ஹனோய் : சீனாவைத் தொடர்ந்து வியட்நாமில் ‘யாகி’ சூறாவளி புயல் தாக்கியதில் 14 பேர் பலியாகினர்; 176 பேர் காயமடைந்தனர்.
நம் அண்டை நாடான சீனாவின் ஹைனான் தீவு மற்றும் குவாங்டாங் மாகாணங்களை ‘யாகி’ சூறாவளி புயல் புரட்டிப் போட்டது. இதைத்தொடர்ந்து அண்டை நாடான வியட்நாமின் வடக்கே உள்ள குவாங் நின் மற்றும் ஹய்போங் மாகாணங்களுக்கு இடையே யாகி சூறாவளி புயல் நேற்று கரையை கடந்தது.
அப்போது மணிக்கு 149 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசியதுடன், கனமழையும் பெய்தது.
இதன் காரணமாக ஏராளமான வீடுகள் சேதமடைந்தன; சாலையோரங்களில் இருந்த மரங்கள் வேரோடு சாய்ந்தன; இதேபோல் பல்வேறு இடங்களில் மின் கம்பங்கள் சாய்ந்ததால், மின்சாரம் தடைப்பட்டன. இதுதவிர, 2.87 லட்சம் ஏக்கரில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.
சூறாவளி புயல் எதிரொலியாக, அங்குள்ள நான்கு விமான நிலையங்களும் தற்காலிகமாக மூடப்பட்டதுடன், 100க்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
இந்த புயலில் சிக்கி வியட்நாமில் மட்டும் 14 பேர் பலியாகினர்; 176 பேர் காயமடைந்தனர்.
சூறாவளி புயலால் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் அந்நாட்டு ராணுவத்தினர் மற்றும் போலீசார் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையே, யாகி புயல் வலுவிழந்தாலும், வியட்நாமின் வடக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் கனமழை பெய்யும் என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நன்றி dinamalar