ஸ்ரீநகர்: காஷ்மீரில் சில வாரங்களில் சட்டசபை தேர்தல் நடக்கும் நிலையில், அங்கு தீவிர பிரச்சாரம் நடந்து வருகிறது. இதற்கிடையே பிரதமர் மோடி அங்கு பிரச்சார கூட்டத்தில் கலந்து கொள்ள நேரடியாக செல்கிறார். பிரதமர் மோடியின் வருகை பாஜகவினருக்கு உற்சாகத்தை தரும் என்று அங்குள்ள பாஜக தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
காஷ்மீரில் மூன்று கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் அங்கு முதல்முறையாக சட்டசபை தேர்தல் நடக்கும் நிலையில், அங்கு மிக தீவிரமாக பிரச்சாரம் நடந்து வருகிறது.
இதற்கிடையே இந்த ஜம்மு காஷ்மீர் தேர்தல் பிரச்சாரத்திற்காக இன்று பிரதமர் மோடி காஷ்மீர் சென்றுள்ளார். அங்கு அவர் தோடா மாவட்டத்தில் பொது கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பிரச்சாரம் செய்யவுள்ளார். இதற்காக அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 42 ஆண்டுகளில் முதல்முறை: அங்கு நடக்கும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரதமர் மோடி பிரச்சாரம் செய்கிறார். கடந்த 42 ஆண்டுகளில் தோடா பகுதிக்கு பிரதமர் ஒருவர் செல்வது இதுவே முதல்முறையாகும். தோடா நகரில் உள்ள மைதானத்தில் நடைபெறும் இந்த பிரச்சார கூட்டத்தை அமைதியாகவும் சுமூகமாகவும் நடத்த தோடா மற்றும் அருகே உள்ள கிஷ்த்வார் மாவட்டங்களில் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் பிரச்சாரம் குறித்து சுரங்கத்துறை அமைச்சரும் ஜம்மு & காஷ்மீருக்கான பாஜக தேர்தல் பொறுப்பாளருமான ஜி கிஷன் ரெட்டி கூறுகையில், “பிரதமர் மோடி தோடாவில் தனது முதல் தேர்தல் கூட்டத்தை நடத்துகிறார். கடந்த 42 ஆண்டுகளில் பிரதமர் பதவியில் இருக்கும் ஒருவர் இங்கு வருவது இதுவே முதல்முறையாகும். கடைசியாக 1982ம் ஆண்டில் தான் அப்போதைய பிரதமர் இப்பகுதிக்கு வந்திருந்தார்” என்று கூறினார்.
பிரதமர் மோடி பிரச்சாரம்: செனாப் பள்ளத்தாக்கின் தோடா, கிஷ்த்வார் மற்றும் ரம்பன் ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள எட்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கு வரும் செப்டம்பர் 18ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. இந்தச் சூழலில் தான் இங்கு போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி இங்கு பிரச்சாரம் செய்கிறார். கிஷன் ரெட்டி கருத்து: கிஷன் ரெட்டி மேலும் கூறுகையில், “2014 சட்டமன்றத் தேர்தலின் போது பிரதமர் மோடிகிஷ்த்வார் மாவட்டத்தில் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றினார். அதன் பிறகு மீண்டும் பிரதமர் மோடியை நேரில் பார்க்க மக்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள். பிரதமரின் வருகை காஷ்மீரில் பாஜகவின் வெற்றி வாய்ப்பை நிச்சயம் அதிகரிக்கும்” என்றார். காஷ்மீரை பொறுத்தவரை அங்கு செப்டம்பர் 18, செப்டம்பர் 25 மற்றும் அக்டோபர் 1 தேதிகளில் மூன்று கட்டங்களாக நடைபெறுகிறது.. அதைத் தொடர்ந்து அக்டோபர் 8ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. காஷ்மீரில் கடந்த 10 ஆண்டுகளில் சட்டசபை தேர்தல் நடப்பது இதுவே முதல்முறையாகும். கடந்த 2019ம் ஆண்டிலேயே அங்கு தேர்தல் நடந்திருக்க வேண்டும். இருப்பினும், சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டம் ரத்தால் அங்கு தேர்தல் நடக்கவில்லை.
முன்னதாக உள் துறை அமைச்சர் அமித் ஷாக கடந்த வாரம் சனிக்கிழமையும் அமைச்சர் ராஜ்நாத் சிங் ஞாயிற்றுக்கிழமையும் அங்கு பிரச்சாரம் செய்தது குறிப்பிடத்தக்கது.
நன்றி oneindia