கடந்த மாதம் ஐந்தாம் தேதி வரை வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா அங்கிருந்து வெளியேறி இந்தியா வந்து மூன்று வாரங்களுக்கும் மேல் ஆகிறது.
அவரும் அவரது தங்கை ஷேக் ரெஹானாவும் தங்குவதற்கான ஏற்பாடுகளை இந்திய அரசு மிகவும் ரகசியமாகவும், பலத்த பாதுகாப்புடனும் செய்துள்ளது என்பது உண்மைதான். ஆனால் இந்த விஷயத்தில் தனது இறுதி முடிவு என்னவாக இருக்கும் என்பதை இந்தியா இன்னும் முறைப்படி தெரிவிக்கவில்லை.
இதற்கிடையில் ஷேக் ஹசீனாவின் தூதரக பாஸ்போர்ட்டை வங்கதேச அரசு கடந்த வாரம் ரத்து செய்தது. இதனால் அவர் இப்போது இந்தியாவில் தங்கியிருப்பதற்கு சட்ட அடிப்படை என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.
தற்போதைய பின்னணியில் இந்திய அரசின் உயர் அதிகாரிகள் மற்றும் ஆய்வாளர்களுடன் இது குறித்து பிபிசி பேசியது. ஷேக் ஹசீனா விவகாரத்தில் தற்போது இந்தியாவிற்கு மூன்று மாற்று வழிகள் அதாவது பாதைகள் திறந்திருப்பதாக அந்த உரையாடல்கள் சுட்டிக்காட்டுகின்றன.
அந்த மூன்று வழிகள் என்ன?
வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் மற்றொரு நாட்டில் தஞ்சம் புகுவதற்கான ஏற்பாடுகளை செய்வது முதல் வழி. அது அவரின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் இடமாக இருக்க வேண்டும்.
இரண்டாவது வழி, ஷேக் ஹசீனாவுக்கு அரசியல் புகலிடம் அளித்து அவர் இங்கு தங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்வது.
மூன்றாவது வழியைத் தேர்ந்தெடுப்பது இப்போது ஒருவேளை சாத்தியமாக இருக்காது. ஆனால் சில நாட்களுக்குப் பிறகு நிலைமை சீரடைந்தால், ஷேக் ஹசீனா அரசியல் ரீதியாக சொந்த நாடு திரும்புவதற்கு இந்தியா முயற்சி செய்யக்கூடும் என்று இந்திய அதிகாரிகளும், பார்வையாளர்களும் கருதுகின்றனர்.
ஒரு கட்சியாக அல்லது ஒரு அரசியல் சக்தியாகத் திகழும் தகுதியை அவாமி லீக் இன்னும் இழக்கவில்லை என்பதே இதற்குக் காரணம். ஹசீனா தனது நாட்டிற்குத் திரும்பிய பிறகு கட்சியின் தலைமைப்பொறுப்பை ஏற்க முடியும்.
இந்தியாவை பொருத்தவரை முதல் வழியே சிறந்தது என்பதில் சந்தேகமில்லை என்கின்றன தூதாண்மை வட்டாரங்கள் மற்றும் சிந்தனைக் குழுக்கள்.
ஷேக் ஹசீனா இந்தியாவில் தொடர்ந்து இருந்தால், அது இந்தியா- வங்கதேச உறவில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று அவர்கள் கருதுகின்றனர்.
இதனுடன் இந்தியா-வங்கதேசத்திற்கு இடையிலான நாடு திருப்பி அனுப்பும் ஒப்பந்தத்தின் கீழ் ஷேக் ஹசீனாவை நாடு திருப்பி அனுப்புமாறு வங்கதேசம் கோரிக்கை விடுத்தால், ஏதேனும் சில வாதங்களின் அடிப்படையில் இந்தியா அதை நிராகரிக்கும் என்பதும் உறுதி.
நீதி விசாரணையை எதிர்கொள்ளும்பொருட்டு ஷேக் ஹசீனாவை வங்கதேசத்திடம் ஒப்படைப்பது இந்தியாவுக்கு நடைமுறை ரீதியில் சாத்தியம் இல்லை என்று பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
அத்தகைய சூழ்நிலையில் ஷேக் ஹசீனா விவகாரத்தில் முன்னர் குறிப்பிட்ட மூன்று வழிகள் தவிர வேறு எந்த வழியும் இந்தியாவிடம் இல்லை. இந்த மூன்று வழிகளின் எல்லா அம்சங்களையும், அவற்றின் சாத்தியக்கூறுகளையும் இப்போது நாம் பார்ப்போம்.
