வெங்காயம், பாசுமதி அரிசி: குறைந்தபட்ச ஏற்றுமதி விலை வரம்புகளை நீக்கியது அரசு… வெங்காய விலை ஏறுமா?
Onion Price: பாஸ்மதி அரிசி உற்பத்தியில் அரியானா முன்னணி மாநிலங்களில் ஒன்றாக உள்ளது. மஹாராஷ்டிரா வெங்காய உற்பத்தியில் முன்னணி மாநிலமாக உள்ளது.
Onion Price: விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கவும், நாட்டில் ஏற்றுமதியை ஊக்குவிக்கவும் வெங்காயம் மற்றும் பாசுமதி அரிசியின் குறைந்தபட்ச ஏற்றுமதி விலை (MEP) மீதான வரம்பை அரசாங்கம் நீக்கியுள்ளது. இது விவசாயிகளுக்கு மிக நல்ல செய்தியாக வந்துள்ளது. விவசாயப் பணிகளுக்கு அதிக அளவு முக்கியத்துவம் வாய்ந்த மாநிலங்களான மகாராஷ்டிரா மற்றும் ஹரியானாவில் சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மத்திய அரசாங்கம் இந்த முக்கிய முடிவை எடுத்துள்ளது.
பாஸ்மதி அரிசி உற்பத்தியில் அரியானா முன்னணி மாநிலங்களில் ஒன்றாக உள்ளது. மஹாராஷ்டிரா வெங்காய உற்பத்தியில் முன்னணி மாநிலமாக உள்ளது. வெங்காயத்தின் குறைந்தபட்ச ஏற்றுமதி விலை டன்னுக்கு 550 டாலராக நிர்ணயிக்கப்பட்டது.
வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகம் (DGFT) இது தொடர்பாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் வாயிலாக உடனடியாக அமலுக்கு வரும் வகையில் ஏற்றுமதி விலை வரம்பு நீக்கப்பட்டது. அதேபோல், பாசுமதி அரிசி ஏற்றுமதிக்கான பதிவு மற்றும் ஒதுக்கீடு சான்றிதழ் (RCAC) வழங்குவதற்கு தற்போதுள்ள ஒரு டன் குறைந்தபட்ச ஏற்றுமதி விலை (MEP) $950ஐ நீக்க வணிகத்துறை முடிவு செய்துள்ளது. இந்த நடவடிக்கை ஏற்றுமதியை ஊக்குவிக்கும் என்றும் விவசாயிகளின் வருமானத்திற்கு உதவும் என்று வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார். APEDA (Agricultural and Processed Food Products Export Development Authority) இடம் இந்த முடிவை உடனடியாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கோரப்பட்டுள்ளது.
பாஸ்மதி ஏற்றுமதியில் நம்பத்தகாத விலையில் நடக்கும் அனைத்து ஏற்றுமதி ஒப்பந்தங்களையும் APEDA கண்காணிக்கும். கடந்த ஆண்டு அக்டோபர் தொடக்கத்தில், பாசுமதி அரிசி ஏற்றுமதிக்கான குறைந்தபட்ச விலையை, அரசாங்கம், டன்னுக்கு 1,200 டாலரில் இருந்து 950 டாலராக குறைத்தது. அதிக விலை காரணமாக ஏற்றுமதி பாதிக்கப்படும் என்ற கவலையின் காரணமாக இவ்வாறு செய்யப்பட்டது. டன்னுக்கு 1,200 அமெரிக்க டாலர்களுக்கும் குறைவான விலையில் பாசுமதி அரிசியை ஏற்றுமதி செய்ய அனுமதிக்க வேண்டாம் என்று ஆகஸ்ட் 27, 2023 அன்று அரசாங்கம் முடிவு செய்தது. பிரீமியம் பாசுமதி அரிசி என்ற போர்வையில் பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசியை சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்வதைத் தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
வெங்காயத்தின் அகில இந்திய சராசரி விலை என்ன?
வெங்காயத்தின் அகில இந்திய சராசரி விலை கிலோ ரூ.50.83. வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் (டிஜிஎஃப்டி) வெங்காய ஏற்றுமதிக்கான குறைந்தபட்ச விலை வரம்பை நீக்கியது குறித்த அறிவிப்பை வெளியிட்டது. இதில், ‘வெங்காய ஏற்றுமதிக்கான குறைந்தபட்ச ஏற்றுமதி விலை (எம்இபி) உடனடியாக, அடுத்த அறிவிப்பு வரும் வரை நீக்கப்பட்டுள்ளது.’ என கூறப்பட்டுள்ளது. சமையலின் முக்கியமான அங்கமான வெங்காயத்தின் சில்லறை விலை உயர்ந்த போதிலும் வெங்காயத்தின் மீதான MEP நீக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வெங்காயத்தின் அகில இந்திய சராசரி விலை கிலோ ஒன்றுக்கு ரூ.50.83 என்றும் மாடல் விலை கிலோவுக்கு ரூ.50 என்றும் நுகர்வோர் விவகாரத் துறை தொகுத்துள்ள தரவுகளிலிருந்து தெரிகிறது.
வெங்காயத்தின் குறைந்தபட்ச, அதிகபட்ச விலை எவ்வளவு?
– வெங்காயத்தின் அதிகபட்ச விலை கிலோ ரூ.83
– இதன் குறைந்தபட்ச விலை கிலோ ரூ.28
– வெங்காயத்தின் விலை உயர்வில் இருந்து டெல்லி மற்றும் மும்பை நுகர்வோருக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், செப்டம்பர் 5 ஆம் தேதி, வெங்காயத்தை ஒரு கிலோவுக்கு 35 ரூபாய் என்ற சலுகை விலையில் மத்திய அரசு விற்பனை செய்ய தொடங்கியது.
– NCCF மற்றும் NAFED ஆகியவை தங்கள் கடைகள் மற்றும் மொபைல் வேன்கள் மூலம் சில்லறை விற்பனையைத் தொடங்கின.
– 4.7 லட்சம் டன் வெங்காய இருப்பை மத்திய அரசு உருவாக்கியுள்ளது.
கடந்த ஆண்டு 1.94 லட்சம் ஹெக்டேராக இருந்த காரிஃப் விதைப்பு பரப்பளவு கடந்த மாதம் வரை 2.9 லட்சம் ஹெக்டேராக அதிகரித்துள்ளது. விவசாயிகள் மற்றும் வியாபாரிகளிடம் தற்போது சுமார் 38 லட்சம் டன் வெங்காயம் இருப்பு உள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வெங்காயத்தின் விலை உயருமா?
தற்போது டெல்லி சில்லறை சந்தையில் வெங்காயத்தின் விலை கிலோ ஒன்றுக்கு சுமார் ரூ.60 ஆக உள்ளது. வெங்காய ஏற்றுமதி மீதான தடை தற்போது நீக்கப்பட்டுள்ள நிலையில், அதன் சில்லறை விலையில் உயர்வு இருக்காது என்றே கூறப்படுகின்றது. அரசிடம் 4.7 லட்சம் டன் வெங்காயம் கையிருப்பில் உள்ளதே இதற்கு முக்கிய காரணம்.
வெங்காய விலை அதிகரிக்கும் சூழ்நிலை ஏற்பட்டால், ஓப்பன் மார்கெட் எனப்படும் வெளிச் சந்தையில் இந்த வெங்காயத்தை விற்பனை செய்து அரசு விலையை குறைக்கும். இது தவிர, வரும் சீசனில் வெங்காய விளைச்சல் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகினது. மேலும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகளிடம் சுமார் 38 லட்சம் டன் வெங்காயம் இருப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக வெங்காயத்தின் விலை அதிகரிக்காமல் சாதாரணமாகவே இருக்கும் என்று நன்பப்படுகின்றது.
நன்றி zeenews