சென்னை: சென்னை அசோக்நகர் பள்ளியில் மறுஜென்மம், பாவம் புண்ணியம் என சர்ச்சை சொற்பொழிவு நிகழ்த்தப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த தமிழ்நாடு அரசு குழு ஒன்றை அமைத்துள்ளது. இத்தகைய சூழலில் தமிழ்நாட்டிலும் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் அவசியம் என்கிற குரல் இயல்பாகவே வலுத்து வருகிறது. ஏற்கனவே திராவிடர் கழகம், பாமக போன்றவை தமிழ்நாட்டில் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் அவசியம் என தொடர்ந்து வலியுறுத்துகின்றன.
சென்னை அசோக்நகர் அரசு பள்ளியில் மகாவிஷ்ணு என்ப்பவர் ஆன்மீக சொற்பொழிவு என்ற பெயரில் பாவம் புண்ணியம், மறுஜென்மம் என சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இதற்கு அந்த நிகழ்ச்சியிலேயே ஆசிரியர் சங்கர் என்பவர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது.
சர்ச்சை சொற்பொழிவு குறித்து விசாரணை: இதனையடுத்து சென்னை அசோகர்நகர் அரசு பள்ளிக்கு இன்று சென்ற பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ், மாணவர்களிடையே கல்வி மட்டும்தான் மிகப் பெரிய சொத்து; கல்வியை கற்பதில்தான் மாணவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார். இதனைத் தொடர்ந்து அரசு பள்ளியில் சர்ச்சைக்குரிய சொற்பொழிவு நிகழ்த்தப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் அறிவுரை: இந்த சம்பவம் தொடர்பாக தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், மாணவச் செல்வங்கள் அறிந்துகொள்ளத் தேவையான சிறந்த அறிவியல் சிந்தனைகள் தரம் மிகுந்த நமது பாடநூல்களில் இடம் பெற்றுள்ளன. எதிர்காலச் சவால்களை, தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ளவும், அறிவாற்றலைக் கூர்மைப்படுத்திக் கொள்ளவும் தேவையான சிறப்பான கருத்துகளை ஆசிரியர்களே எடுத்துக்கூற முடியும். அதற்குத் தேவையான புத்தாக்கப் பயிற்சியை, சமூகக் கல்வியை – தக்க துறைசார் வல்லுநர்கள், அறிஞர் பெருமக்களைக் கொண்டு வழங்கத் தேவையான முயற்சிகளைப் பள்ளிக்கல்வித் துறை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
டாக்டர் ராமதாஸ் கண்டனம்: இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அரசுப் பள்ளிகளை மூடநம்பிக்கை விதைப்பவர்களின் வேட்டைக்காடாக மாற்ற முயல்வதா? தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை தேவை. சென்னை அசோக்நகர் பள்ளியில் நடந்த நிகழ்வுகளுக்கு காரணம் என்று சில ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுத்து விட்டு இந்த சிக்கலை மூடி மறைத்து விடக் கூடாது. இந்த நிகழ்ச்சிக்கு காரணமானவர்கள் பள்ளிக்கல்வித்துறையின் எத்தகைய உயர்பொறுப்பில் இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவிகளின் சிந்தனையை மழுங்கடித்த அந்த மூட நம்பிக்கைப் பேச்சாளர் கைது செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் எனவும் தெரிவித்திருக்கிறார்.
கர்நாடகா, கேரளா: கர்நாடகாவில் முந்தைய காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் முதல்வர் சித்தராமையா, இத்தகைய மூடநம்பிக்கை விதைப்புகள், மூடநம்பிக்கை செயல்பாடுகள் சட்டத்துக்கு எதிரானது என மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தைக் கொன்டு வந்தார். அதேபோல கேரளா மாநில அரசும் இத்தகைய சட்டம் ஒன்றைக் கொண்டு வந்தது.
அரசியல் சாசனம் சொல்வது என்ன?: பகுத்தறிவு நிலம்.. தந்தை பெரியாரால் பண்படுத்தப்பட்ட தமிழ்நாட்டிலும் இத்தகைய மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் தேவை என பல ஆண்டுகளாக திராவிடர் கழகம், பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்டவை வலியுறுத்தி வருகின்றன. நமது அரசியல் சாசனத்தின் 51-ஏ(எச்) பிரிவு – ”இந்திய குடிமக்களிடையே அறிவியல் மனப்பாங்கை வளர்த்து, கேள்வி கேட்கும் திறனை வளர்ப்பது, சீர்திருத்தம், மனிதநேயம் பரப்புதல் ஒவ்வொரு குடிமகனின் அடிப்படைக் கடமை (Develop the scientific temper, humanism and the spirit of inquiry and reform) என வலியுறுத்துகிறது.
மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம்: தமிழ்நாட்டில் நடைபெறுவது தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா கோட்பாடுகளை ஏற்றுக் கொண்ட திராவிட மாடல் அரசு. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசால்தான் இத்தகைய மூடநம்பிக்கைகளை ஒழிக்கக் கூடிய சட்டத்தை நிறைவேற்ற முடியும். அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராதல், பெண்களும் அர்ச்சகராதல் உள்ளிட்ட சமூக சீர்திருத்தங்களை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தி சமூக நீதியை நிலைநாட்டி இருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தைக் கொண்டு வர வேண்டியதும் காலத்தின் அவசியம்தான் என்பதை சென்னை அசோக்நகர் பள்ளி சம்பவம் சுட்டிக்காட்டுகிறது என்கின்றனர் கல்வியாளர்கள்.
முதல்வர் மு.க.ஸ்டாலினும் தனிமனித முன்னேற்றம், அறநெறி சார்ந்து வாழ்தல், சமூக மேம்பாட்டுக்கான சீரிய கருத்துகள்தான் மாணவர்களின் நெஞ்சங்களில் விதைக்கப்பட வேண்டும் என்கிறார். சென்னை அசோக் நகரில் இன்று பேசிய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ், பள்ளிக்கூடங்கள்தான் பகுத்தறிவை வளர்க்கும் இடம்; பிற்போக்குத்தனங்களை கேள்வி கேட்கக் கூடிய பகுத்தறிவை பள்ளிக்கூடங்கள்தான் வளர்க்க வேண்டும் என ஆணித்தரமாக பேசியிருக்கிறார். இத்தகைய பேச்சுகள் நடைமுறைப்படுத்த வேண்டும் எனில் தமிழ்நாட்டிலும் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பது கல்வியாளர்களின் கோரிக்கை.