நட்பு நாட்டிற்கு அனுப்புதல்
வங்கதேசத்தின் நிலைமை குறித்து வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஆகஸ்ட் 6ஆம் தேதி நாடாளுமன்றத்தில் பேசினார். அப்போது ஹசீனா இந்தியாவுக்கு வந்திருப்பதைக் குறிப்பிடும் போது ’ஃபார் தி மொமெண்ட்’ அதாவது ‘இப்போதைக்கு’ என்ற வார்த்தையை பயன்படுத்தினார். அதன்பிறகு இந்த விவகாரத்தில் அரசு தரப்பில் இருந்து எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.
ஷேக் ஹசீனாவை இந்தியா, வங்கதேசம் அல்லாத மூன்றாம் நாட்டிற்கு பத்திரமாக அனுப்பும் முயற்சிகள் இன்னும் நடந்து கொண்டிருப்பதே இதற்குக் காரணம். ஆனால் இதில் உடனடி வெற்றி கிடைக்காவிட்டாலும், அவருக்கு அரசியல் தஞ்சம் அளித்து நீண்ட காலம் இங்கு தங்கவைக்கவும் இந்தியா தயங்காது.
வெளியுறவு அமைச்சக அதிகாரி ஒருவர், “நாங்கள் நல்லது நடக்கும் என்று எதிர்பார்க்கிறோம். மோசமானதற்கும் தயாராகி வருகிறோம்” என்றார்.
ஷேக் ஹசீனா மூன்றாவது நட்பு நாடு சென்று வாழக்கூடிய விஷயத்தில் நல்லபடியாக ஏதாவது நடக்கும் என்ற நம்பிக்கை இந்தியாவுக்கு இருக்கிறது. ஆனால் அது நடக்கவில்லை என்றால், இந்தியா மோசமான நிலைமைக்கு (அதாவது ஷேக் ஹசீனாவை இந்தியாவில் நீண்ட காலம் தங்க வைக்க வேண்டியிருக்கும்) தயாராகும் என்பதே அவருடைய வார்த்தைகளுக்கு அர்த்தம்.
ஷேக் ஹசீனாவின் அமெரிக்கா செல்லும் திட்டத்திற்கு ஆரம்ப கட்டத்திலேயே தடைகள் ஏற்பட்டதை தொடர்ந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ், செளதி அரேபியா மற்றும் ஐரோப்பாவில் உள்ள இரண்டு சிறிய நாடுகளுடன் இந்த விஷயம் குறித்து இந்தியா விவாதித்ததாக பிபிசிக்கு தெரியவந்துள்ளது.
எனினும், இந்த விவகாரத்தில் இதுவரை எந்த வெற்றியும் கிடைக்கவில்லை. இப்போது ஷேக் ஹசீனாவுக்கு புகலிடம் வழங்குவது தொடர்பாக மத்திய கிழக்கின் மற்றொரு செல்வாக்குமிக்க நாடான கத்தாருடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிகிறது.
இதனுடன் ஷேக் ஹசீனா இதுவரை அமெரிக்காவிலோ அல்லது இந்த நாடுகளிலோ அரசியல் தஞ்சம் கோரி எழுத்துப்பூர்வமாக விண்ணப்பிக்கவில்லை என்பதும் உண்மை.
இந்த விவகாரம் தொடர்பான எல்லா பேச்சுவார்த்தைகளையும் அவர் சார்பாக, அவருடைய வாய்மொழி சம்மதத்தின் அடிப்படையில் இந்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
ஷேக் ஹசீனாவுக்கு அரசியல் தஞ்சம் வழங்க ஏதாவது மூன்றாவது நாடு ஒப்புக்கொண்டால், டெல்லியில் இருந்து அந்த நாட்டுக்கு அவர் எந்த பாஸ்போர்ட்டில் செல்வார் என்ற கேள்வியும் இப்போது எழுந்துள்ளது.
“இது பெரிய பிரச்னை இல்லை. வங்கதேச அரசு அவரது பாஸ்போர்ட்டை ரத்து செய்துவிட்டது என்றாலும், இந்தியா வழங்கும் பயண ஆவணம் அல்லது அனுமதிப்பத்திரத்தின் உதவியுடன் அவர் மூன்றாவது நாட்டிற்கு பயணம் செய்யலாம். எடுத்துக்காட்டாக இங்கு ஆயிரக்கணக்கான திபெத்திய அகதிகள் உள்ளனர். அவர்களிடம் கடவுச்சீட்டே இல்லை. அத்தகைய வெளிநாட்டவருக்காக இந்தியா டிராவல் டாக்குமெண்ட் அதாவது பயண ஆவணத்தை வழங்குகிறது. அவர்கள் அதைக் கொண்டு உலகம் முழுவதும் பயணம் செய்கிறார்கள்,” என்று வங்கதேசத்திற்கான முன்னாள் இந்திய தூதர் ரீவா கங்குலி தாஸ் பிபிசியிடம் தெரிவித்தார்.
