isrel

ரஷ்யாவில் தன்னுடைய ஊடுருவலை யுக்ரேன் ராணுவத்தினர் தொடரும் சூழலில் ரஷ்யாவின் மேற்கு குர்ஸ்க் பிராந்தியத்தில் ராணுவ நிர்வாக மையத்தை அமைத்துள்ளதாக தெரிவித்துள்ளார் யுக்ரேனின் மூத்த ராணுவ தளபதி.

அந்த பிராந்தியத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கை நிலைநாட்டவும் அங்குள்ள மக்களின் உடனடி தேவைகளை பூர்த்தி செய்யவும் இந்த அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது என்று ராணுவ தளபதி ஒலெக்ஸாண்டர் சிர்ஸ்கி தெரிவித்தார்.

யுக்ரேன் அதிபர் ஜெலென்ஸ்கி தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் ராணுவ தளபதி சிர்ஸ்கி, “யுக்ரேன் கட்டுப்பாட்டில் உள்ள ரஷ்ய பிராந்தியத்தில் அலுவலகம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது,” என்று கூறுவதை சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோ ஒன்றில் காண முடிந்தது.

அந்த பிராந்தியத்தில் உள்ள மக்களை “பாதுகாக்க” ரஷ்யா தன்னுடைய படைகளை அனுப்பும் என்று ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சர் அந்த்ரேய் பெலவ்சோவ் கூறியுள்ளார்.

அமைதியை நிலை நாட்டவே இந்த படையெடுப்பு – யுக்ரேன்

வியாழக்கிழமை அன்று, யுக்ரேனிய படை ரஷ்ய பிராந்தியத்தில் முன்னேறி வருவதாக யுக்ரேன் ராணுவம் அறிவித்தது.

குர்ஸ்க் பிராந்தியத்தில் யுக்ரேனிய துருப்புகள் 35 கிலோமீட்டர் தூரம் வரை உள்ளே சென்றுள்ளனர் என்றும் 82 குடியிருப்பு பகுதிகள் உட்பட 1,150 சதுர கிலோ மீட்டர் பரப்பை ஆக்கிரமித்துள்ளனர் என்றும் தளபதி சிர்ஸ்கி கூறுகிறார்.

2022ம் ஆண்டு ரஷ்யாவின் படையெடுப்புக்கு பிறகு, கடந்த 10 நாட்களாக யுக்ரேனிய படைகள் ரஷ்யாவில் முன்னேறி வருகிறது.

ஆனால் யுக்ரேன் இது குறித்து பேசும் போது, ரஷ்ய பிராந்தியத்தை ஆக்கிரமிக்க ஆர்வம் ஏதும் காட்டவில்லை என்கிறது.

ஆகஸ்ட் 14ம் தேதி அன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய யுக்ரேனின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளார் ஹெயோரி துகேய், இந்த பதில் தாக்குதல் அமைதியை நிலைநாட்ட ரஷ்யாவை ஒப்புக்கொள்ள வைப்பதற்கான முயற்சியாகும் என்றார்.

ரஷ்யா கூறுவது என்ன?

யுக்ரேன் ஊடுருவிய பகுதிகளில் வாழும் மக்கள் மற்றும் அங்குள்ள உள்கட்டமைப்பை பாதுகாக்க கூடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கின்றனர் ரஷ்ய அதிகாரிகள்.

ரஷ்ய பாதுகாப்பு துறையின் டெலிகிராம் சேனலில் வெளியான வீடியோ ஒன்றின் படி, குர்ஸ்க் பிராந்தியத்திற்கு அருகே உள்ள பெல்கோரோட் பிராந்தியத்தில் உள்ள துருப்புகளை சரியாக நிர்வகிப்பது போன்ற நடவடிக்கைகளும் இந்த பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஒன்றாக உள்ளது.

பெல்கோரோட் மட்டுமின்றி யுக்ரேனின் எல்லையில் அமைந்துள்ள குர்ஸ்க் மற்றும் ப்ரையான்ஸ்க் பிராந்தியத்திலும் இதே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இண்டெர்ஃபாக்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது.

பெல்கோரோட் பிராந்தியத்தில் அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளது ரஷ்யா. திங்கள் கிழமை அன்று 11 ஆயிரம் நபர்கள் அந்த பிராந்தியத்தில் அமைந்திருக்கும் க்ரஸ்னயா யருகா பகுதியில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளது ரஷ்யாவின் அரசு ஊடகமான டாஸ்.

இதற்கு மத்தியில், யுக்ரேன் ஆக்கிரமித்த சில பகுதிகளை ரஷ்யா மீட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ரஷ்ய பாதுகாப்பு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குர்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள க்ருபெட்ஸ் குடியிருப்பை மீட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

பிரிட்டனின் ஆயுதங்களை பயன்படுத்தும் யுக்ரேன்

யுக்ரேனுக்கு பிரிட்டன் வழங்கிய பீரங்கி வாகனங்களை யுக்ரேன் இந்த ஊடுருவலுக்கு பயன்படுத்தியுள்ளதை பிபிசியிடம் பிரிட்டன் உறுதி செய்தது.

பிரிட்டனின் பாதுகாப்பு துறை அமைச்சகம், பிரிட்டனின் எந்த போர் ஆயுதம் யுக்ரேன் படையால் பயன்படுத்தப்பட்டது என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனால், “ரஷ்யாவின் சட்டத்திற்கு புறம்பான தாக்குதலுக்கு எதிராக தங்களை தற்காத்து கொள்ள,” பிரிட்டன் வழங்கிய ராணுவ ஆயுதங்களை பயன்படுத்திக் கொள்ள யுக்ரேனுக்கு முழுமையான உரிமை உள்ளது என்று கூறியது பாதுகாப்பு அமைச்சகம்.

யுக்ரேனுக்கு நவீன போர் ஆயுதங்களை வழங்கிய முதன்மையான நாடுகளில் பிரிட்டனும் ஒன்று. 14-சேலஞ்சர் வகை பீரங்கி வண்டிகள் இரண்டை கடந்த ஆண்டு பிரிட்டன் யுக்ரேனுக்கு வழங்கியது. ஆனால் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பில் உள்ள தங்களின் பகுதிகளை மீட்கவே இவைகள் வழங்கப்பட்டன.

இந்த கொள்கையில் மாற்றம் ஏதும் இல்லை என்று பிரிட்டனின் பாதுகாப்புத்துறை அறிவித்துள்ளது.

அமெரிக்கா மற்றும் ஜெர்மனி வழங்கிய ஆயுதங்களையும் இந்த ஊடுருவலின் போது யுக்ரேன் பயன்படுத்தியுள்ளது.

ஆனால் எந்த நாடுகளும், ரஷ்யா மீது படையெடுக்க இந்த ஆயுதங்களை பயன்படுத்தியதற்கு எதிராக கருத்து தெரிவிக்கவில்லை. இந்த படையெடுப்பு ரகசியமாக நடத்தப்பட்டிருக்கின்ற நிலையில், யுக்ரேனின் நடவடிக்கை குறித்து முன்கூட்டியே சில நாடுகளுக்கு தெரிந்திருக்கலாம்.

அடுத்து என்ன நடக்கும் என்று மேற்கத்திய நாடுகள் கவலையுடன் இருக்கின்றன. யுக்ரைன் கணிசமான இழப்புகளைச் சந்தித்து, இன்னும் ஆயுதங்களை அதிகமாகக் கேட்டு மீண்டும் வருவது மட்டுமின்றி, இதற்கு ரஷ்யா எப்படி பதிலளிக்கும் என்ற வகையிலும் சிலர் இந்த சூழலைக் கண்டு வருத்தம் அடைந்துள்ளனர்.

தங்களுடைய பிராந்தியத்தில் நடைபெற்ற தாக்குதலின் பின்னணியில் மேற்கத்திய நாடுகள் இருக்கின்றன என்று ஏற்கனவே ரஷ்யா குற்றம் சாட்டுகிறது. உண்மை என்னவென்றால், இந்த குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களாக மேற்கத்திய நாடுகள் வழங்கிய ஆயுதங்களை களத்தில் பார்க்க முடிகிறது.

அணு ஆயுதங்களை கொண்ட நாடுகளுக்கிடையே பதற்றம் அதிகரித்தல் என்பது எப்போதும் கவலைக்குரியதாக இருக்கும். மேலும் ரஷ்யா எப்போதாவது தனது அணு ஆயுதத்தை காட்டி பயமுறுத்தலில் ஈடுபடுவது குறித்து கவலைப்படப்போவதில்லை.

மேற்கத்திய நாடுகள், யுக்ரேனுக்கு ஆயுதங்களை வழங்கக் கூடாது என்று ரஷ்யா எச்சரித்தது. ஆனால் அந்த எச்சரிக்கை முழுவதுமாக கண்டுகொள்ளப்படவில்லை.

ஆனால் தற்போது வரை ஒரு தடை மட்டும் தொடர்கிறது. தொலைதூரத்தை இலக்காக கொண்ட ஏவுகணைகளை பயன்படுத்தி ரஷ்யா மீது தாக்குதல் நடத்த எந்த ஒரு மேற்கத்திய நாடும் யுக்ரேனுக்கு பச்சைக் கொடியை அசைக்கவில்லை.

பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இந்த ஆயுதங்களையும் வழங்கியுள்ளது. ஆனால் அது, 2014ம் ஆண்டு சட்டத்திற்கு புறமாக ரஷ்யா தன்னுடன் இணைத்துக் கொண்ட க்ரிமியா உள்ளிட்ட பிராந்தியம் உட்பட யுக்ரேனுக்குள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்ற நிபந்தனையுடன் அவை வழங்கப்பட்டன.

அந்த நிபந்தனையை நீக்க வேண்டும் என்று யுக்ரேன் அதிபர் வேண்டுகோளை முன்வைத்தார்.

நன்றி BBC

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *