சென்னை: மத்திய தொழில் பாதுகாப்பு படையில் காலியாக உள்ள 1,130 – பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மத்திய அரசு வேலை என்பதால் கை நிறைய சம்பளம் இந்த பணிக்கு வழங்கப்படுகிறது. காவல் பணியில் ஆர்வம் கொண்ட இளைஞர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டு இருந்த அறிவிப்பு தற்போது வெளியாகியிருக்கிறது.
சிஐஎஸ்எப் என்று அழைக்கப்படும் மத்திய தொழிற்பாதுகாப்பு படை உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்டுகிறது. சிஐஎஸ்எப் வீரர்கள் மத்திய அரசின் முக்கிய நிறுவனங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். அணு உலைகள், விண்வெளி ஆய்வு மையம், துறைமுகம், ஏர்போர்ட் உள்பட நாட்டின் மிக முக்கிய இடங்களில் சிஐஎஸ்எப் வீரர்களே பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
சிஐஎஸ்எப் -வீரர்கள் பணிக்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பு அவ்வப்போது வெளியாகும். மத்திய தொழிற்பாதுகாப்பு படை உரிய அறிவிப்பை வெளியிட்டு கல்வி தகுதி, உடல் தகுதி தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியான வீரர்களை தேர்வு செய்கிறது. அந்த வகையில் தற்போது 1,130 கான்ஸ்டபிள் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்த விவரங்களை பார்க்கலாம். காலிப்பணியிடங்கள்: தமிழ்நாட்டில் 39 இடங்கள் உள்பட நாடு முழுவதும் மொத்தம் 1,130 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. கான்ஸ்டபிள் / தீ அணைப்பு பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதி: சிஐஎஸ்எப் கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கு 12 ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதி பெற்றிருந்தால் விண்ணப்பிக்க முடியும். வயது வரம்பு: வயது வரம்பை பொறுத்தவரை விண்னப்பதாரர்கள் 30.09.2024ன் படி 18 வயது நிரம்பியவர்களாகவும், 23 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். வயது உச்ச வரம்பு தளர்வை பொறுத்தவரை எஸ்சி மற்றும் எஸ்டி விண்னப்பதாரர்களுக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வுகள் உண்டு.
சம்பளம் எவ்வளவு?: தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு லெவல் – 3 ன் படி மாதம் ரூ. 21,700 முதல் ரூ. 69,100 வரை சம்பளம் வழங்கப்படும்.
விண்ணப்ப கட்டணம்: எஸ்சி / எஸ்டி, முன்னாள் ராணுவத்தினருக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது. மற்றவர்கள், பொது பிரிவினர் ரூ.100 விண்ணப்ப கட்டணம் கட்ட வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி: இந்த தேர்வுக்கு ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். 31.08.2024 ஆம் தேதியில் இருந்து விண்ணப்பிக்க தொடங்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 30.09.2024 ஆகும்.
தேர்வு முறை: எழுத்து தேர்வு, உடல் தகுதி/ உடல் திறன் (PET/ PST), சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்து தேர்வை பொறுத்தவரை நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் நடைபெறும். சிபிடி எனப்படும் கணிணி வழி தேர்வாக இந்த தேர்வு நடைபெறும். தேர்வு மையங்கள் குறித்த அறிவிப்பு விண்ணப்பதாரர்களுக்கு உரிய நேரத்தில் தெரிவிக்கப்படும்.
தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முன்பாக தேர்வர்கள் தேர்வு அறிவிப்பினை ஒருமுறை படித்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்வு அறிவிப்பினை விண்ணப்பதாரர்கள் https://cisfrectt.cisf.gov.in/ – என்ற மத்திய தொழில் பாதுகாப்பு படையின் இணையதளம் வாயிலாக படித்து தெரிந்து கொள்ளலாம்.
நன்றி oneindia