ஷேக் ஹசீனாவுக்கு ‘எக்ஸ்’ நாடு புகலிடம் அளிக்கத் தயாராக இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். இந்திய அரசு வழங்கும் பயண ஆவணத்தில் சம்பந்தப்பட்ட நாட்டின் விசா பெற்றுக்கொண்டு அவர் எளிதாக அங்கு சென்று வாழலாம்.
“இந்த விதிகள் தனிநபருக்கானது. இதனுடன் ஷேக் ஹசீனாவுக்கு மிகப்பெரிய ‘அரசியல் சுயவிவரம்’ உள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அதனால் அவரது விஷயத்தில் பல விதிமுறைகள் எளிமையாகக்கூடும்,” என்று ரீவா கங்குலி குறிப்பிட்டார்.
அரசியல் புகலிடம்
மிகவும் அவசியமானால் ஷேக் ஹசீனாவுக்கு அரசியல் தஞ்சம் அளித்து அவரை நாட்டிலேயே வைத்திருக்க இந்தியா தயங்காது என்பதற்கான அறிகுறிகளும் டெல்லியில் இருந்து வருகின்றன.
திபெத்திய மதத் தலைவர் தலாய் லாமா, நேபாள மன்னர் திரிபுவன் பீர் விக்ரம் ஷா, ஆப்கானிஸ்தான் அதிபர் முகமது நஜிபுல்லா ஆகியோருக்கு இந்தியா முன்னதாக அரசியல் புகலிடம் அளித்துள்ளது. ஷேக் ஹசீனாவும் 1975 ஆம் ஆண்டு தனது குடும்பத்துடன் இந்தியாவில் வசித்துள்ளார்.
ஆனால் இந்த விருப்பத்தை தேர்வு செய்யும் பட்சத்தில், இந்திய-வங்கதேச இருதரப்பு உறவுகளில் அது என்ன விளைவை ஏற்படுத்தும் என்பதையும் இந்தியா மனதில் கொள்ள வேண்டும்.
1959ஆம் ஆண்டு தலாய் லாமாவுக்கு அரசியல் தஞ்சம் அளித்த பிறகு இந்தியா-சீனா உறவில் ஏற்பட்ட கசப்பு, 65 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதும் காணப்படுவதாக பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
தலாய் லாமா இந்தியாவிலோ அல்லது உலகின் பிற பகுதிகளிலோ எவ்வளவு மதிப்புடன் பார்க்கப்பட்டாலும், இந்தியாவுக்கும்- சீனாவுக்கும் இடையிலான உறவுகளில் அவர் எப்போதும் தொண்டையில் சிக்கிய முள்ளாகவே இருந்து வருகிறார்.
ஷேக் ஹசீனாவுக்கு இந்தியா அரசியல் புகலிடம் அளித்தால், வங்கதேசத்தின் புதிய அரசுடனான உறவை வலுப்படுத்துவதற்கு அது தடையாக அமையும் என்றும் இந்தியாவில் உள்ள பல ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
“ஷேக் ஹசீனாவின் அரசை ஆட்சியில் இருந்து அகற்றிய இயக்கத்திலும் இந்தியாவுக்கு எதிரான அம்சம் இருந்தது. அந்த இயக்கம் ஹசீனாவுக்கு எதிராக நடத்தப்பட்டது. அது இந்தியாவுக்கு எதிரானதாகவும் இருந்தது. அத்தகைய சூழ்நிலையில் ஷேக் ஹசீனாவுக்கு இந்தியா அரசியல் தஞ்சம் கொடுத்தால் வங்கதேசத்திற்கு அது தவறான செய்தியை அனுப்பும். அந்த நாட்டில் இந்தியாவுக்கு எதிரான உணர்வுகள் மேலும் தூண்டப்படும்,” என்று டெல்லியில் உள்ள ஐடிஎஸ்ஏ-வின் (பாதுகாப்பு ஆய்வுகள் மற்றும் பகுப்பாய்வுக்கான நிறுவனம்) மூத்த ஆராய்ச்சியாளர் ஸ்மிருதி பட்நாயக் கூறுகிறார்.
