ஹரிஷ் கல்யாண், அட்டக்கத்தி தினேஷ், சுவஸ்விகா, சஞ்சனா உள்ளிட்டோரின் நடிப்பில், தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள லப்பர் பந்து திரைப்படம் செப்டம்பர் 20-ஆம் தேதி அன்று வெளியாகியுள்ளது.
ஷான் ரோல்டன் இந்த படத்திற்கு இசை அமைத்துள்ளார். தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.
ஏற்கனவே கனா, எஃப். ஐ.ஆர் போன்ற படங்களில் இணை இயக்குநராகவும், நெஞ்சுக்கு நீதி படத்தில் வசனகர்த்தாவாகவும் பணியாற்றிய தமிழரசன் பச்சமுத்து இயக்குநராக இந்த படத்தில் அறிமுகமாகிறார்.
கிராமங்களில் இருக்கும் சாதிய, பாலின பாகுபாடுகளை மையமாக்கி கிராமப்புறம் ஒன்றில் செயல்பட்டு வரும் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே நடைபெறும் கதையாக படமாக்கப்பட்டுள்ளது லப்பர் பந்து.
இந்த படம் எப்படி இருக்கிறது? நடிகர்கள் அவர்களின் சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்களா? இசை எப்படி இருக்கிறது? ஊடகங்கள் கூறுவது என்ன?
கதை என்ன?
யாராலும் தோற்கடிக்க இயலாத உள்ளூர் பேட்ஸ்மேனாக வலம் வருகிறார் தினேஷ். கெத்து (எ) பூமாலை என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அவர் நடுத்தர வயதுக்காரராக இந்த படத்தில் நடித்துள்ளார்.
அன்பு என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள ஹரிஷ் கல்யாண் பூமாலைக்கு சவால் விடுக்கும் ஒரு பந்துவீச்சாளராக நடித்துள்ளார். மைதானத்தில் இவர்கள் இருவருக்கும் இடையே உள்ள போட்டி மனப்பான்மை, அன்புக்கும், பூமாலையின் மகளுக்கும் இடையேயான காதலை எப்படியெல்லாம் பாடாய்படுத்துகிறது என்பதுதான் இந்த படத்தின் கதை.
இந்த ஆண்டு வெளியாகிய ப்ளூ ஸ்டார் படத்தோடு இப்படத்தை ஒப்பிட்டிருக்கும் தி ஹிந்துவின் ஆங்கில திரை விமர்சனத்தில், “மனிதர்களின் உறவுகளில் உள்ள சிக்கலும், போட்டி மனப்பான்மையும் எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் என லப்பர் பந்து காட்டியுள்ளது. இந்த இரண்டு படங்களுமே நம் சமூகத்தில் வேரூன்றி இருக்கும் சாதிய பாகுபாட்டை வெளிச்சப்படுத்தியுள்ளது,” என்று கூறியுள்ளது.
“இந்த படத்தின் சிறந்த பாகமே, எந்த ஒரு கதாபாத்திரத்தையும் வில்லனாக சித்தரிக்கவில்லை. படம் அவர்களின் சுற்றுச்சூழலையும் நிலையையும் விளக்குகிறது,” என்றும் விமர்சித்துள்ளது தி ஹிந்து.
நடிப்பும் இயக்கமும்
”பார்க்கிங் பட வெற்றியின் மூலம் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்த ஹரிஷ் கல்யாண், கதைத் தேர்வில் தேர்ந்தவர் என்பதை இந்த படத்தில் நிரூபித்திருக்கிறார். ஈகோவில் சீறிப்பாய்வதிலும், நகைச்சுவைக் காட்சிகளில் நெளிவதிலும் ஹீரோவாக மிளிர்கிறார்” என்று ஹரிஷின் நடிப்பு குறித்து குறிப்பிட்டுள்ளது தினமணி.
இளமையான மற்றும் வயதான தோற்றத்தில் வரும் தினேஷின் கிரிக்கெட் காட்சிகள் கைதட்டி ரசிக்கும்படியாக உருவாக்கப்பட்டுள்ளது. மனைவிக்கு பயப்படுவதிலும், காதலோடு கொஞ்சுவதிலும், சோகத்தில் அழுவதிலும் தினேஷ் மனதில் நின்றுவிடுகிறார் என்றும் குறிப்பிட்டுள்ளது தினமணி.
கெத்துவின் மனைவியாக மிரட்டியிருக்கும் சுவஸ்திகா விஜய் நடிப்பில் மிரட்டியிருக்கிறார் என்றும் தினமணி கூறியுள்ளது.
கிரிக்கெட், ரொமான்ஸ், ஆண் போட்டி மனப்பான்மை, சாதிய படிநிலை போன்றவற்றை சரியான விகிதத்தில் தந்து கெத்து என்ற பூமாலை மற்றும் அன்பு என்ற இரண்டு கிரிக்கெட் வீரர்களின் கதையை வழங்கியுள்ளார் இயக்குநர் தமிழரசன் என்று விமர்சித்துள்ளது இந்தியன் எக்ஸ்பிரஸ்.
சாதிய பாகுபாட்டை அடிப்படையாக கொண்டு படம் அமைக்கப்பட்டாலும் அது திரைக்கதையை மீறி செல்லாமல் படமாக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளது இந்தியன் எக்ஸ்பிரஸ்.
அசத்திய இதர தொழில்நுட்பக் கலைஞர்கள்’
“தொழில்நுட்ப ரீதியிலும் மிகவும் சிறப்பான படம் என்ற பெருமிதத்தை லப்பர் பந்து அடைந்து கொள்ளலாம். ஒளிப்பதிவாளர் தினேஷ் புருஷோத்தமன், எடிட்டர் மதன், இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் நன்றாக பங்களித்துள்ளனர். படத்தின் கதைக்கு ஏற்ற வகையில் பாடல்கள் இடம் பெற்றுள்ளன. பின்னணி இசை எந்த இடத்தில் பின்வாங்க வேண்டும் என்றும், எங்கே முழு வீச்சில் செல்ல வேண்டும் என்பதையும் அறிந்து இசை அமைத்துள்ளார்,” என்று கூறியுள்ளது இந்தியன் எக்ஸ்பிரஸ்.
”படத்தில் பல விசயங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் போது எரிச்சலடைய வைக்கும் சில காட்சிகள் படத்தை தொய்வடைய வைக்கிறது.” என்கிறது இந்தியன் எக்ஸ்பிரஸ்.
”வெளிர் நிறத்தில் இருக்கும் நபர்களை இந்த மண்ணில் வாழும் மக்களைப் போன்று மாற்ற முயற்சி செய்திருக்கும் ‘ப்ரவுன் ஃபேசிங்’ மிகப்பெரிய குறைபாடு” என்று குறிப்பிட்டுள்ள இந்தியன் எக்ஸ்பிரஸ், “ஹரிஷ் கல்யாண் மற்றும் சஞ்சனாவின் நம்பத்தகுந்த நடிப்பினால் நாம் அதனை கடந்து போகின்றோம். இருப்பினும் இது தமிழ் சினிமாவின் மிகப்பெரிய பிரச்னையாக இன்னும் நீடித்து வருகிறது,” என்று குறிப்பிட்டுள்ளது.