gaza

ஹெஸ்பொலாவின் தகவல் தொடர்பு கட்டமைப்பு மீதான தாக்குதலை தொடர்ந்து லெபனான் மீது வான்வழித் தாக்குதலை நடத்தி வருகிறது இஸ்ரேல். இந்த தாக்குதலில் 492 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு சுகாதாரத்துறை கூறுகிறது. கடந்த 20 ஆண்டு கால மோதல்களில், ஒரே நாளில் இத்தனை பேர் கொல்லப்பட்டது இதுவே முதல் முறை என்று லெபனான் கூறுகிறது.

2006-ஆம் ஆண்டு போருக்குப் பிறகு ஹெஸ்பொலா உருவாக்கியுள்ள ராணுவ கட்டமைப்புகளை குறி வைத்து தாக்குதல் நடத்தி வருவதாக இஸ்ரேல் ராணுவம் கூறுகிறது. இந்த தாக்குதல் காரணமாக லெபனானில் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு பாதுகாப்பான இடம் தேடி இடம்பெயர்ந்துள்ளனர்.

அதேநேரத்தில், ஹெஸ்பொலா 200-க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை வடக்கு இஸ்ரேல் மீது வீசி தாக்குதல் நடத்தியுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது. இதில் 2 பேர் காயமடைந்தனர்.

முழு அளவிலான போர் வெடிக்கும் சூழல் அதிகரித்து வரும் சூழலில், இரு தரப்பும் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று உலக நாடுகள் வலியுறுத்தியுள்ளன.

இஸ்ரேல் தாக்குதலில் பலியான 492 பேரில் 35 பேர் குழந்தைகள், 58 பேர் பெண்கள் என்றும், 1,645 பேர் காயமடைந்திருப்பதாகவும் லெபனான் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களில் எத்தனை பேர் பொதுமக்கள் என்பது குறித்து எந்த விவரத்தையும் அது வெளியிடவில்லை.

சிஎன்என் ஊடகத்திடம் பேசிய ஐ.நா. தலைவர் அன்டோனியோ குட்டெரெஸ், “லெபனான் மற்றொரு காஸாவாக மாற சாத்தியம் இருப்பதாக அவர் அச்சம் தெரிவித்துள்ளார்.

லெபனானில் உள்ள ஐநாவின் சிறப்பு ஒருங்கிணைப்பாளர் ஜீனைன் ஹென்னிஸ்-பிளாஷேர்ட் தனது எக்ஸ் பக்கத்தில், மத்திய கிழக்கு தற்போது `பேரழிவின் விளிம்பில்’ இருப்பதாக பதிவிட்டுள்ளார்.

“இரு தரப்பிலும் பாதுகாப்பான சூழலை உருவாக்கும் எந்த ராணுவ தீர்வும் தற்போதைக்கு இல்லை” என்று அவர் ஞாயிற்றுக்கிழமை பதிவிட்டுள்ளார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், “ஒரு பெரியளவிலான போர் வெடிக்காமல் இருக்க தன்னால் முடிந்த அனைத்தையும் அமெரிக்கா செய்யும்” என்றார்.

ஐரோப்பிய ஒன்றியம் இது “மிகவும் கவலைக்குரியது” என்று கூறியது.

பிரிட்டன் வெளியுறவு செயலாளர் டேவிட் லாம்மி “உடனடியான போர் நிறுத்தத்திற்கு” அழைப்பு விடுத்தார்.

இந்த மோதல் ஒரு முழு அளவிலான போராக வெடிக்கலாம் என்ற அச்சம் அதிகரித்துள்ள நிலையில், தற்போது லெபனானில் உள்ள தனது குடிமக்களுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை புதிய பயண ஆலோசனையை வழங்கியது.

பெய்ரூட்டில் உள்ள அமெரிக்க தூதரகம், “வணிக விமான சேவைகள் இருக்கும் போதே லெபனானை விட்டு வெளியேற வேண்டும்” என்று தனது குடிமக்களை வலியுறுத்தியுள்ளது.

அண்டை நாடான ஜோர்டானின் வெளியுறவு அமைச்சகமும் அதன் குடிமக்களுக்கு இதேபோன்ற ஆலோசனையை வழங்கியுள்ளது. லெபனானில் உள்ள தனது குடிமக்கள் விரைவில் வெளியேறுமாறு அது வலியுறுத்தியுள்ளது.

இந்த தாக்குதல் ஏன் தொடங்கியது, இஸ்ரேல் இது குறித்து என்ன கூறுகிறது, லெபனான் – இஸ்ரேல் இடையே அடுத்து என்ன நடக்கும், மத்திய கிழக்கு பிராந்திய அரசியலில் ஏதேனும் மாற்றங்கள் உருவாகுமா என்று அறிந்து கொள்ள இந்த காணொளியை காணவும்.

நன்றி bbc

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *