மத்திய அரசு தயாராக இருக்கு.. முதல்வர் இப்படி பண்ணக்கூடாது - ஓபிஎஸ் வைத்த டிமாண்ட்

மத்திய அரசின் முழு பட்ஜெட் நேற்று முன் தினம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் பீகார் மற்றும் ஆந்திராவுக்கு சிறப்பு நிதி மற்றும் திட்டங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழகத்திற்கு எந்த திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை.

இதனால் பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டுவிட்டது எனக் கூறி, டெல்லியில் நாளை மறுநாள் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தை முதல்வர் புறக்கணித்தார். அதே சமயம் மாநிலங்களின் பெயர் குறிப்பிடப்படவில்லை என்பதற்காக புறக்கணித்து விட்டோம் என்று சொல்லிவிட முடியாது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்தார்.

இந்த சூழலில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில், “நிதி ஆயோக் கூட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் புறக்கணிப்பது தமிழ்நாட்டு வாக்காளப் பெருமக்களை வஞ்சிக்கும் செயல் ஆகும். நிதி ஆயோக் கூட்டத்தினை புறக்கணிக்கும் முடிவு தமிழ்நாட்டிற்கு, தமிழ்நாட்டு மக்களுக்கு எதிரான செயல் என்பதில் யாருக்கு மாறுபட்ட கருத்து இருக்க முடியாது” என்று குற்றம்சாட்டினார்.

மத்திய ஆட்சியில் 17 ஆண்டு காலம் அங்கம் வகித்த கட்சி திமுக, கல்வியை பொதுப் பட்டியலிலிருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்றவோ, வரிப் பகிர்வினை கூடுதலாக தமிழ்நாட்டிற்கு பெற்றுத் தரவோ, தமிழ்நாட்டிற்கு கூடுதல் நிதியைப் பெற்றுத் தரவோ எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டிய ஓபிஎஸ், வளமான இலாக்காக்களை பெறுவதிலேயே குறியாக இருந்தது திமுக என்றும் விமர்சித்தார்.

தற்போது தமிழ்நாட்டிற்கான திட்டங்களைத் தர மத்திய அரசு தயாராக இருப்பதாகவும், தமிழ்நாட்டின் ரயில்வே திட்டங்களுக்காக 6,300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு இருப்பதாகவும், இது காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ஒதுக்கப்பட்ட நிதியை விட ஏழு மடங்கு அதிகம் என்றும் சுட்டிக்காட்டினார்.

நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்டு தமிழ்நாட்டின் கருத்துகளை எடுத்துரைத்து வளர்ச்சிக்கு தேவையானதை கேட்டுப் பெறுவதே பொருத்தமாக இருக்கும் என்ற அவர், புறக்கணிப்பது என்பது தவறான நடவடிக்கையாகும் என்றார்.

மேலும், “தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான திட்டங்களை, நிதிகளை பெற பாரதப் பிரதமர் தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்டு, தமிழ்நாட்டிற்கு தேவையானவற்றை அங்கே ஆணித்தரமாக முன்வைத்து அவற்றை பெற்றிட முன்வர வேண்டும். இதுதான் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும்” என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தி உள்ளார்.
நன்றி Samayam Tamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *