கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா, ஷபாலி வர்மா ஆகியோரின் அற்புதமான பேட்டிங்கால், இலங்கை அணிக்கு எதிராக இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது.
துபாயில் நேற்று நடந்த டி20 உலகக்கோப்பைத் தொடரின் ஏ பிரிவு லீக் ஆட்டத்தில் இலங்கை அணியை 82 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோற்கடித்தது.
முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் சேர்த்தது. 173 ரன்களை சேஸ் செய்யும் முனைப்பில் களமிறங்கிய இலங்கை அணி 19.5 ஓவர்களில் 90 ரன்களுக்கு ஆட்டமிழந்து 82 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இலங்கை அணியிடம் அடைந்த தோல்விக்கு இந்த வெற்றி மூலம் இந்திய அணி கணக்குத் தீர்த்துவிட்டது.
இதுதான் டி20 உலகக்கோப்பையில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி பெற்ற வெற்றி. இதற்கு முன் கடந்த 2014, மார்ச் 30ஆம் தேதி டி20 உலகக்கோப்பை ஆட்டத்தில் வங்கதேசத்துக்கு எதிராக 79 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதுதான் இந்திய அணியின் அதிகபட்ச ரன்கள் வெற்றியாக இருந்தது. அதை இந்த ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி முறியடித்துவிட்டது.
இந்திய அணி முன்னேற்றம்
இந்த டி20 உலகக்கோப்பைத் தொடரில் 2வது வெற்றியை இந்திய அணி நேற்று பதிவு செய்தது. இதன்மூலம் ஏ பிரிவில் நியூசிலாந்துக்கு எதிராக மோசமாகத் தோற்று மைனஸ் புள்ளியில் இருந்த இந்திய அணி, கடந்த ஆட்டத்தில் பாகிஸ்தானை வென்று 2 புள்ளிகளைப் பெற்றது.
இருப்பினும் நிகர ரன்ரேட் மைனஸை விட்டு எழவில்லை. ஆனால், இலங்கை அணியை 82 ரன்கள் வித்தியாச்தில் வென்றதன் மூலம் இந்திய அணி 4 புள்ளிகள் பெற்று +0.576 நிகர ரன்ரேட்டில் 2வது இடத்துக்கு முன்னேறியது. பாகிஸ்தான் அணி 0.555 என 3வது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.
இந்திய அணி அடுத்ததாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் மட்டும் வென்றுவிட்டால் அரையிறுதி செல்வது உறுதியாகிவிடும். இல்லாவிட்டால், பாகிஸ்தானும், நியூசிலாந்து அணியும் தங்களின் அடுத்த ஆட்டத்தில் தோற்க வேண்டும். இது நடந்தால் நிகர ரன்ரேட் அடிப்படையில் இந்திய அணி அரையிறுதிக்குச் செல்ல முடியும்.
வெற்றிக்கு அடித்தளமான பேட்டிங்
இந்திய அணியின் இந்த மாபெரும் வெற்றிக்கு அடித்தளமிட்டது கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், தொடக்க ஆட்டக்காரர்கள் ஸ்மிருதி மந்தனா, ஷபாலி வர்மா ஆகியோரின் பேட்டிங்தான். இவர்கள் 3 பேரும் பேட்டிங்கில் அளித்த பெரிய பங்களிப்பால் பந்துவீச்சாளர்கள் நெருக்கடியின்றி பந்துவீச முடிந்தது.
அதிலும் கடந்த 2 போட்டிகளிலும் சொதப்பிய ஷபாலி, ஸ்மிருதி இருவரும் பவர்ப்ளேவில் நல்ல அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். கடைசி நேரத்தில் டெத் ஓவர்களில் ஹர்மன்ப்ரீத் அதிரடியாக ஆடி 27 பந்துகளில் அரைசதம் அடித்தது பெரிய ஸ்கோருக்கு முக்கியக் காரணம்.
கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 27 பந்துகளில் அரைசதம் அடித்து 52 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவர் ஆட்டநாயகியாகவும் தேர்வு செய்யப்பட்டார்.
இந்திய அணியின் பேட்டிங்கில் தூண்களாக இருக்கும் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், ஷபாலி, ஸ்மிருதி மந்தனா, ரோட்ரிக்ஸ் ஆகிய 4 பேரில் இருவர் நிலைத்து ஆடினாலே கௌரவமான ஸ்கோர் கிடைத்துவிடும். இதில் 4 பேட்டர்களும் நிதானமாக ஆடி வந்தால், இதுபோன்ற பெரிய ஸ்கோருக்கு இட்டுச் செல்ல முடியும்.
இந்திய அணியின் திறன்மிக்க பந்துவீச்சு
இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் அளித்த பேட்டியில் “இந்த வெற்றியின் உற்சாகத்தோடு தொடர் முழுவதும் செல்ல விரும்புகிறோம். ஷபாலி, ஸ்மிருதி நல்ல தொடக்கம் அளித்தனர், வெற்றிக்கு அவர்கள் இருவர்தான் காரணம்,” என்று தெரிவித்தார்.