இந்திய அரசும் இதை நன்றாக புரிந்து கொண்டுள்ளது. இருந்த போதிலும் முதல் வழியில் வெற்றி கிடைக்கவில்லையென்றால், இரண்டாவது விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும். இதற்குக் காரணம், தனது நீண்ட கால நண்பரான ஷேக் ஹசீனாவை நெருக்கடியில் தனித்துவிடுவது இந்தியாவுக்கு எந்த சூழ்நிலையிலும் சாத்தியம் இல்லை.
அரசியல் மறுவாழ்வுக்கு உதவி
வங்கதேச அரசியலில் ஷேக் ஹசீனாவின் முக்கியத்துவமும், பங்கும் இன்னும் முடிவடையவில்லை என்றும், தகுந்த நேரம் வரும்போது அவரது அரசியல் மறுவாழ்வுக்கு இந்தியா உதவுவது பொருத்தமானதாக இருக்கும் என்றும் இந்தியாவின் உயர்மட்டக் கொள்கை வகுப்பாளர்களில் ஒரு சக்திவாய்ந்த பிரிவினர் இப்போதும் கருதுகின்றனர்.
அத்தகைய சிந்தனை கொண்ட ஒரு அதிகாரி பிபிசியிடம், “வங்கதேச அரசியலில் ஷேக் ஹசீனா மூன்று முறை (1981, 1996 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளில்) வலுவான மறுபிரவேசம் செய்துள்ளார் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். ஒவ்வொரு முறையும் ஹசீனா மீண்டும் வருவது ’ஒருவேளை சாத்தியமில்லை’ என்று பலர் நினைத்தார்கள். ஆனால் அவர் ஒவ்வொரு முறையும் அதை தவறு என்று நிரூபித்து வருகிறார்,” என்று தெரிவித்தார்.
ஆனால் அப்போது அவர் இளமையாக இருந்தார் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். அடுத்த மாதம் அவர் 77 வயதை நிறைவு செய்கிறார். அவரது மறுபிரவேசத்திற்கு வயது ஒரு தடையாக இருக்காதா?
அதற்கு பதிலளித்த அதிகாரி, “ஒருவேளை வயது, முழுவதுமாக அவருக்கு சாதகமாக இல்லை என்று சொல்லலாம். ஆனால் 84 வயதில் முகமது யூனுஸ் தனது வாழ்நாளில் முதல்முறையாக அரசின் தலைவராக வரும்போது, அவரை விட வயது குறைவானவரான ஷேக் ஹசீனா இதை செய்ய முடியாது என்று நாம் ஏன் நினைக்கவேண்டும்,” என்றார்.
“அடிப்படை விஷயம் என்னவென்றால் ஷேக் ஹசீனா ஒருநாள் வங்கதேசத்திற்குத் திரும்பி அவாமி லீக்கின் தலைமைப் பொறுப்பை ஏற்க முடியும் என்று டெல்லியில் உள்ள ஒரு குழு தீவிரமாக நம்புகிறது. தேவைப்பட்டால் இதற்கென இந்தியா அந்த நாட்டின் இடைக்கால அரசு மற்றும் ராணுவத்தின் மீது அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று அந்தக்குழு ஒரு வாதத்தை முன்வைக்கிறது.” என்று கூறினார்.
வங்கதேசத்தில் அவாமி லீக் மீது எந்த தடையும் விதிக்கப்படவில்லை. நாடு முழுக்க சக்திவாய்ந்த தொடர்புகளை அது கொண்டுள்ளது. அக்கட்சியின் உச்ச தலைவராக ஷேக் ஹசீனா வரும் நாட்களில் வங்கதேசம் திரும்பக்கூடும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
ஷேக் ஹசீனா வங்கதேசத்தில் தனக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்குகளில் நீதிமன்ற விசாரணையை எதிர்கொள்ளக்கூடும். மேலும் அவர் அடுத்த தேர்தலில் போட்டியிட முடியாமலும் போகலாம். ஆனால் அவர் தாயகம் திரும்புவதற்கும் அரசியலுக்கு வருவதற்கும் தடையை ஏற்படுத்துவது கடினம் என்று இந்தக் குழு கருதுகிறது.
அவாமி லீக்கிற்கு புத்துயிர் ஊட்ட இந்தியா உதவ முடியும் என்றாலும், ஷேக் ஹசீனாவுக்கு அரசியல் மறுவாழ்வு கிடைக்கச்செய்வது மிகவும் கடினம் என்று ஒபி ஜிண்டல் குளோபல் பல்கலைக்கழகத்தின் சர்வதேச உறவுகள் பேராசிரியரான ஸ்ரீராதா தத் கருதுகிறார்.
“வரவிருக்கும் சில காலத்திற்கு ஷேக் ஹசீனாவின் தலைமையில் அவாமி லீக் அரசியல் களத்தில் மீண்டும் நிற்கும் என்று நான் நினைக்கவில்லை. அவாமி லீக் நிச்சயமாக ஒரு அரசியல் சக்தியாக இருக்கும். அதை அரசியலில் இருந்து முற்றிலுமாக அகற்றுவது அவ்வளவு எளிது அல்ல. ஆனால் இதற்கு கட்சியில் பெரிய மாற்றங்கள் செய்வதைத் தவிர வேறு வழியில்லை,” என்று அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
”வங்கதேசத்தின் அடுத்த தேர்தலில் ஷேக் ஹசீனாவின் தலைமையில் அவாமி லீக் போட்டியிடுவது நடைமுறையில் சாத்தியமில்லை,” என்கிறார் அவர்.
ஆனால் கடந்த ஐம்பது வருடங்களில் ஷேக் ஹசீனா மீது இந்தியா செய்த அரசியல் முதலீடு காரணமாக டெல்லியின் செல்வாக்கு மிக்க ஒரு பிரிவினர், ’அவரது (ஹசீனா) அரசியல் வாழ்க்கை முடிந்துவிட்டது’ என்பதை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை.
கடவுச்சீட்டு ரத்து செய்யப்பட்ட பிறகு?
ஷேக் ஹசீனா வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்கு வந்தபோது அவரிடம் தூதரக பாஸ்போர்ட் இருந்ததாகவும், அதன் கீழ் குறைந்தபட்சம் 45 நாட்களுக்கு விசா இல்லாமல் அவர் இந்தியாவில் தங்க முடியும் என்றும் கடந்த வாரம் பிபிசி பாங்களா ஒரு செய்தியில் தெரிவித்தது.
ஆனால் அந்த பிபிசி செய்தி வெளியான அடுத்த நாளே, ஷேக் ஹசீனா உட்பட எல்லா அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்களுக்கும் வழங்கப்பட்டிருந்த தூதரக பாஸ்போர்ட்டை வங்கதேச இடைக்கால அரசு ரத்து செய்வதாக அறிவித்தது.
இப்படிப்பட்ட நிலையில் ஷேக் ஹசீனா பாஸ்போர்ட் இல்லாமல் இந்தியாவில் சட்டபூர்வமாக எப்படி தங்கமுடியும் என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது. இந்தக் கேள்விக்கான பதிலைத் தெரிந்துகொள்ள முன்னாள் இந்திய தூதரக அதிகாரி ரஞ்சன் சக்ரவர்த்தியிடம் பேசினோம். அவர் நீண்டகாலமாக வெளியுறவு அமைச்சகத்தில் நெறிமுறைப் பிரிவின் தலைவராக இருந்துள்ளார்.
ஷேக் ஹசீனா இந்தியாவில் தங்கியிருப்பது தொழில்நுட்ப ரீதியாக முற்றிலும் சட்டபூர்வமானது என்று அவர் கூறுகிறார். “விசா தேவைப்படாத காலத்திலோ அல்லது வேறு எந்த சிறப்பு சூழ்நிலையிலோ அவர் இந்தியாவிற்கு வந்திருக்கலாம். அவர் வருகையின்போது அவருடைய பாஸ்போர்ட்டில் வருகை முத்திரை குத்தப்படும். இந்த முத்திரையானது அந்த நேரத்தில் இருந்து, அவரது இந்திய வருகையும் அவர் இங்கு தங்குவதும் சட்டபூர்வமானது என்பதையே குறிக்கிறது. அதன்பிறகு அவரது நாடு பாஸ்போர்ட்டை ரத்து செய்தாலும் அது இந்தியா மீது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது,” என்று அவர் குறிப்பிட்டார்.
பாஸ்போர்ட்டை ரத்து செய்வது குறித்து தூதாண்மை வழிகளில் இந்தியாவுக்குத் தெரிவிக்கப்பட்டாலும், அதன் அடிப்படையில் இந்தியா மாற்று நடவடிக்கைகளை எடுக்க முடியும்.
“இதற்குப் பிறகும் செல்லுபடியாகும் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க ஷேக் ஹசீனாவுக்கு உரிமை உண்டு. வங்கதேசத்தின் புதிய அரசு அவரது விண்ணப்பத்தை ஏற்காவிட்டாலும் அவர் விண்ணப்பித்தவுடனேயே இந்தியாவை பொறுத்தவரை அவர் இங்கு தங்குவது சட்டப்பூர்வமானது என்றே கருதப்படும்,” என்று சக்ரவர்த்தி குறிப்பிட்டார்.