ஈசிஆர் 120 பிளான் ரெடி… கூடவே தமிழ்நாடு கைக்கு வந்த 3 நெடுஞ்சாலை திட்டங்கள்… கைமாற்றி விட்ட NHAI!

தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தனது சுமையை குறைக்கும் வண்ணம் மூன்று பெரிய திட்டங்களை தமிழ்நாடு அரசின் நெடுஞ்சாலைத் துறை வசம் ஒப்படைத்துள்ளது. இதனை மாநில அரசு திறம்பட செயல்படுத்தி முடிக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஏற்கனவே திட்டமிட்டபடி ஈசிஆர் பிளானில் மும்முரம் காட்டி வருகிறது.
மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறையின் கீழ் செயல்படும் NHAI எனப்படும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நாடு முழுவதும் 50 ஆயிரம் கிலோமீட்டர் நீளத்திற்கு அதிகமான சாலை வசதிகளை நிர்வகித்து வருகிறது. தற்போது தங்க நாற்கர சாலைகள் முதல் ரிங் ரோடுகள் வரை பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி கொண்டிருக்கிறது.
இதில் தங்க நாற்கர சாலைகள் என்பது சென்னை, கொல்கத்தா, டெல்லி, மும்பை ஆகிய முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் நெடுஞ்சாலைகளை கட்டமைப்பது ஆகும். இந்நிலையில் தமிழ்நாட்டிற்குள்ளும் பல்வேறு சாலை திட்டங்களை NHAI செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் கிழக்கு கடற்கரை சாலையில் (ECR) தூத்துக்குடி முதல் கன்னியாகுமரி வரையிலான 120 கிலோமீட்டர் தூர சாலையை அகலப்படுத்தும் பணிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
நிலம் கையகப்படுத்துவதற்கு சுமார் 400 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த சாலையானது மாமல்லபுரம் முதல் நாகப்பட்டினம் வரையிலான ஈசிஆர் சாலையின் ஒரு பகுதி என்பது கவனிக்கத்தக்கது. இதுபோல் பல்வேறு சாலைப் பணிகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மேற்கொண்டு வருவதால் சுமை அதிகரித்து காணப்படுகிறது. எனவே சில திட்டங்களை மாநில அரசின் கைகளில் ஒப்படைத்தால் வேலை எளிதாக முடியும் என்று மத்திய அரசு கணக்கு போட்டது.
நான்கு வழித்தடமாக மாற்றம்

அதன்படி, வேலூர், திருவையாறு, வேட்டவலம் ஆகிய பகுதிகளில் பைபாஸ் சாலைகளை அமைக்கும் பொறுப்பு தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கான நிதியும் ஒதுக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக மூன்று முக்கியமான சாலைகளை 4 வழித்தடமாக மாற்றும் பொறுப்பை தமிழ்நாடு அரசின் தேசிய நெடுஞ்சாலைத்துறை பிரிவிடம் ஒப்படைத்துள்ளது. இதற்கான நிர்வாக ரீதியிலான செயல்பாடுகள் கடந்த ஆண்டு இறுதியில் இருந்தே தொடங்கிவிட்டன.
மூன்று முக்கிய சாலைகள்

இவை தூத்துக்குடி – கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலை, ராமநாதபுரம் – தனுஷ்கோடி சாலை, கோவை – சத்தியமங்கலம் சாலை ஆகியவை ஆகும். இதில் சத்தியமங்கலம் சாலையை கர்நாடகா எல்லை வரை இருவழிச் சாலையாக நீட்டித்து செல்லவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேற்சொன்ன திட்டங்கள் தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்ததும் வேலைகள் தொடங்கிவிடும்.

நன்றி samayam.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *