அற்ப வாக்கு வங்கி அரசியலுக்காக மாநிலத்தின் சட்டம் ஒழுங்கில் சமரசம் செய்துகொள்ளக்கூடிய ஒரு கட்சியை தேர்ந்தெடுத்ததன் விளைவை இன்று தமிழகம் அனுபவித்து வருகிறது என அண்ணாமலை கூறியுள்ளார்.
கோவை குண்டுவெடிப்பு வழக்கு விசாரணையில் பயங்கரவாத செயல்களுக்கு ஆள் சேர்த்த நான்கு பேரை அடையாளம் கண்டிருப்பதாக என்.ஐ.ஏ. கூறியிருப்பது துரதிர்ஷ்டவசமானது என பாஜக தமிழகத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அண்ணாமலை, “2022 அக்டோபரில் நடந்த கோயம்புத்தூர் தற்கொலை குண்டுவெடிப்பு வழக்கின் விசாரணையின் ஒரு பகுதியாக, மேலும் நான்கு பயங்கரவாதிகள் நமது சமூகத்தில் ஊடுருவி இருப்பதாக தேசிய புலனாய்வு ஏஜென்சி குற்றம் சாட்டி இருப்பது துரதிர்ஷ்டவசமானது” என்று தெரிவித்துள்ளார்.
“திமுக இதனை வெறும் சிலிண்டர் வெடிப்பு என்று முத்திரை குத்துவதில் விடாப்பிடியாக இருக்கலாம். ஆனால், அற்ப வாக்கு வங்கி அரசியலுக்காக மாநிலத்தின் சட்டம் ஒழுங்கில் சமரசம் செய்துகொள்ளக்கூடிய ஒரு கட்சியை தேர்ந்தெடுத்ததன் விளைவை இன்று தமிழகம் அனுபவித்து வருகிறது” என்றும் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.
முன்னதாக, கோவையில் 2022ஆம் ஆண்டு நடைபெற்ற கார் குண்டுவெடிப்பு வழக்கின் ஒரு பகுதியாக ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் ஆட்சேர்ப்பில் ஈடுபட்டதாக நான்கு பேர் மீது தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) செவ்வாய்கிழமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
குற்றம் சாட்டப்பட்ட 4 பேர் ஜமீல் பாஷா, முகமது உசேன், இர்ஷாத் மற்றும் சையத் அப்துர் ரஹ்மான் என அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் கோயம்புத்தூர் கார் வெடிகுண்டு குண்டுவெடிப்பு வழக்கின் விசாரணை அடிப்படையில் இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் தயாரிக்கப்பட்டதாகவும் என்ஐஏ கூறியிருக்கிறது.