பிரிட்டனை உலுக்கிய புலம்பெயர்ந்தோருக்கு எதிரான போராட்டங்கள் மற்றும் கலவரங்கள் நடந்து ஒரு வாரத்திற்குப் பிறகு, நேற்று (07-08-2024) இங்கிலாந்து முழுவதும் உள்ள நகரங்களின் வீதிகளில், அந்தக் கலவரங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆயிரக்கணக்கான ‘இனவெறி எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள்’ அமைதிப் பேரணிகளை நடத்தினர்.
வடக்கு லண்டன், பிரிஸ்டல் மற்றும் நியூகேஸில் உட்பட, புலம்பெயர்ந்தோருக்கு எதிரான போராட்டங்கள் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்பட்ட இடங்களில் இவர்கள் ஒன்றுகூடி பெரும்பாலும் அமைதியான முறையில் ஊர்வலம் சென்றனர்.
“அகதிகள் இங்கு வரவேற்கப்படுகிறார்கள்” என்று கோஷமிட்டவாறு இவர்கள் சென்றனர்.
கடந்த வார நிகழ்வுகளுக்கு பிறகு, மேலும் 100க்கும் மேற்பட்ட ‘புலம்பெயர்ந்தோர் எதிர்ப்பு போராட்டங்கள்’ நடக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், ஆயிரக்கணக்கான காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிகழ்வுகளுக்கெல்லாம் தொடக்கப்புள்ளி, ஜூலை 29 அன்று சவுத்போர்ட்டில் மூன்று சிறுமிகளை கத்தியால் தாக்கி, கொலை செய்த நபர் ‘ஒரு முஸ்லிம் என்றும், அவர் படகு மூலம் பிரிட்டனுக்குள் நுழைந்த அகதி’ என்றும் சமூக ஊடகங்களில் வதந்திகள் பரவியதே ஆகும். இதன் தொடர்ச்சியாக பிரிட்டனில் கலவரங்கள் வெடித்தன.
பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
மசூதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோர் வசிக்கும் விடுதிகள், இந்த கலவரங்களின் போது குறிவைத்து தாக்கப்பட்டன. சில கடைகள் எரிக்கப்பட்டு, சூறையாடப்பட்டன .
புதன்கிழமை (07-08-2024), இங்கிலாந்து முழுவதும் உள்ள வணிக வீதிகளில், மேலும் வன்முறை நிகழ்வுகள் நடக்குமோ என்ற அச்சத்தில் கடை உரிமையாளர்கள் தங்கள் கடைகளை முன்கூட்டியே மூடிவிட்டனர்.
வழக்கறிஞர்களின் நிறுவனங்கள் மற்றும் ஆலோசனை நிறுவனங்களின் மீது தாக்குதல் நடக்கும் என வாட்சாப் குழுக்களில் எச்சரிக்கைகள் பகிரப்பட்டதால், குடியேற்றம் தொடர்பான வழக்குகளை கையாளும் வழக்கறிஞர்கள் வீட்டிலிருந்து வேலை செய்யுமாறு காவல்துறையினரால் அறிவுறுத்தப்பட்டனர்.
ஆனால் நேற்று மாலையில் ஒரு சில கைதுகள் மட்டுமே பதிவாகின. இனவெறி எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இங்கிலாந்தில் அமைதியான முறையில் நடத்தப்பட்டன.
‘இனவெறி எதிர்ப்பாளர்கள்’
லிவர்பூல் நகரில் உள்ள புகலிட சேவை அலுவலகத்திற்கு வெளியே, அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோருக்கு ஆதரவாக நூற்றுக்கணக்கான மக்கள் கூடினர்.
லண்டனில், வால்தம்ஸ்டோ மற்றும் நார்த் ஃபின்ச்லியில் நடந்த இனவெறி எதிர்ப்பு போராட்டங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டதாகவும், ‘பெரிய அசம்பாவிதம் இல்லாமல் பேரணிகள் கடந்து சென்றதாகவும்’ காவல்துறை கூறியது.
சுமார் 1,500 ‘இனவெறி எதிர்ப்பாளர்கள்’ பிரிஸ்டலில் கூடினர். அங்குள்ள வீதிகள் தொழிற்சங்கவாதிகள், பாசிச எதிர்ப்பாளர்கள், கறுப்பின மக்கள் மற்றும் ஆசிய சமூகத்தின் உறுப்பினர்களால் நிரம்பியிருந்தன.
பிரைட்டனில், குடியுரிமை மற்றும் அகதிகள் சட்டத்தில் நிபுணத்துவம் பெற்ற ஒரு வழக்கறிஞர் அலுவலகம் இருப்பதாக நம்பப்பட்ட கட்டிடத்திற்கு வெளியே எட்டு புலம்பெயர்ந்தோர் எதிர்ப்பாளர்கள் கூடினர்.
ஆனால் அவர்களைச் சூழந்த 2,000 ‘இனவெறி எதிர்ப்பாளர்கள்’, அவர்களை அங்கிருந்து விரட்டினர். பின்னர் காவல்துறை அந்த எட்டு பேர் இருந்த இடத்தைச் சூழ்ந்தது.
நியூகேஸில் , சுமார் 1,000 ‘இனவெறி எதிர்ப்பாளர்கள்’, பெரும்பாலும் முஸ்லிம்கள், பீக்கன் மையத்தின் முன் இருந்த நடைபாதையில் கூடினர். அங்குள்ள குடியேற்றச் சேவை வணிக மையம் ஒன்று தாக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டதால் அவர்கள் அங்கு கூடினர்.
சமூக ஊடகங்களில் பரவிய, உறுதிப்படுத்தப்பட்ட காணொளி ஒன்றில், அக்ரிங்டன் நகரின் வீதிகளில் மக்கள் முஸ்லிம்களைக் கட்டித் தழுவி ஆறுதல் கூறியதைக் காண முடிந்தது.
சவுத்தாம்ப்டனில், க்ரோஸ்வெனர் சதுக்கத்தில் கூடிய 300 முதல் 400 பேர், “இனவெறியர்களே திரும்பிச் செல்லுங்கள்” மற்றும் “இங்கு இனவெறிக்கு இடமில்லை” என்று கோஷமிட்டனர் . சுமார் 10 புலம்பெயர்ந்தோர் எதிர்ப்பாளர்களும் அந்தப் பகுதிக்கு வந்தனர், இரு குழுக்களும் காவல்துறையினரால் தனித்தனியாக தடுத்து நிறுத்தப்பட்டனர். ஒருவர் மட்டுமே கைது செய்யப்பட்டார்.
இனவெறி எதிர்ப்பு போராட்டங்களில் கலந்துகொண்ட 20 வயது செவிலியர் நாசர், தனது சக செவிலியர்கள் யாரும் ஆங்கிலேயர் அல்ல என்றும், தனது ஆதரவைக் காட்ட இங்கு வந்துள்ளதாகவும் கூறினார்.
“எனது அப்பா அம்மா பிரிட்டனில் பிறக்கவில்லை, நான் இங்கே பிறந்தேன். எனது பெற்றோர் வாழ இங்கு வந்தார்கள் என்ற காரணத்திற்காக என் மீது தாக்குதல் நடத்த நான் அனுமதிக்கமாட்டேன்” என்று அவர் கூறுகிறார்.
“எங்கள் எதிர்ப்பு அவர்களை பயமுறுத்துகிறது. அதனால்தான் அவர்கள் (கலவரக்காரர்கள்) வரவில்லை” என்று கிளாரா செர்ரா லோபஸ் கூறுகிறார்.
“அமைதியை, அன்பை விரும்புபவர்கள் அதிகமாக இருக்கிறார்கள் என்பதை அவர்கள் (கலவரக்காரர்கள்) தெரிந்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். குடியேற்றம் இல்லாமல் பிரிட்டன் கிடையாது.” என்று கூறினார்
பக்கிங்ஹாம் அரண்மனை கூறியது என்ன?
கடந்த வாரம் நடைபெற்ற கலவரங்கள் தொடர்பாக மொத்தம் 400க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 140க்கும் மேற்பட்டோர் மீது குற்றம் சாட்டப்பட்டு, சிலர் ஏற்கனவே குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.
சவுத்போர்ட் மற்றும் லிவர்பூல் நகரங்களில் வன்முறைச் சீர்கேட்டில் ஈடுபட்டதற்காக மூவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது .
புதன் மாலை பெரும்பாலும் அமைதியாக நடத்தப்பட்ட பேரணிகள், கடந்த வார கலவரங்களின் கைதுகள் மற்றும் தண்டனைகள், இனவெறி வன்முறைக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கும் மக்கள் என பிரிட்டனில் பல விஷயங்கள் நடந்துள்ளன.
ஆனால், இவையெல்லாம் புதிய கலவரங்களைத் தொடங்க வேண்டும் என திட்டமிடும் கும்பல்களிடம் ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதா என்பதே கேள்வி.
குரோய்டன் நகரில் ஒரு நிகழ்வு பதிவாகியுள்ளது என்றும், ஆனால் அது போராட்டங்களுடன் தொடர்புபடுத்தப்படவில்லை என்று லண்டன் மெட்ரோபொலிட்டன் பல்கலைக்கழகம் கூறியது. சுமார் 50 பேர் கூடி, அதிகாரிகள் மீது பொருட்களையும், பாட்டில்களையும் வீசி எறிந்தனர். எட்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
பெல்ஃபாஸ்ட் நகரிலும் காவல்துறையினர் தாக்குதலுக்கு உள்ளாகினர் , அங்கு சில இடங்களுக்கு தீ வைக்கப்பட்டது மற்றும் அதிகாரிகள் மீது பொருட்கள் வீசப்பட்டன.
புதனன்று, துணைப் பிரதம மந்திரி ஏஞ்சலா ரெய்னர், புலம்பெயர்ந்தோர் தங்கியுள்ள விடுதியான ‘ஹாலிடே இன் எக்ஸ்பிரஸ்ஸை’ பார்வையிட்டார். கடந்த ஞாயிற்றுக்கிழமை ரோதர்ஹாமில் உள்ள இந்த விடுதி தாக்கப்பட்டது.
கலவரத்தில் ஈடுபடுபவர்கள் “சட்டத்தின் மூலம் தண்டிக்கப்படுவார்கள்” என்று உறுதியளித்த அவர், “அதிலிருந்து விலகி இருக்குமாறு” சாமானிய மக்களை வலியுறுத்தினார்.
போராட்டக்காரர்களுக்கு உண்மையில் ‘குடியேற்றம்’ குறித்து நியாயமான கவலைகள் உள்ளதா என்று கேட்டதற்கு, “வீதிகளில் இறங்கி, காவல்துறை மீது ஏவுகணைகளை வீசுவது, விடுதிகளைத் தாக்குவது ஆகியவை நியாயமான செயல்கள் அல்ல. இந்த நாட்டில் அத்தகைய அரசியலை நாங்கள் ஊக்குவிக்கவில்லை. அப்படி செய்பவர்களுக்கு இங்கு இடமில்லை. இது மூர்க்கத்தனம்.” என்று கூறினார் ஏஞ்சலா ரெய்னர்.
பக்கிங்ஹாம் அரண்மனையின் கூற்றுப்படி, நாடு முழுவதும் அரங்கேறும் நிகழ்வுகள் குறித்து அரசர் சார்லஸுக்கு தினமும் தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன. ஆனால் உடனடியாக அவர் இதில் தலையிடுவோ அல்லது பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் செல்லவோ மாட்டார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.