிமை இழக்கச் செய்யும் வகையில் பேசுவதை ஏற்க முடியாது.

நான் என்றென்றும் காங்கிரஸ்காரன். கட்சியின் நலன் காக்கப்பட வேண்டும் என்பதை விட நாட்டின் நலன் காக்கப்பட வேண்டும், நாட்டு மக்களின் நலன் காக்கப்பட வேண்டும் என்பதே இப்போதைக்கு முக்கியம். அதனால் தான், திமுகவோடு உயரிய கொள்கை அடிப்படையில் உறவில் இருக்கிறோம். இந்த கூட்டணிக்கு ஊறு விளைவிக்கும் வகையில் செயல்படக்கூடாது. காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்களை விட: பிரதமர் மோடியை மிகக் கடுமையாக விமர்சிக்கும் தலைவராக ஸ்டாலின் இருக்கிறார். காங்கிரஸ் கட்சி பல மாநிலங்களில் ஆண்டு கொண்டிருக்கிறது. அந்த முதலைச்சர்கள் கூட ஸ்டாலின் அளவுக்கு மத்திய அரசை எதிர்க்கிறார்களா என்றால் எனக்கு சந்தேகம். அப்படிப்பட்ட சூழலில், ஒரு உயரிய கொள்கைக்காக எந்தப் பின்விளைவுகளுக்கும் கவலைப்படாமல் மக்களுக்காகவே இருக்கக்கூடிய இயக்கமாக திமுக இருக்கும்போது அவர்களுக்கு ஒரு நெருடலைக் கொடுக்கக்கூடாது என்பதே எனது எண்ணம். ஒருகாலத்தில் காங்கிரஸ் கட்சியும் திமுகவும் எதிரெதிர் கட்சிகளாக இருந்தோம். இன்றைக்கு ஒன்றாக கூட்டணியில் இருக்கிறோம். காலச் சூழலுக்கு ஏற்ப, சந்தர்ப்பங்களுக்கு ஏற்ப, நாட்டு நடப்புகளுக்கு ஏற்ப விஷயமாக மாறுவது இயல்பு. நாட்டின் ஒருமைப்பாட்டுக்கே சவால் விடும் வகையில் செயல்படும் மத்திய பாஜக அரசுக்கு எதிராக திமுக குரல் கொடுத்து வருகிறது. அதற்கு நாம் துணையாக இருக்கவேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார் ஈவிகேஸ் இளங்கோவன்.
நன்றி tamil.oneindia

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *