100 கோடி சொத்து.. 5 ஸ்டார் ஓட்டல் போல்.. போலே பாபா வாழும் சொகுசு ஆசிரமம் பற்றி தெரியுமா?
By Velmurugan P
Published: Friday, July 5, 2024, 10:35 [IST]
டெல்லி: 13 ஏக்கரில் 5 ஸ்டார் ஓட்டலையே விஞ்சும் அளவுக்கு வசதிகளுடன் உத்தரப்பிரதேச மாநில சாமியார் போலே பாபா வாழும் சொகுசு ஆசிரமம் இருப்பதாக கூறப்படுகிறது. அந்த ஆசிரமத்தின் இடத்தின் மதிப்பு மட்டும் 4 கோடி என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. மொத்தம் 100 கோடி அளவிற்கு போலே பாபாவுக்கு சொத்துக்கள் இருக்கலாம் என்கிறார்கள்.
உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டம் சிக்கந்தரராவ் தாலுகாவில் உள்ள முகல்கடி என்ற கிராமத்தில், கடந்த செவ்வாய்க்கிழமை அன்று விஸ்வ ஹரி நாராயண் (எ) போலே பாபா நடத்திய ஆன்மிகக் கூட்டம் நடந்தது. அவரது காலடி மண்ணை எடுத்து நெற்றியில் பூசினால் நல்லது என்ற மூடநம்பிக்கையின் காரணமாக ஏராளமானோர் முண்டியடித்து சென்றுள்ளார்கள்.
இதில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 121 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்நிலையில் 121 பேர் இறந்தது தொடர்பாக போலீஸார் முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆனால், சாமியார் போலே பாபா பெயர் அதில் இடம்பெறவில்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த போலே பாபா மக்களை மூடநம்பிக்கைக்கு அடிமையாக்கி மக்களை ஏமாற்றி கோடிகளை குவித்திருப்பது தெரியவந்துள்ளது. பாலியல் வழக்கில் கைதானவர் இன்று பல கோடி சொத்துக்கு அதிபதியாகி உள்ளதாக சொல்கிறார்கள் அந்த ஊர் ஊடகவியலாளர்கள்.
உத்தரப்பிரதேச மாநிலம் காஸ்கன்ச் மாவட்டம் பட்டியாலில் கிராமத்தை சேர்ந்த போலே பாபாவின் இயற்பெயர் சூரஜ் பால் ஜாதவ். உத்தரப்பிரதேச மாநில காவல்துறையில் கான்ஸ்டபிளாக இருந்துள்ளார். அவர் கடைசியாக உளவுப் பிரிவில் காவலராக வேலை செய்து வந்துள்ளார். காவலராக இருந்த காலக்கட்டத்தில்,1997-ல் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதாகி ஆக்ரா சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். பிறகு தகுந்த ஆதாரங்கள் இல்லை என விடுதலை செய்யப்பட்டார்.
இந்த கைது நடவடிக்கை காரணமாக உத்தரப்பிரதேச காவல்துறையில் இருந்து சூரஜ் பால் பணி நீக்கம் செய்யப்பட்டார். ஆனால் போலே பாபா தன்னை பார்க்க வருவோர்களிடம் விருப்ப ஓய்வு பெற்றதாக கூறி நம்ப வைத்து வருகிறார். ஜெயிலில் இருந்து விடுதலை ஆன சூரஜ் பால், விடுதலைக்கு பிறகு தனது பெயரை சாக்கா விஷ்வ ஹரி போலே பாபா என மாற்றியிருக்கிறார்.
மக்களிடம் மாயவித்தைகள் மூலம் ஏமாற்றினால் நம்புவார்கள் என்று நினைத்த அவர், அதற்காக மக்களின் மூடநம்பிக்கையை ஆயுதமாக எடுத்தார். அதன் பின்னர் காஸ்கன்ச்சில் ஆசிரமம் தொடங்கி பிரசங்க கூட்டங்கள் நடத்தி வந்துள்ளார். தற்போது இவருக்கு வட இந்தியாவில் பல லட்சம் பக்தர்கள் இருக்கிறார்கள்.
போலே பாபா பிரபலமாக காரணமாக கூட்டம் ஆக்ராவில் 2000-ம் ஆண்டில் நடந்துள்ளது. இதில் உடல்நலம் குன்றி இறந்ததாக தனது வளர்ப்பு பெண்ணை வைத்து கூட்டத்தில் பிரார்த்தனை செய்துள்ளார். தன்மகிமையால் அப்பெண் உயிர்ந்தெழுந்ததாக பொதுமக்களை நம்பவைத்துள்ளார். அதனை நம்பிய மக்கள், அவரை வழிபட தொடங்கினார்கள்.
மக்களின் நம்பிக்கையை பெற்ற போலே பாபா, அதன்பிறகு அசுர வளர்ச்சி அடைந்தார்.. அவர் நிறைய சொத்துக்களை வாங்கி குவித்துள்ளார். 13 ஏக்கரில் அவர் 5 நட்சத்திர ஓட்டல் போல சொகுசு ஆசிரமத்தை கட்டியுள்ளார். அந்த ஆசிரமம் அமைந்துள்ள இடம் மட்டும் ரூ.4 கோடி மதிப்புள்ளது என்கிறார்கள் அதிகாரிகள். போலே பாபா வாங்கிய சொத்துக்கள் தொடர்பான நிறைய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளார்களாம்.
போலே பாபாவின் ஆசிரமத்தில் 12 அறைகள் இருக்கிறது . ஆசிரமத்தின் எல்லா அறைகளும் விலை உயர்ந்த பொருட்களால் ஜொலிக்கிறதாம் ஆசிரமத்தில் உள்ள அறைகளில் ஐந்து நட்சத்திர ஓட்டலுக்கு நிகராக எல்லா வசதிகளும் உள்ளனவாம். வியக்க வைக்கும் கலை நுணுக்கங்களுடன் ஆசிரமம் கட்டப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 12 அறைகளில் 6 அறைகளை போலே பாபா பயன்படுத்தி இருக்கிறார். மற்ற 6 அறைகளில் தன்னுடைய ஆதரவாளர்கள், கமிட்டி உறுப்பினர்கள், தங்கி உள்ளார்கள். சில அறைகளில் மட்டும் விவிஐபி.க்கள் தங்கி செல்வார்களாம்.
போலே பாபாவின் ஆசிரமத்துக்கு என்று தனியாக தரமான சாலை வசதியும் உள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் அந்த நிலத்தை தனக்கு பக்தர்கள் அன்பளிப்பாக வழங்கினர் என்று போலே பாபா கூட்டங்களில் கூறியிருக்கிறார். அத்துடன் தனக்கு வரும் பணத்தை அப்படியே ஏழை மக்களுக்கு செலவு செய்வது போல் நம்ப வைத்துள்ளார். அதற்காக கணிசமான தொகையை செலவும் செய்துள்ளார் போலே பாபா. அதேநேரம் மொத்தமாக ஆவணங்களை ஆய்வு செய்த போது, அவருக்கு 100 கோடிக்கும் அதிகமான சொத்துகள் இருப்பதாக கூறப்படுகிறது. அதுபற்றியும் விசாரித்து வருகிறார்கள்.
நன்றி oneindia.com