bangla

டாக்கா: வங்கதேச பிரதமர் பதவியில் இருந்து ஷேக் ஹசீனா ராஜினாமா செய்த நிலையில் அங்கு மாணவர்கள் போராட்டம் முடிவுக்கு வந்தது. இந்நிலையில் தான் தற்போது மீண்டும் அங்கு மாணவர்கள் போராட்டம் வெடித்துள்ளது. இந்த முறை மாணவர்கள் வங்கதேச நாட்டின் அதிபர் முகமது ஷஹாபுதீனை ராஜினாமா செய்யும்படி போராட்டத்தை தொடங்கி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் இருந்து பிரிந்து தான் வங்கதேசம் தனி நாடாக உருவானது. இந்த பிரிவினையின்போது பாகிஸ்தானில் இருந்து சுதந்திரம் பெறவும், வங்கதேசத்தை தனி நாடாக்கவும் போராடி உயிர் தியாகம் செய்த தியாகிகளின் வாரிசுகளுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு இருந்தது. இதற்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டம் விஸ்வரூபமெடுத்ததால் ஷேக் ஹசீனா தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு நம் நாட்டில் தஞ்சமடைந்துள்ளார். உயிருக்கு பயந்து ஷேக் ஹசீனா கடந்த ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி தனது சகோதரி ரெஹானாவுடன் நம் நாட்டுக்கு வந்து தங்கியுள்ளார். மனிதாபிமான அடிப்படையிலும், நம் நாட்டுடன் நீண்ட காலம் நட்பாக இருந்ததன் காரணமாகவும் ஷேக் ஹசீனாவுக்கு மத்திய அரசு அடைக்கலம் கொடுத்துள்ளது.

இதையடுத்து மாணவர்கள் போராட்டம் கைவிடப்பட்டது. புதிதாக இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராக அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் பொறுப்பேற்றார். அவர் தலைமையில் தற்போது வங்கதேசம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் வங்கேதசத்தில் தற்போது மீண்டும் மாணவர்கள் போராட்டம் என்பது வெடித்துள்ளது.

இந்த போராட்டம் என்பது வங்கதேச அதிபர் முகமது ஷஹாபுதீனுக்கு எதிராக வெடித்துள்ளது. அதாவது முகமது ஷஹாபுதீன், சமீபத்தில் அளித்த பேட்டியில் ‛‛ஷேக் ஹசீனா ராஜினாமா செய்ததற்கான கடிதம் உள்ளிட்ட ஆவணங்கள் என்னிடம் இல்லை. நாட்டில் நிலவிய நெருக்கடி நிலையால் அவர் அப்படியே சென்றிருக்கலாம்’’ என்று கூறினார். இதன்மூலம் ஷேக் ஹசீனா ராஜினாமா விஷயத்தில் புதிய குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இத்தகைய சூழலில் தான் அதிபர் முகமது ஷஹாபுதீனை எதிர்த்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அவர் உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த ஷேக் ஹசீனாவின் ராஜினாமா கடிதம் இல்லை என்பதாக கூறினர். மேலும் நேற்று பல்வேறு பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் ஒன்றாக திரண்டு அதிபர் மாளிகையை முற்றுகையிட முயன்றனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும், மாணவர்கள் இடையேயும் பிரச்சனை ஏற்பட்டது.

மேலும் ராணுவத்தினர் இணைந்து போராட்டக்காரர்களை கட்டுப்படுத்தினர். இதையடுத்த கண்ணீர் புகை குண்டுகளை வெடிக்க செய்து போலீசார் போராட்டக்காரர்களை விரட்டியடித்தனர். அதோடு துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் 3 பேர் காயமடைந்தனர். அதன்பிறகு ஒருவழியாக போராட்டம் என்பது முடிவுக்கு வந்தது.இருப்பினும் மாணவர்கள் அடுத்தடுத்து போராட்டம் நடத்தலாம் என்ற அச்சம் உள்ளது. இதனால் தற்போது வங்கதேசத்தில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

Nandri oneindia

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *