லெபனானின் சக்தி வாய்ந்த ஆயுத அமைப்பான ஹெஸ்பொலாவின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா இரு தினங்களுக்கு முன் இஸ்ரேலிய தாக்குதலில் உயிரிழந்தார்.
வெள்ளிக்கிழமை இரவு நடந்த தாக்குதலில் நஸ்ரல்லா உட்பட ஹெஸ்பொலாவின் மூத்த தளபதிகள் பலரும் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் கூறியுள்ளது.
இதையடுத்து, இஸ்ரேலுக்கும் ஹெஸ்பொலாவுக்கும் இடையேயான மோதல் தீவிரமாகியுள்ளது.
லெபனானின் தெற்கு பெய்ரூட்டில் உள்ள தஹியே பகுதியில் இஸ்ரேல் ஞாயிற்றுக்கிழமை தாக்குதலில் ஈடுபட்டது. பதிலடியாக, வடக்கு இஸ்ரேலை நோக்கி ஹெஸ்பொலா அதிகளவிலான ராக்கெட்டுகளை ஏவியது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் முழு அளவிலான போருக்கு இந்த மோதல்கள் வழிவகுக்கலாம் என்ற கவலை எழுந்துள்ளது. இஸ்ரேல்-ஹெஸ்பொலா இடையே பல தசாப்தங்களாக நீடிக்கும் இந்த மோதல் குறித்த அடிப்படையான கேள்விகளுக்கு இங்கே பதில்கள் தொகுக்கப்பட்டுள்ளன.
லெபனானின் முக்கியத்துவம் என்ன?
மத்திய கிழக்கின் முக்கிய வணிக தளமாக லெபனான் நாடு திகழ்கிறது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிகழும் பல்வேறு நெருக்கடிகளின் மையமாகவும் இந்த நாடு இருக்கிறது. இந்நாடு பல்வேறு போர்களை வெவ்வேறு காலகட்டங்களில் சந்தித்துள்ளது. 1975 மற்றும் 1996-ல் உள்நாட்டுப் போரையும் 2006-ல் ஹெஸ்பொலா மற்றும் இஸ்ரேலுக்கும் இடையே ஏற்பட்ட போரையும் கண்டுள்ளது.
ஹெஸ்பொலா என்பது என்ன?
ஹெஸ்பொலா என்பது மிகவும் செல்வாக்கு மிக்க ஷியா முஸ்லிம் அரசியல் கட்சி மற்றும் ஆயுதக்குழுவாகும்.
லெபனான் நாடாளுமன்றம் மற்றும் அரசு இரண்டிலும் அதற்கு குறிப்பிடத்தக்க பிரதிநிதித்துவம் உள்ளது. நாட்டிலேயே மிகவும் அதிகாரமிக்க ஆயுதக் குழுவாக இது உள்ளது.
கடந்த 1992-ம் ஆண்டில் நடைபெற்ற லெபனான் தேசிய தேர்தலில் ஹெஸ்பொலா பங்கேற்று, முக்கிய அரசியல் சக்தியாக உருவெடுத்தது.
இஸ்ரேல் படைகள் தெற்கு லெபனானை ஆக்கிரமித்திருந்த சமயத்தில், 1980களில் இஸ்ரேலுக்கு எதிராக ஹெஸ்பொலா நின்றபோது அந்த அமைப்பு முக்கியத்துவம் பெற்றது.
மத்திய கிழக்கில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க படையினர் மீது ஹெஸ்பொலா அவ்வப்போது மோசமான தாக்குதல்களை நடத்தியிருக்கிறது.
கடந்த 2000-ம் ஆண்டில் லெபனானிலிருந்து இஸ்ரேலிய துருப்புகளை திரும்பப் பெறப்பட்ட போது, அந்த வெற்றிக்கு ஹெஸ்பொலா அமைப்பு உரிமை கோரியது. பிரச்னைக்குரிய எல்லை பகுதிகளில் இஸ்ரேல் துருப்புகள் நிலைநிறுத்தப்படுவதை ஹெஸ்பொலா எதிர்த்துவருகிறது.
மேற்கத்திய நாடுகள், இஸ்ரேல் மற்றும் வளைகுடா அரபு நாடுகளால் ஹெஸ்பொலா பயங்கரவாத அமைப்பாக கருதப்படுகிறது.
ஹெஸ்பொலா – இரான் உறவு என்ன?
இரானிடமிருந்து ஹெஸ்பொலா அதிகமான ஆதரவை பெற்று வருகிறது. பல ஆண்டுகளாக நிதி ரீதியாகவும் ஆயுதங்கள் ரீதியாகவும் இரான் ஆதரவளித்து வருகிறது. சிரிய அதிபர் பஷர் அல்-ஆசாத்துடனும் ஹெஸ்பொலாவுக்கு வலுவான தொடர்பு உள்ளது.
ஹசன் நஸ்ரல்லா படுகொலை மற்றும் அதைத்தொடர்ந்து லெபனானில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதல்கள் ஹெஸ்பொலாவை போன்று இரானுக்கும் பின்னடைவுதான் என்று பிபிசியின் பாதுகாப்பு செய்தியாளர் ஃபிராங்க் கார்ட்னர் கூறுகிறார்.
ஜூலை மாதம் டெஹ்ரானில் உள்ள விருந்தினர் மாளிகையில் ஹமாஸ் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனியே படுகொலை செய்யப்பட்டதற்கு இரான் இதுவரை எந்த பதிலடி நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
ஹெஸ்பொலாவைத் தவிர, ஏமனில் ஹூதி, சிரியா மற்றும் இராக்கில் பல அமைப்புகளும் இரான் பின்புலத்தில் செயல்படுகின்றன. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க இலக்குகள் மீதான தாக்குதல்களை அதிகரிக்குமாறு இரான் அவைகளிடம் சொல்லலாம் என்கிறார் ஃபிராங்க் கார்ட்னர்.
ஹமாஸ், ஹெஸ்பொலா அமைப்புகளுக்கும் இரானுக்கும் உள்ள தொடர்பு என்ன?
இரான் இந்த இரண்டு குழுக்களுக்கும் ஆயுதம் வழங்கியதோடு மட்டுமின்றி நிதியும் பயிற்சியும் அளித்தது. இரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலை தடுக்கும் பெரிய அரணாக ஹெஸ்பொலா அமைப்பை டெஹ்ரானில் உள்ள தலைவர்கள் அதிகமாக நம்பியுள்ளனர்.
ஹெஸ்பொலா லெபனானின் பலமான ஆயுதக் குழுவாக மாறியதற்கும், அரசியலில் முக்கிய ஆளுமையாக உருவெடுத்ததற்கும் இரானின் ஆதரவு முக்கிய பங்காற்றுகிறது.
இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதலில் ஹெஸ்பொலா பயன்படுத்தும் அதிநவீன ஏவுகணைகளையும் ஆளில்லா விமானங்களையும் விநியோகித்தது இரான் தான். ஹெஸ்பொலாவுக்கு 700 மில்லியன் அமெரிக்க டாலர்களை இரான் வழங்கியதாக அமெரிக்கா முன்பே குற்றம் சாட்டியுள்ளது.
ஏப்ரல் மாதத்தில் சிரியா தலைநகர் டமாஸ்கஸில் உள்ள இரானிய தூதரகத்தில் ராணுவ தளபதிகள் உட்பட 8 பேர் மரணத்திற்கு காரணமாக இருந்த இஸ்ரேல் தாக்குதலுக்கு உடனடியாக எதிர்வினையாற்றியது இரான். இஸ்ரேல் மீது நூற்றுக்கணக்கில் ஏவுகணைகளையும் ஆளில்லா விமானங்களையும் ஏவி தாக்குதல் நடத்தியது.
டெஹ்ரானில் கடந்த ஜூலையில் ஹமாஸின் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டதற்கு எதிர்வினையாற்றிய இரான் இஸ்ரேல் மீது பதில் தாக்குதல் நடத்துவோம் என்று கூறியது. ஆனால் இதுவரை பதில் தாக்குதல் தொடர்பாக எந்த அறிவிப்பையும் இரான் வெளியிடவில்லை.
இஸ்ரேலுடன் முன்பு சண்டை நடந்துள்ளதா?
பிபிசியின் சர்வதேச விவகாரங்கள் ஆசிரியர், ஜெரிமி போவன், “இதற்கு முன்பும் லெபனானில் இஸ்ரேல் நுழைந்துள்ளது. கடந்த 1982-ம் ஆண்டில் இஸ்ரேல் படைகள் பெய்ரூட் வரை சென்றன. பின்னர் இஸ்ரேலின் லெபனான் கூட்டாளிகள் பெய்ரூட்டின் சப்ரா மற்றும் ஷாதிலா அகதிகள் முகாம்களில் பாலத்தீன மக்களை படுகொலை செய்தனர். இந்த நடவடிக்கை பரவலாக விமர்சிக்கப்பட்டதையடுத்து, இஸ்ரேல் ராணுவம் பின்வாங்க வேண்டியிருந்தது” என்கிறார்.
கடந்த 2006-ஆம் ஆண்டில் ஹெஸ்பொலா மற்றும் இஸ்ரேலுக்கு இடையே முழு வீச்சிலான போர் வெடித்தது. இது, எல்லை கடந்த ஹெஸ்பொலாவின் தாக்குதலால் தூண்டப்பட்டது.
எனினும், 2006-ல் இருந்து ஹெஸ்பொலா அதிகம் வளர்ந்துள்ளது. சிரிய போரில் சண்டையிட்டதன் மூலம் அனுபவம் பெற்றுள்ளது. இரான் ஆதரவுடன் அதன் ஆயுத பலம் பலமடங்கு உயர்ந்துள்ளது. இஸ்ரேலிடமும் மேம்பட்ட ஆயுதங்கள் உள்ளன. ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் ‘அயர்ன் டோம்’ என்ற வான் பாதுகாப்பு அமைப்பு அதனிடம் உள்ளது. ஆனால், 2006-ஆம் ஆண்டைப் போலல்லாமல் இந்த முறை காஸாவிலும் இஸ்ரேல் போரில் ஈடுபட்டுள்ளது.
இப்போது சண்டை ஏன் நடக்கிறது?
கடந்தாண்டு அக்டோபர் 7-ஆம் தேதியன்று இஸ்ரேல் மீது ஹமாஸ் திடீரென தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, காஸாவில் இஸ்ரேல் தாக்குதல் நடவடிக்கையை தொடங்கியது. பாலத்தீனர்களுக்கு ஆதரவாக இஸ்ரேலின் நிலைகளின் மீது ஹெஸ்பொலா தாக்குதல் நடத்தியது. இதையடுத்து, இஸ்ரேலுக்கும் ஹெஸ்பொலாவுக்கும் ஆங்காங்கே சண்டைகள் நடைபெற்று வந்தன.
இஸ்ரேல் படைகள் வான்வழி தாக்குதல்கள் மற்றும் பீரங்கிகள் மூலமாக லெபனானில் உள்ள ஹெஸ்பொலா நிலைகள் மீது தாக்குதல் நடத்தின. அதேநேரத்தில், இதுவரை வடக்கு இஸ்ரேல் மற்றும் இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள கோலன் குன்றுகளை நோக்கி 8,000க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை ஹெஸ்பொலா ஏவியுள்ளது. பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகளையும் இஸ்ரேலுக்கு எதிராக அந்த அமைப்பு ஏவியுள்ளது.
கடந்த ஜூலை 30-ஆம் தேதியன்று பெய்ரூட்டில் நடைபெற்ற வான்வழி தாக்குதலில் ஹெஸ்பொலா ராணுவ தளபதி ஃபாவுத் ஷுக்ர்-ஐ கொலை செய்ததாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்தது.
அதற்கடுத்த நாள், ஹமாஸின் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனியே இரான் தலைநகர் டெஹ்ரானில் கொல்லப்பட்டார். இதற்கு இஸ்ரேல் தான் காரணம் என இரான் கூறிய நிலையில், இஸ்ரேல் அந்த குற்றச்சாட்டை உறுதிப்படுத்தவும் இல்லை, மறுக்கவும் இல்லை.
இதையடுத்து, ஹெஸ்பொலா – இஸ்ரேலுக்கு இடையே ஆங்காங்கே சண்டை நடைபெற்ற நிலையில், செப்டம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் ஹெஸ்பொலா அமைப்பினரை குறிவைத்து பேஜர்கள் மற்றும் வாக்கி-டாக்கிகள் வெடிக்கச் செய்யப்பட்டன. இதற்கு இஸ்ரேலே காரணம் என்று குற்றம் சாட்டியது இரான். ஆனால் பதில் தாக்குதல் நடத்துவது தொடர்பாக எந்த அறிவிப்பையும் இரான் உடனடியாக வெளியிடவில்லை.
இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் மீது ஹெஸ்பொலா குற்றம் சாட்டிய நிலையில், இதையும் இஸ்ரேல் மறுக்கவில்லை.
பெய்ரூட்டில் தாங்கள் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹெஸ்பொலா தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிக்கை வெளியிட்டது. ஹெஸ்பொலாவும் தனது டெலிகிராம் பதிவில் இந்தத் தகவலை உறுதி செய்தது. இது தற்போது இரு தரப்புக்குமான விரிவான மோதலுக்கு வழிவகுத்துள்ளது.
மற்ற நாடுகளின் நிலைப்பாடு என்ன?
இஸ்ரேல் மற்றும் ஹெஸ்பொலாவுக்கும் மோதல் தீவிரமானதை தொடர்ந்து, இஸ்ரேலின் நட்பு நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய யூனியன் ஆகியவை தற்காலிக சண்டை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தன. இது, அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளால் முன்மொழியப்பட்டன. ஆனால், நியூயார்க்கில் உள்ள ஐ.நா பொதுச் சபையில், “இஸ்ரேலை அழிக்க விரும்பும் மூர்க்கமான எதிரியுடன் போரிடுவதைத் தவிர இஸ்ரேலுக்கு வேறு வழியில்லை” என்றார் நெதன்யாகு.
மத்திய கிழக்கில் நிலைமையை ஆய்வு செய்து அதற்கேற்ப, அங்குள்ள அமெரிக்கப் படையினரை உஷாராக இருக்கச் செய்யுமாறு அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனுக்கு அதிபர் பைடன் உத்தரவிட்டிருப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
ஹெஸ்பொலா தோற்றுப்போய் விட்டதா?
பெய்ரூட்டிலிருந்து பிபிசியின் மத்திய கிழக்கு செய்தியாளர் ஹியூகோ பசேகாவின் பகுப்பாய்வில் கிடைத்த தகவல்கள் இங்கே தரப்பட்டுள்ளன.
லெபனானில் பதற்றமான சூழல் நிலவிவருகிறது. ஹெஸ்பொலா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவை இஸ்ரேல் கொன்றதற்கு அந்த அமைப்பு எப்படி பதிலடி தரப் போகிறது என்பதை பார்க்க அந்நாடு காத்துக்கொண்டிருக்கிறது.
மிகவும் அதிகாரம் மிக்க சர்ச்சைக்குரிய தலைவராக நஸ்ரல்லா கருதப்படுகிறார். லெபனானில் அரசுக்குள்ளேயே ஓர் அரசை இயக்கி வந்ததாக ஹெஸ்பொலா குறித்து விவரிக்கப்பட்டது.
பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளால் ஹெஸ்பொலா பயங்கரவாத அமைப்பாக கருதப்படுகிறது. ஆனால், லெபனானில் அது ஆயுதக்குழுவாக மட்டும் பார்க்கப்படவில்லை. லெபனான் நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் உள்ள அரசியல் கட்சியாகவும் அதிக ஆதரவு கொண்ட சமூக அமைப்பாகவும் ஹெஸ்பொலா உள்ளது.
லெபனான் பிரதமர் நஜீப் மிகாட்டி, நஸ்ரல்லா இறப்புக்கு மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவித்துள்ளார். தெற்கு லெபனானில் இஸ்ரேலின் தரைவழி படையெடுப்பு நிகழலாம் என்ற நிலையில் தங்கள் நாடு ஆபத்தான சூழலை எதிர்கொண்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
ஹெஸ்பொலா இந்த சூழலில் வலுவிழந்துள்ளது, ஆனால் தோற்கவில்லை. இன்னும் அதனிடம் ஆயிரக்கணக்கான படையினர், இஸ்ரேலுக்குள் மிகவும் உள்ளே சென்று தாக்க வல்ல ஏவுகணைகள் உட்பட பல ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகள் உள்ளன.
முழு அளவிலான போர் வெடிக்குமா?
பிபிசி பாதுகாப்பு செய்தியாளர் ஃபிராங்க் கார்ட்னர் பகுப்பாய்விலிருந்து பின்வரும் தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன.
இஸ்ரேல், ஹெஸ்பொலா, இரான் ஆகியவை, “பதிலடி தரப்படும்” என்று தொடர்ந்து கூறி வருகின்றன.
ஜூலை 31-ஆம் தேதி டெஹ்ரானில் ஹமாஸ் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டதற்கு பதிலடி தரப்படும் என இரான் ஏற்கனவே கூறியுள்ளது.
அதற்கு முன்னதாக, கடந்த ஏப்ரலில் டமாஸ்கஸில் உள்ள இரான் தூதரகத்தில் இஸ்ரேல் குண்டுவீசியதில், இரானிய புரட்சிகர காவலர் படையின் முக்கிய ஜெனரல் கொல்லப்பட்டார். இரான் சில நாட்கள் காத்திருந்து பதிலடி தாக்குதலில் ஈடுபட்டது. இஸ்ரேலை நோக்கி பெருமளவில் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏவியது. கிட்டத்தட்ட அவை அனைத்துமே பாதி வழியிலேயே சுட்டு வீழ்த்தப்பட்டன.
இப்போது, மத்திய கிழக்கு பிராந்தியம் இரான் மற்றும் ஹெஸ்பொலா ஆகிய இரண்டும் இஸ்ரேலின் தாக்குதலுக்கு எப்படி எதிர்வினையாற்றும் என்பதை பார்க்க காத்திருக்கிறது.
முழு அளவிலான பிராந்திய போரை யாரும் விரும்பவில்லை. அதேநேரத்தில், பலவீனமாக தோன்றவும் எந்த தரப்பும் விரும்பவில்லை.