ladakh

புதுடெல்லி: லடாக்கில் 5 புதிய மாவட்டங்களை உருவாக்கியுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று (திங்கள்கிழமை) தனது எக்ஸ் பக்கத்தில், “லடாக்கில் புதிதாக ஐந்து மாவட்டங்கள் உருவாக்கப்படுகின்றன. புதிய மாவட்டங்களை உருவாக்குவதன் மூலம் மக்களுக்கான நலத்திட்டங்கள் அவர்களிடம் எளிதில் சென்றுசேரும். நல்நிர்வாகத்தை ஒவ்வொரு மூலை முடுக்கும் கொண்டு செல்லவே இந்த முயற்சி. வளர்ச்சியடைந்த, வளமான லடாக்கை உருவாக்க வேண்டும் என்ற பிரதமர் மோடியின் பார்வையை ஒட்டி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜன்ஸ்கர், ட்ராஸ், ஷாம், நுப்ரா, சங்தங் ஆகிய 5 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படுகின்றன. லடாக் மக்களுக்கு பல்வேறு வாய்ப்புகளையும் ஏற்படுத்தித் தருவதில் மோடி அரசு உறுதியாக இருக்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.

இனி 7 மாவட்டங்கள்.. கடந்த 2019 ஆம் ஆண்டு வரை ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஒரு பகுதியாகவே லடாக் இருந்தது. ஆனால் அந்த ஆண்டு ஜம்மு – காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது. கூடவே ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர், லடாக் என்று இரு வேறு யூனியன் பிரதேசங்களாக அறிவித்தது. அதில் லடாக் யூனியன் பிரதேசத்தில் இதுவரை இரண்டு மாவட்டங்கள் மட்டுமே இருந்தன. அவை லே, கார்கில் மாவட்டங்கள். அவற்றை சுயாதீன மாவட்ட கவுன்சில்கள் நிர்வகித்து வருகின்றன. இந்நிலையில், ஜன்ஸ்கர், ட்ராஸ், ஷாம், நுப்ரா, சங்தங் ஆகிய 5 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இனி லடாக்கில் மொத்தம் 7 மாவட்டங்கள் இருக்கும்.

பைக்கர்கள் கொண்டாடும் பகுதி.. லடாக் இந்தியாவின் மிக முக்கியமான சுற்றுலா தலங்களில் ஒன்றாக இருக்கிறது. குறிப்பாக இருசக்கர வாகனத்தில் நெடுந்தூரம் பயணிக்கும் பைக்கர்ஸின் சொர்க்கமாக லடாக் அறியப்படுகிறது. ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பைக்கர்ஸ் லடாக் வருகின்றனர். உலகின் மிக உயரமான சாலையில் பயணிக்க வேண்டும் என்ற உணர்வைப் பெறவே அவர்கள் அந்தப் பயணத்தை மேற்கொள்கின்றனர்.

லடாக் நாட்டின் பாதுகாப்பு ரீதியாகவும் மிக முக்கியமான பகுதியாகத் திகழ்கிறது. அண்மையில் லடாக்கின் கிழக்குப் பகுதியில் சீன ராணுவம் சில ஆக்கிரமிப்புகளை மேற்கொண்டது. அதனால் இந்தப் பகுதி மிக முக்கியமான பகுதியாக இருக்கிறது. இந்நிலையில் லடாக்கில் 5 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது கவனம் பெறுகிறது.

நன்றி hindutamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *