கொழும்பு: பரபரப்பான முதல் ஒருநாள் போட்டி ‘டை’ ஆனது. இந்தியா சார்பில் துவக்கத்தில் ரோகித் சர்மா அரைசதம் விளாசிய போதும், கடைசி கட்டத்தில் பேட்டிங் எடுபடவில்லை. இலங்கை அணி அபாரமாக பந்துவீசியது.
இலங்கை சென்றுள்ள இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி கொழும்புவில் நடந்தது.
கருப்பு பட்டை:‘டாஸ்’ வென்ற இலங்கை கேப்டன் சரித் அசலங்கா ‘பேட்டிங்’ தேர்வு செய்தார். மறைந்த கிரிக்கெட் ஜாம்பவான் அன்ஷுமன் கெய்க்வாட்டிற்கு அஞ்சலி செலுத்தும்விதமாக, இந்திய வீரர்கள் கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடினர்.
இலங்கை அணி துவக்கத்தில் தடுமாறியது. அவிஷ்கா பெர்ணான்டோ(1), குசல் மெண்டிஸ்(14) விரைவில் வெளியேற, 14 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 50 ரன் எடுத்து தவித்தது. அக்சர் படேல், அர்ஷ்தீப் மிரட்ட, தொடர்ந்து விக்கெட்டுகள் சரிந்தன. சமரவிக்ரமா (8), அசலங்கா (14) நிலைக்கவில்லை. அரைசதம் கடந்த நிசங்கா(56) அவுட்டாக, 27 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 101 ரன் எடுத்தது.
வெல்லாலகே அரைசதம்: பின் வெல்லாலகே பொறுப்பாக ஆடினார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த லியனாகே, சுப்மன் பந்தை சிக்சருக்கு அனுப்பினார். லியனாகே 20 ரன் எடுத்தார். கடைசி கட்டத்தில் கைகொடுத்த ஹசரங்கா, அக்சர் படேல், குல்தீப் ‘சுழலில்’ சிக்சர் அடித்தார். ஹசரங்கா 24 ரன்னுக்கு வெளியேறினார். துாணாக நின்று ஆடிய வெல்லாலகே அவ்வப்போது சிக்சர், பவுண்டரி அடிக்க, ஸ்கோர் 200 ரன்னை கடந்தது. இலங்கை அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 230 ரன் எடுத்தது. வெல்லாலகே (67 ரன், 7 பவுண்டரி, 2 சிக்சர்), ஷிராஸ்(1) அவுட்டாகாமல் இருந்தனர்.
இந்தியா சார்பில் அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங் தலா இரு விக்கெட் வீழ்த்தினர்.
கலக்கல் துவக்கம்:சுலப இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா ‘சூப்பர்’ துவக்கம் தந்தார். பெர்ணான்டோ வீசிய முதல் ஓவரில் ஒரு சிக்சர், பவுண்டரி அடித்தார். ஷிராஸ் ஓவரில் 2 பவுண்டரி, 1 சிக்சர் விளாசினார். தனஞ்சயா பந்தை சிக்சருக்கு பறக்கவிட்ட ரோகித், 33 பந்தில் அரைசதம் எட்டினார். சுப்மன் கில், 16 ரன்னுக்கு நடையை கட்டினார்.
விக்கெட் சரிவு: சிறிது நேரத்தில் வெல்லாலகே பந்தில் ரோகித் (58 ரன், 7 பவுண்டரி, 3 சிக்சர்) அவுட்டானார். வாஷிங்டன் சுந்தர் (5), கோலி (24), ஸ்ரேயாஸ் (23) அவசரப்பட்டு அவுட்டாக, இந்திய அணி 25 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 132 ரன் எடுத்து தவித்தது.
பின் லோகேஷ் ராகுல்(31), அக்சர் படேல்(33) சேர்ந்து அணியை மீட்க போராடினர். அசலங்கா ஓவரில் ஷிவம் துபே (25), அர்ஷ்தீப் சிங் (0) அடுத்தடுத்து அவுட்டாக, வெற்றி வாய்ப்பு நழுவியது. இந்திய அணி 47.5 ஓவரில் 230 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இரு அணிகளும் ஒரே ஸ்கோர் எடுத்ததால், போட்டி ‘டை’ ஆனது.
இலங்கை சார்பில் ஹசரங்கா, அசலங்கா தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
நன்றி dinamalar