தங்களின் திட்டப்படியே போட்டியின்போது விஷயங்கள் நடந்ததாகக் குறிப்பிட்ட அவர், “ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் சிறப்பாக பேட் செய்வோம் என நம்புகிறேன். நிக ரன்ரேட் குறித்து அதிகமாகச் சிந்திக்கிறோம். நிச்சயமாக நல்ல முடிவுகளை வழங்குவோம்” எனத் தெரிவித்தார்.
இந்திய மகளிர் அணியின் பந்துவீச்சும் சிறப்பாகவே இருந்தது. இலங்கை அணியில் ஆபத்தான பேட்டராக கருதப்படுபவர் கேப்டன் சமாரி அத்தப்பட்டுதான். அவரையும், டாப் ஆர்டர் பேட்டர்களையும் பவர்ப்ளே ஓவர்களுக்குள் இந்திய பந்துவீச்சாளர்கள் வீழ்த்தி இலங்கை அணிக்கு ஆட்டத்தைச் சவாலாக்கினார்கள்.
குறிப்பாக ரேணுகா சிங் வீசிய முதல் ஓவரிலேயே விஸ்மி குணரத்னே டக்-அவுட்டில் ஆட்டமிழந்தார். ஸ்ரேயங்கா பாட்டீல் வீசிய 2வது ஓவரில் இலங்கை கேப்டன் அத்தபட்டு ஒரு ரன் சேர்த்த நிலையில் தீப்தி ஷர்மாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
ரேணுகா சிங் வீசிய 3வது ஓவரில் ஹர்சிதா சமரவிக்ரமா 3 ரன்னில் விக்கெட் கீப்பர் கோஷமியிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். பவர்ப்ளே ஓவருக்குள் 28 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து இலங்கை தடுமாறியது.
நடுவரிசையில் கவிஷா தில்ஹாரி(21), அனுஷ்கா சஞ்சீவனி(20) ஆகியோர் மட்டுமே ஓரளவுக்கு நிதானமாக பேட் செய்தனர். இவர்களின் கூட்டணியையும் ஆஷா ஷோபனா பிரித்தார். சஞ்சீவனி 20 ரன்கள் சேர்த்த நிலையில் ஷோபனா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
இந்திய அணியில், ஆஷா ஷோபனா, அருந்ததி ரெட்டி தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். ரேணுகா சிங் 2 விக்கெட்டுகளையும் ஸ்ரேயங்கா பாட்டீல், தீப்தி ஷர்மா தலா ஒரு விக்கெட்டையும் சாய்த்தனர்.
ஒரே ஓவரில் 2 விக்கெட்
அதன்பின் இலங்கை பேட்டர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர். அதிலும் அருந்ததி ரெட்டி வீசிய 12வது ஓவரில் நிலாஷிகா சில்வா(8), தில்ஹாரி(21) ஆகியோர் ஒரே ஓவரில் விக்கெட்டை இழந்தனர். இதனால் 12 ஓவர்களில் இலங்கை அணி 6 விக்கெட் இழப்புக்கு 58 ரன்கள் சேர்த்து தோல்வியின் பிடியில் சிக்கியது. 9.3 ஓவர்களில்தான் இலங்கை அணி 50 ரன்களையே எட்ட முடிந்தது.
கடைசி வரிசை பேட்டர்களும் பெரிதாக ரன்கள் ஏதும் சேர்க்கவில்லை. இந்திய சுழற்பந்துவீச்சாளர் ஷோபனா பந்துவீச்சில் விக்கெட்டுகளை இழந்தனர். 19.5 ஓவர்களில் இலங்கை அணி 90 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து டி20 போட்டிளில் அதிக வெற்றிகளைக் குவித்தது இலங்கை அணிதான். இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளைவிட அதிக வெற்றிகளைப் பெற்றிருந்தது. ஆசியக் கோப்பைத் தொடரில் 166 ரன்களை சேஸ் செய்து பட்டத்தை வென்ற இலங்கை அணியால் இந்த ஆட்டத்தில் 173 ரன்களை சேஸ் செய்ய முடியவில்லை.
இலங்கைக்கு சவால் விடுத்த ஷபாலி, ஸ்மிருதி கூட்டணி
டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் பேட்டிங் செய்ய தீர்மானித்தார். இந்திய அணிக்கு ஷபாலி வர்மா, துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா இருவரும் இலங்கை பந்துவீச்சை துவம்சம் செய்து அருமையான தொடக்கத்தை அளித்தனர். பவர்ப்ளே முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 43 ரன்கள் குவித்தது.
ஸ்மிருதி, ஷபாலி வர்மா இருவரும் ஓவருக்கு ஒரு பவுண்டரி வீதம் அடித்து ஸ்கோரை சீராக உயர்த்தினர். இதனால் 7வது ஓவரில் இந்திய அணி 50 ரன்களை எட்டியது. 10வது ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 78 ரன்கள் குவித்து வலுவாக இருந்தது.
