ஐந்து நாடுகளைச் சேர்ந்த சிலம்பாட்ட வீரர்கள் பங்குபெற்ற உலக அமைச்சூர் சிலம்பப் போட்டியில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த சிலம்ப வீராங்கனைகள் அசத்தியுள்ளனர்.
தமிழர்களின் பாரம்பரிய மற்றும் புகழ்பெற்ற தற்காப்புக் கலை மற்றும் வீர விளையாட்டாகச் சிலம்பம் விளங்குகின்றது. இந்த விளையாட்டைக் கம்பு சுற்றுதல் என்றும் கூறுவர். இது தடியைக் கையாளும் முறை, கால் அசைவுகள், உடல் அசைவுகள் மூலம் தம்மைப் பாதுகாத்துக் கொள்ளுதல் எனப் பல கூறுகளைக் கொண்ட விரிவான ஓர் தற்காப்புக் கலை.
நன்கு பயிற்சி பெற்ற ஆட்டக்காரர்களே சிலம்பாட்டப் போட்டிகளில் விளையாடுவர். தற்போதைய காலகட்டத்தில் ஆண்கள், பெண்கள் என்று இருபாலரும் சிலம்பாட்டத்தைக் கற்று விளையாடி வருகின்றனர். திருவிழா, கோவில் விழாக்கள் மற்றும் ஊர்வலங்களில் சிலம்பாட்டம் தவறாது இடம் பெறும்.
சிலம்பம் தனி ஒருவராகவோ அல்லது இருவராகவோ அல்லது பலருடனோ ஆடப்படுகிறது. தனி ஒருவர் ஆடிக் காட்டுவது ‘தனிச்சுற்று’ எனப்படும். சிலம்பம் இருவர் போட்டியிடும் விளையாட்டாக நடைபெறுவதும் உண்டு.
தமிழரின் மரபு விளையாட்டான சிலம்பம் இந்தியாவைத் தாண்டி உலகம் முழுவதிலும் பரவி வருகிறது பல்வேறு நாடுகளிலும் தற்போது சிலம்பம் கற்பிக்கப்பட்டு விளையாடப்பட்டு வருகிறது. மேலும் சிலம்பம் விளையாட்டிற்கு என்று சர்வதேச அளவில் பல போட்டிகள் நடைபெற்று வருகிறது. அப்படி ஐந்து நாடுகளைச் சேர்ந்த சிலம்பாட்ட வீரர்கள் பங்குபெற்ற உலக அமைச்சூர் சிலம்பப் போட்டியில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த சிலம்ப வீராங்கனைகள் முதலிடத்தைப் பிடித்துள்ளனர்.
இதுகுறித்து சிலம்ப வீராங்கனைகள் அமிர்தா மற்றும் சூர்யா கூறுகையில், “நானும் எனது தங்கை சூர்யாவும் கடந்த மாதம் நடந்த உலக அமைச்சூர் சிலம்ப போட்டியில் ஆயுத ஜோடி பிரிவில் முதலிடம் பிடித்தோம். அதேபோன்று தனிநபர் ஸ்டிக் ஃபைட் போட்டியில் நான் முதலிடமும் எனது தங்கை மூன்றாவது இடமும் பிடித்தார்.
இதேபோன்று நாங்கள் முதலமைச்சர் கோப்பை சிலம்பப் போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்துள்ளோம். மேலும் நாங்கள் உலக அமைச்சூர் சிலம்ப கோட்டையில் பங்கேற்பதற்கான உதவிகளை அளித்த எங்கள் கோணம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
நாங்கள் 5ஆம் வகுப்பு முதல் சிலம்ப பயிற்சி எடுத்து வருகிறோம். இதற்காக எங்களது சிலம்ப பயிற்சி ஆசிரியர் குமார் 15 ஆண்டுகளாக இலவசமாகப் பயிற்சி அளித்து வருகிறார். எங்களது தந்தையும் சிலம்ப வீரர் தான், ஆகவே அவரிடம் இருந்து நன்றாக ஒத்துழைப்பு கிடைத்தது. அவரும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் எங்களுக்குச் சிலம்பு விளையாடச் சொல்லித் தருவார்.
இருப்பினும் குடும்ப சூழ்நிலை காரணமாகச் சிலம்பத்தில் முன்னேறிச் செல்வதற்கான நிதி ஆதாரம் எதுவும் கிடையாது. எங்களது கல்லூரி ஆசிரியர்கள் உதவியால் தான் உலகக்கோப்பை போட்டியில் எங்களால் பங்கேற்க முடிந்தது இதற்காக எங்கள் கல்லூரி நிர்வாகத்திற்கு நன்றி.
எங்களுடைய மைதானத்திற்குச் சிலம்பம் விளையாட வரும் பவித்ரா எனும் அக்கா தான் எங்களுக்கு முன்னோடியாக இருக்கிறார். அவர்தான் கடந்த ஆண்டு முதலமைச்சர் கோப்பை சிலம்பம் விளையாட்டுப் போட்டியில் மாநில அளவில் முதலிடம் பிடித்தது. அவரிடமிருந்தும் நாங்கள் நிறைய கற்றுக் கொண்டு வருகிறோம்.
சிலம்ப போட்டி இன்னும் துவக்க நிலையிலே இருப்பதாகவே நாங்கள் நினைக்கிறோம். இது இன்னும் வளர்ந்து வர வேண்டும், மக்களுக்கும் அதற்கான விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். எங்களது சிலம்பம் விளையாட்டு மைதானத்தில் 200க்கும் மேற்பட்டோருக்கு எங்களது சிலம்ப மாஸ்டர் இலவசமாகச் சிலம்பம் விளையாடச் சொல்லிச் சொல்லிக் கொடுக்கிறார்” எனத் தெரிவித்தனர்.
நன்றி news18