சென்னை: த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் படம் வேட்டையன். அக்டோபர் 10ஆம் தேதி படம் ரிலீஸாகவிருக்கும் சூழலில் சில வாரங்களுக்கு முன்பு பிரமாண்டமாக ஆடியோ வெளியீட்டு விழா நடந்தது. இதில் படக்குழுவினர், ரசிகர்கள் கலந்துகொண்டனர். இந்தச் சூழலில் ரஜினிகாந்த் குறித்து படத்தில் நடித்திருக்கும் ரித்திகா சிங் சில விஷயங்களை பேசியிருக்கிறார்.
ஜெய் பீம் இயக்குநர் த.செ.ஞானவேல் ரஜினிகாந்த்தை வைத்து வேட்டையன் படத்தை இயக்கியிருக்கிறார். இதில் ரஜினியுடன் அமிதாப் பச்சன், ஃபகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் என நட்சத்திர பட்டாளம் நடித்திருக்கிறது. அனிருத் இசையமைப்பில் லைகா நிறுவனம் தயாரித்திருக்கிறது. ஞானவேல் முக்கியமான இயக்குநர் என்பதால் இந்தப் படத்தின் மீதான எக்கச்சக்க எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இப்போதிருந்தே எழ ஆரம்பித்திருக்கிறது.
படம் ரிலீஸ்: படமானது அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. இதற்கு முன்னதாக ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்து வெளியான ஜெயிலர் படம் உலகளவில் 700 கோடி ரூபாய்வரை வசூலித்தது. எனவே இந்தப் படமும் கண்டிப்பாக அந்த அளவுக்கு வசூல் செய்யுமா இல்லை அதனைவிடவும் அதிகம் வசூலித்து கெத்து காட்டுமா என்றும் ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள். அதேபோல் இப்படத்தில் கமர்ஷியல் கலவை கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சில வாரங்களுக்கு முன்பு நடைபெற்றது. இதில் படக்குழுவினரும், ரசிகர்களும் கலந்துகொண்டார்கள். இந்த ஆடியோ லான்சில், ஒருமுறை ஞானவேலுவிடம் தான் ஒரு கதையை சொன்னதாக கழுதை, டோபி கதையை சொன்னார் ரஜினி. அந்தக் கதையை அவர் சொல்லும்போதும், சொல்லி முடித்தபோதும் ஆடியோ லான்ச் நடந்த ஆடிட்டோரியம் ஆரவாரத்தில் குலுங்கியது. இப்போது அந்தக் கதையும் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாக ஆரம்பித்திருக்கிறது. மேலும் அனிருத் தனது மகன் போன்றவர் என்று ரஜினிகாந்த் கூறியதும் அவரை மட்டுமின்றி ஒட்டுமொத்த படக்குழுவையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
படத்தின் டீசர் ரிலீஸ்: மேலும் ஆடியோ வெளியீட்டு விழாவில் படத்தில் டீசர் வெளியிடப்பட்டது. அதனைப் பார்த்த ரஜினியின் ரசிகர்கள் உற்சாகமடைந்தாலும் பொதுவான ரசிகர்கள் ஞானவேலுவும் கமர்ஷியல் ஷட்டருக்குள் சிக்கிக்கொண்டாரோ என்ற கேள்வியை முன்வைக்க ஆரம்பித்திருக்கின்றனர். அதுமட்டுமின்றி டீசருக்கு அவர்கள் கலவையான விமர்சனத்தையே கொடுத்தனர்.
ரித்திகா சிங் பேட்டி: இந்நிலையில் வேட்டையன் பட அனுபவங்கள் குறித்து பேசிய ரித்திகா சிங், “தமிழ் எனக்கு பிடித்திருக்கிறது. ஆனால் அவ்வளவாக தெரியாது. ட்ரை செய்துகொண்டிருக்கிறேன். எப்போதும் துறுதுறுனு இருப்பதுதான் பிடிக்கும். ஷூட்டிங் எனக்கு இல்லையென்றாலும் செட்டில்தான் இருப்பேன். மற்ற நடிகர்கள் நடிப்பதை பார்த்து கற்றுக்கொள்வேன். வேட்டையன் படத்தின்போது ரஜினியிடத்தில் நிறைய கற்றுக்கொண்டேன். தன்மையானவரும், ஆரம்பரம் இல்லாதவரும்தான் ரஜினி. அவரை சுற்றி எப்போதும் 15 பேர் பாதுகாப்புக்கு இருந்தாலும் ரஜினி சிம்ப்பிளாகத்தான் இருப்பார். அனைவரிடமும் பேசுவார். எவ்வளவு ரசிகர்கள் வந்தாலும் முகம் சுளிக்கவேமாட்டார்” என்றார்.
நன்றி filmibeat