ஸ்மிருதி, ஷபாலி இருவரையும் ஆட்டமிழக்கச் செய்ய இலங்கை கேப்டன் சமாரி அத்தபட்டு பல பந்துவீச்சாளர்களை மாற்றி, மாற்றிப் பயன்படுத்தியும் முடியவில்லை. துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா 36 பந்துகளில் தனது 27வது அரைசதத்தை நிறைவு செய்தார்.
ஸ்மிருதி மந்தனா ரன்-அவுட்
அதன் பிறகு ஸ்மிருதி மந்தனா நிலைக்கவில்லை. இலங்கை கேப்டன் சமாரி அத்தப்பட்டு வீசிய 13வது ஓவரில் 50 ரன்கள் சேர்த்த நிலையில் மந்தனா ரன்-அவுட் செய்யப்பட்டார். கடந்த 2 போட்டிகளிலும் சுமாராக ஆடிய மந்தனா, இந்தப் போட்டியின் முக்கியத்துவம் அறிந்து சிறப்பாக பேட் செய்தார்.
மந்தனா, 131 ஸ்ட்ரைக் ரேட்டில் 38 பந்துகளில் 50 ரன்கள் குவித்தார். இதில் 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் அடங்கும். முதல் விக்கெட்டுக்கு மந்தனா, ஷபாலி இருவரும் 98 ரன்கள் குவித்தனர். இந்த மகளிர் உலகக் கோப்பையில் முதல் விக்கெட்டுக்கு சேர்க்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இது.
ஹர்மன்ப்ரீத் அதிரடி பேட்டிங்
அடுத்து கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் களமிறங்கி, ஷபாலியுடன் ஜோடி சேர்ந்தார். ஆனால், அத்தப்பட்டு அதே ஓவரின் 5வது பந்தில் ஷபாலி வர்மாவை 43 ரன்னில் குணரத்னேவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழக்கச் செய்தார். ஷபாலி, மந்தனா இருவரும் அடுத்தடுத்த பந்துகளில் விக்கெட்டுகளை இழந்தனர். 107 ஸ்ட்ரைக் ரேட்டில் பேட் செய்த ஷபாலி 4 பவுண்டரிகள் உள்பட 43 ரன்கள் சேர்த்தார்.
மூன்றாவது விக்கெட்டுக்கு கேப்டன் ஹர்மன்ப்ரீத்துடன், ஜெமிமியா ரோட்ரிக்ஸ் இணைந்தார். ரோட்ரிக்ஸ் நிதானமாக பேட் செய்ய கேப்டன் ஹர்மன்ப்ரீத் இலங்கை பந்துவீச்சை அதிரடியாக எதிர்கொண்டார். ஓவருக்கு ஒரு பவுண்டரி அல்லது சிக்ஸர் என விளாசி ரன்ரேட்டை உயர்த்தினார்.
ரோட்ரிக்ஸ் 16 ரன்கள் சேர்த்த நிலையில் காஞ்சனா பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக ரிச்சா கோஷ் களமிறங்கி, கேப்டன் ஹர்மன்ப்ரீத்துக்கு நன்கு ஒத்துழைப்பு வழங்கினார். ஹர்மன்ப்ரீத் ஸ்ட்ரைக்கில் நிற்கும் வகையில் வாய்ப்பை வழங்கியதால், ஹர்மன்ப்ரீத்துக்கும அதிரடியாக ஆடினார்.
192 ஸ்ட்ரைக் ரேட்
கடைசி 16 முதல் 20 ஓவர்களில் இந்திய பேட்டர் ஹர்மன்ப்ரீத் கவுர் இலங்கை பந்துவீச்சை துவம்சம் செய்து 46 ரன்கள் சேர்த்தனர். இந்த டி20 உலகக்கோப்பையில் டெத் ஓவர்களில் எந்த அணியும் இதுவரை சேர்த்திராத அளவுக்கு அதிகமாக சேர்க்கப்பட்ட ரன் இது.
கேப்டன் ஹர்மன்ப்ரீத் 16வது ஓவரில் இருந்து பவுண்டரி, சிஸ்கர்களாக பறக்கவிட்டார். இதனால் ஸ்கோர் வேகமாக உயர்ந்து 18வது ஓவரில் 150 ரன்களை கடந்தது. ஹர்மன்பீர்த் கவுர் கடைசி ஓவரை அதிரடியாக பேட் செய்து, 27 பந்துகளில் அரைசதத்தை நிறைவு செய்தார். இதில் 8 பவுண்டரிகள் ஒரு சிக்ஸர் அடங்கும். 192 ஸ்ட்ரைக் ரேட்டில் பேட் செய்த ஹர்மன்ப்ரீத் 52 ரன்கள் சேர்த்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இருபது ஓவர்களில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் சேர்த்தது. இந்த டி20 உலகக்கோப்பையில் இந்திய மகளிர் அணியின் இந்த ஸ்கோர்தான் அதிகபட்ச ஸ்கோர். இந்திய அணியின் ஸ்கோர் உயர்வுக்கு கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங், துணை கேப்டன் ஸ்ருமிதி மந்தனா, ஷபாலி வர்மா ஆகிய மூவரும்தான் முக்கியக் காரணம்.