சென்னை: இந்த ஆண்டு தமிழகம் மற்றும் புதுச்சேரியில், தென்மேற்கு பருவமழை ஜூன், ஜூலை மாதங்களில் இயல்பை விட 55 சதவீதம் அதிகமாக பெய்துள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பா.செந்தாமரை கண்ணன் வெளியிட்ட அறிக்கை:
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகம், புதுச்சேரியில் இன்று இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த நிலை ஆகஸ்ட் 4ம் தேதி வரை தொடரலாம். சென்னையில் அடுத்த இரு நாட்களுக்கு வானம் மேகமூட்டமாக காணப்படும்; ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யலாம்.
மத்திய மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகள், வடக்கு வங்கக்கடலின் தெற்கு பகுதிகளில் மணிக்கு 55 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீச வாய்ப்புள்ளதால், மீனவர்கள் இங்கு செல்ல வேண்டாம்.
நெல்லையில் கூடுதல்
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை காலத்தில் சராசரியாக 32.80 செ.மீ., மழை பெய்யும். இந்தாண்டு தென்மேற்கு பருவமழை துவங்கிய ஜூன் 1 முதல், ஜூலை 29 வரையிலான காலகட்டத்தில், தமிழகம், புதுச்சேரியில் இயல்பை விட 55 சதவீதம் கூடுதலாக மழை பெய்துள்ளது. அதாவது, இந்த இரு மாதங்களில் வழக்கமாக, 11.5 செ.மீ., மழை பெய்ய வேண்டிய நிலையில், 17.9 செ.மீ., பெய்துள்ளது. அதேநேரத்தில், திருநெல்வேலி மாவட்டத்தில் 21.6 செ.மீ., மழை பெய்துள்ளது. இது, இயல்பு அளவான 3.8 செ.மீ.,யை விட, 4.58 சதவீதம் அதிகம்.
அரியலுார், கள்ளக்குறிச்சி, நாகப்பட்டினம், பெரம்பலுார், திருவாரூர், துாத்துக்குடி மாவட்டங்களில், இயல்பை விட குறைந்த அளவில் மழை பெய்துள்ளது. இவை தவிர்த்து, மற்ற அனைத்து மாவட்டங்களிலும், இயல்பை விட அதிக அளவில் மழை பெய்துள்ளது. சென்னை, நீலகிரி, ராணிப்பேட்டை, தேனி, திருநெல்வேலி, திருவள்ளூர் மாவட்டங்களில், 100 சதவீதத்துக்கு அதிகமாக மழை பெய்துள்ளது.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நன்றி dinamalar